
ஆரம்ப வறுமை, சலிக்காத உழைப்பு என எல்லாவற்றையும் எடுத்து முன்வைப்பதில் அவரின் நேர்மை நன்கு புலப்படுகிறது.
தமிழின் முக்கியமான சினிமா எடிட்டரான மோகனின் வாழ்க்கையே `தனி மனிதன்' என்கிற நடைச்சித்திரமாக மாறியிருக்கிறது. அவரின் வாழ்க்கையோடு இணைந்து தமிழ் சினிமாவின் வரலாறும் காணக் கிடைக்கிறது. உள்ளது உள்ளபடி எந்தப் பூச்சும் இல்லாமல் சொல்வதுதான் இந்த நூலின் சிறப்பம்சம். சுதந்திரத்திற்கு முன்பான சினிமாவில் ஆரம்பித்து இப்பொழுது வரைக்கும் எடுத்துரைக்கிறார். உள்ளத்தில் தெளிவும் குழப்பமற்ற மனதும் நெஞ்சுக்குள் நிம்மதியும் இருந்தால் மட்டுமே இப்படி சலனமின்றி எழுத முடியும்.
அவரின் இளமைக்காலம் ஆச்சர்யம் நிரம்பியது. வாழ்க்கை எவ்வளவு விசித்திரங்கள் நிரம்பியது என்பதை நாமே பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை, இவரின் வாழ்க்கையைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். வேலை தேடிப் போன இடத்தில் நடிகர் தங்கவேலு அவரை மகன்போல் வளர்த்த விதமும், ‘ஜின்னா' என்ற இஸ்லாமியர், மோகன் ஆக மாறிய சம்பவங்களும் ஆச்சர்யமூட்டும் திருப்பங்கள். சினிமா வியாபாரம், அவரின் தொடர்புகள், நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துவைக்கிறார்.

ஆரம்ப வறுமை, சலிக்காத உழைப்பு என எல்லாவற்றையும் எடுத்து முன்வைப்பதில் அவரின் நேர்மை நன்கு புலப்படுகிறது. மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு நெடும் பயணமாக நடந்தே வந்திருக்கிறார். சென்னைக்கு வரவே பல நாள்கள் ஆன நிகழ்வையெல்லாம் படிக்கும்போது அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது.
என்.எஸ்.கிருஷ்ணனைக் கண்டு உரையாடியிருக்கிறார். தியாகராஜ பாகவதரோடு தொடர்பில் இருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவோடு நிகழ்ந்த சம்பவங்களை அடுத்தடுத்து எடுத்து வைக்கும்போது, அவரின் குணாதிசயங்களில் கண்கள் விரிகின்றன. சினிமாவின் ஆதி அந்தம் புரிந்ததில் அவருக்கு சினிமா கைவசமாகியிருக்கிறது. ஆரம்ப வாழ்க்கை, அன்றைய சினிமா, பழகிய மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள் என எல்லாம் சொல்லிவிட்டு, தன் குடும்பம், மக்கள் என மகிழ்கிறார். ஆக, இது எடிட்டர் மோகனின் வாழ்க்கைதான். ஆனாலும் நமக்குக் கற்றுத் தருவது அதிகம்.
தனி மனிதன் - எடிட்டர் மோகன்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்
177/103 அம்பாள் பில்டிங், முதல் தளம்,
லாயிட்ஸ் ரோடு ராயப்பேட்டை, சென்னை-600014
பக்கங்கள்: 216
விலை ரூ: 450