சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

புரசு மரம் முதல் வஞ்சி மரம் வரை 108 மரங்களின் இயல்பை, பயன்களை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஞானசூரியன்

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் காலம். சின்னச்சின்ன அமைப்புகள் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை மரக்கன்று நடுவது டிரெண்டாகவே மாறியிருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு வெகுவேகமாக நடந்துவருகிறது. 1952-ல் உருவாக்கப்பட்ட தேசிய வனக்கொள்கை, தேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் வனங்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் 2019-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி வெறும் 20 சதவிகிதமே இங்கு வனப்பரப்பு இருக்கிறது. கனிமங்களுக்காக, தொழில் வளர்ச்சிக்காக எனக் காடழிப்புக்கு இங்கே காரணங்கள் நிறைய இருக்கின்றன. இந்தச்சூழலில் பூமி ஞானசூரியன் எழுதியிருக்கும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

புரசு மரம் முதல் வஞ்சி மரம் வரை 108 மரங்களின் இயல்பை, பயன்களை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஞானசூரியன். மிரட்டலான வார்த்தைகள் இல்லாமல் தன் அனுபவத்தில் மரங்கள் என்னவாக இருந்தன என்று தொடங்கி இலைகள், பூக்கள், அந்த மரத்துக்கும் மண்ணுக்குமான பந்தம், மருத்துவ குணங்கள் என எளிய மொழியில் பதிவு செய்திருக்கிறார். ஜவ்வாது மலை வனப்பயணத்தில் தொடங்கும் சந்தன மரம் குறித்த கட்டுரை, அதன் பூ, காய்ப் பருவங்களை அலசி சந்தன எண்ணெயின் பயன்பாடு வரைக்கும் பயணிக்கிறது. மார்பளவு உயரத்தில் 15 செ.மீ விட்டம் வளர்ந்த மரத்தில் மட்டுமே வயிரம் பாயுமாம்... வயிரம் பாய்ந்த மரத்துக்கே தேவை அதிகமாம். இந்த அளவுக்கு மரம் வளர 30 ஆண்டுகள் ஆகுமாம். 15 ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிலோ வயிரம் சேருமாம்.

படிப்பறை

வெறும் தீக்குச்சிக்குத்தான் பயன்படும் என்று கூறப்பட்ட பீநாறி மரம் ஆயுர்வேத மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மருந்தாக இருக்கிறது. கலித்தொகை காலத்தில் இருந்து தேற்றான்கொட்டை மரத்தின் காயை நீரைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தி வருகிறோம்... இப்படி மரங்கள் குறித்து வியக்க நிறைய செய்திகள் உள்ளன. புரிந்துகொள்ள ஏதுவாக மரங்களின் படங்களையும் இணைத்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு மரங்கள் குறித்த நல்லறிமுகத்தை நிகழ்த்த உகந்த நூல்.

தினம் தினம் வனம் செய்வோம் -

பூமி ஞானசூரியன்

வெளியீடு :
எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ், தெக்குப்பட்டு அஞ்சல்,
திருப்பத்தூர்- 635801

தொடர்பு எண்: 8526195370

பக்கங்கள்: 544

விலை: ரூ. 500