சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

இந்த நாவலில் செல்வம் வாழ்ந்த வீட்டின் முக்கியத்துவம் பெரியது.

யுகம் யுகமாக வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் வேறு வேறானதும், அவரவருக்காக அளவெடுத்துத் தைத்த ஆடைபோன்று தனித்துவமானதும்தான். அதனால்தான் சொல்லப்பட வேண்டிய கதைகளும் குறைவில்லாமல் வழிந்தோடிக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கையை வடிந்துவிடாதபடிக்கு அவற்றைச் சொல்லும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அவர்களில் வாழ்வை அதன் கதகதப்போடு சொல்லத் தெரிந்தவராகப் பரிணமிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

செல்வம் தனித்து வாழ்பவர். அவர் மனைவி, மகன் இருவருமே அவரைப் பிரிந்து போய்விட்டனர். அதன் பின் வாழ்வை அர்த்தமில்லாததாக உணரும் செல்வம், தன் வாழ்வின் கடைசிநாளை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து ஒரு பறவை கூடடைவதைப் போல அமைதியாக இறந்துபோகிறார். அவரின் மரணத்துக்குப் பின்னான நாளும் அந்த நாளில் அவரின் உறவுகளுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டமே நாவல்.

இந்த நாவலில் செல்வம் வாழ்ந்த வீட்டின் முக்கியத்துவம் பெரியது. ஒவ்வொருவருக்கும் அந்த வீடு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று நாவலாசிரியர் சொல்லும் இடங்கள் மிகவும் ரசிப்பிற்குரியவை. செல்வம், அன்பு, கஜேந்திரன், பிரேமலதா என ஒவ்வொருவருக்கும் அந்த வீடு வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டதாகத் தெரிகிறது.

படிப்பறை

பக்கத்துவீட்டுக்காரி கோமளா, செல்வம் குறித்துச் சொல்லும்போது, “பொண்ணுதான் குடும்பத்தைத் தீர்மானிக்கிற ஆளு. ஒரு பொண்ணே வீட்ட விட்டு வெளியேறுதுனா அந்தக் குடும்பத்துல எங்கேயோ ஓட்டை இருக்குன்னு அர்த்தம். அது கண்டிப்பா அந்த வீட்டுக்குத் தெரியும். ஆனா வெளியாள் யார்கிட்டயும் அதால சொல்லமுடியாது” என்று சொல்லும்போது வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நம் வீடு நம்மைப் பற்றி என்ன சொல்லும் என்று எழும் கற்பனை தவிர்க்க இயலாதது. இப்படி, தனிப்பட்ட முறையில் வாசிப்பவர்களின் அனுபவங்களையும் கோடிட்டுக் காட்டுவதுபோன்ற வாசகங்கள் நாவலை மிகவும் அந்தரங்கமாக்குகின்றன.

குடும்பங்கள் உடைவு படும் சமகாலச் சூழலில் சமகாலப் பிரச்னைகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் பாகன் நாவல் அவசியம் வாசிக்கப்படவேண்டிய முக்கியமான ஒரு படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

பாகன் - கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு:
யாவரும் பதிப்பகம்
24, கடை எண் - B -
எஸ்.ஜி.பி நாயுடு காம்ப்ளெக்ஸ்
தண்டீஸ்வரம் பஸ் நிறுத்தம் வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை 600042

தொடர்பு : 9841643380

பக்கங்கள்: 128

விலை: ரூ. 155