சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

உச்சினியென்பது
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சினியென்பது

பெரும்பாலும் இந்தத் தொகுப்பு முழுக்க இங்கிலீஷ் டீச்சர் முதல் ஞாபகத்தூறலாய்த் தொடரும் அக்கா வரை பெண்களே நிறைந்திருக்கிறார்கள்.

இயக்குநராக அறியப்படுவதற்கு முன்பே எழுத்தாளராகக் கவனம் பெற்றவர் மாரி செல்வராஜ். ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, ‘மறக்கவே நினைக்கிறேன்’ என்னும் இரு புத்தகங்களும் மாரி செல்வராஜ் எழுத்தின் பலம் சொல்லும். கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியுள்ள மாரி செல்வராஜின் முதல் கவிதைத்தொகுப்பு ‘உச்சினியென்பது...’ ஒடுக்கப்பட்ட தளத்திலிருந்து எழும் குரலும் காதலுக்கான நெகிழும் கணங்களும் இந்தக் கவிதைகளின் அடிப்படை.

‘அகத்தியர் மலைத்தொடரின் உச்சியில் நான்/ஒரு பருந்தெனக் காத்திருக்கிறேன்/ பசியெடுத்த காட்டு யானையின் மூர்க்கத்தோடு/ இடியென நான் இறங்கி வருகையில் பாருங்கள்/ உங்கள் நிலம் முழுவதும்/ என் நீலம் பரவியிருக்கும்’ என்றும் ‘ஆயிரம் கோடாரிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும்/ ஈடானது ஒரு கல்/பெரும் பசிக்கு கனியாய் விடுதலை கேட்கும்/எரிந்த எங்கள் குடிசைகளிலிருந்து நான் எடுக்கும் கல்’ என்றும் தனக்கான அடையாளத்தைக் காத்திரமாகப் பதிவு செய்யும்போது திமிறலின் துடிப்பை நம்மால் உணர முடிகிறது.

‘என் புத்தர்’ என்னும் கவிதை இந்தத் தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் புத்தரையும் அவரோடு இணைந்து விலகியும் பயணிக்கும் தருணங்களையும் ‘நான் எனது ஆசைகளை/என் புத்தர்மீது திணிப்பதில்லை/ நானொரு மீன் துண்டை பிய்த்துண்ணும்போது/ ஒரு குவளை தண்ணீரை அருந்திக்கொள்ளும்/பரிபூரண சுதந்திரம்/என் புத்தருக்கு உண்டு’ என்று கவித்துவமாகப் பதிவு செய்கிறார் மாரி.

படிப்பறை

‘இந்த இருள் அபாயகரமானது/ இருளுக்கெதிரான நம் வெளிச்சமும்/ அபாயகரமானதாக இருந்தே ஆகவேண்டும்’ என்னும்போது ஒரு கவிதை அரசியல் செயல்திட்டமாக மாறிவிடும் ரசவாதம் நிகழ்கிறது. மாரி செல்வராஜின் காதல் கவிதைகளை வெறுமனே காதல் கவிதைகள் என்று வகைப்படுத்திவிட முடியாது. தூசடர்ந்த காட்டுப்பேச்சிகளின் சிலையாய், எதார்த்தத்தின் நெஞ்சு மிதித்து தாண்டவமாடும் உக்கிரமாகவே காதலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலும் இந்தத் தொகுப்பு முழுக்க இங்கிலீஷ் டீச்சர் முதல் ஞாபகத்தூறலாய்த் தொடரும் அக்கா வரை பெண்களே நிறைந்திருக்கிறார்கள். ஆண்களோ அச்சுறுத்தும் அதிகாரத்தின் குரலில் நடமாட, அவர்கள்மீது எறிய கற்களோடு காத்திருக்கின்றன மாரி செல்வராஜின் சொற்கள்.

உச்சினியென்பது...

- மாரி செல்வராஜ்

வெளியீடு : கொம்பு பதிப்பகம்,

எண் 11, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் - 611001

அலைபேசி : 9952326742

பக்கங்கள் : 104

விலை : ரூபாய் 130