சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்

கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்

பெரும்பாலான முதியவர்கள் உடல்நலப் பிரச்னைகளோடு மனநலம் சார்ந்த பிரச்னைகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். பிள்ளைகளின் புறக்கணிப்பு, அவமதிப்பு என வெளியில் கொட்டமுடியாத பல துயரங்களை அவர்கள் தங்களுக்குள் புதைத்துக்கொண்டே வாழ்கிறார்கள்.

ஒரு பக்கம் தனிமையும் வெறுமையும்... இன்னொரு பக்கம் வருத்தும் உடல்நலக் கோளாறுகள்... இந்தச்சூழலில் ஒரு முதியோர் நல மருத்துவரின் பணி என்பது, வெறும் நோய்க்கு சிகிச்சையளிப்பதாக மட்டுமே இருக்கமுடியாது. ஆற்றுப்படுத்துபவராக, அன்பையும் நம்பிக்கையையும் தந்து முதியோரை அரவணைப்பவராகவும் இருக்க வேண்டும். நெடுங்காலம் முதியோர் நல மருத்துவ சேவையிலிருக்கும் டாக்டர் நடராஜன், அந்தப்பணியின் ஓர் அங்கமாகவே இந்த நூலையும் எழுதியிருக்கிறார்.

22 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முதியோரை வருத்தும் நோய்கள், நோய் வராமல் தடுக்கச் செய்யவேண்டியவை, சத்துணவு, மனநலம், தடுப்பூசியின் தேவைகள் என அடிப்படையான பல கேள்விகளுக்கு விடை தருகிறார் நடராஜன்.

முதியோர் எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஒரு பகுதியில் ஆலோசனை சொல்லும் நாகராஜன், ‘வயிறு நிறைய உண்டால் செரிமானப்பணிக்கு வயிற்றுக்கு அதிக ரத்தம் தேவைப்படும். அதனால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். மயக்கம், சோர்வு, தூக்கம் போன்றவை ஏற்படும். முதியோர், முக்கியமாக நீரிழிவு உள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் சிறிது சிறிதாக சாப்பிடலாம்’ என்கிறார்.

படிப்பறை

கருணைக்கொலை குறித்த ஒருவரின் கேள்விக்கும் விரிவாகப் பதிலளிக்கிறார் நடராஜன். ‘கருணைக்கொலை குறித்து அரசு தெளிவான, திடமான முடிவெடுக்கவேண்டியது அவசியம். அதேநேரம் இதை யாரும் தவறாகப் பயன்படுத்தாதவாறு சட்டத்தில் கடுமையான விதிமுறைகளையும் கொண்டு வரவேண்டும்’ என்கிறார். முதுமைக்காதல் பற்றியும் நடராஜன் உளவியல்பூர்வமாகப் பேசுகிறார்.

வயதானவர்கள் எதிலெல்லாம் கவனமாக இருக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் இந்த நூலில் இருக்கிறது. நெடுநாள் மனமுறுத்தும் பல கேள்விகளுக்கான விடையும் இருக்கிறது. முதியோர் மட்டுமன்றி நாளை முதியோராகப்போகிறவர்களும் வாசிக்க வேண்டிய நூல்.

கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்

- பத்ம டாக்டர்வி.எஸ்.நடராஜன்

வெளியீடு:
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை,
ஆதி பராசக்தி கிளினிக், 50, (18-ஏ) பிளவர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010

தொடர்புக்கு: 99949 02173, 044-26412030

விலை: ரூ.120

பக்கங்கள்: 96