
தன் பயணங்களில் சேகரித்த அனுபவத்தின் சிறுதுளியை `விடுபட்டவர்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் இனியன்.
தங்கள் உயரத்திலிருந்தே பெரியவர்கள் குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தங்கள் அனுபவத்திலிருந்தே குழந்தைகளின் உலகத்தைக் கட்டமைக்கிறார்கள். ஆனால், தங்களின் உயரத்துக்குக் கீழிறங்கி, நேருக்கு நேராக முகம் பார்த்து உரையாடும், விளையாடும் பெரியவர்களைத்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. இனியன் தொடர்ந்து அப்படி குழந்தைகளோடு களைப்பற்று இயங்கிக்கொண்டேயிருக்கிறார். ஊர் ஊராகப் போய் குழந்தைகளோடு விளையாடுகிறார். கூடவே அவர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளை ஆவணப்படுத்தி, தீர்வும் தேடுகிறார்.
தன் பயணங்களில் சேகரித்த அனுபவத்தின் சிறுதுளியை `விடுபட்டவர்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் இனியன்
. இந்த 78 பக்க நூலில், நம் சமூகத்தில் பல்வேறு படிநிலைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற கவனம் பெறாத குழந்தைகளின் உலகம் விரிகிறது.
மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பற்றிய கட்டுரை பல சித்திரங்களை நம் முன் விரிக்கிறது. குறிப்பாக தமிழக-பாண்டிச்சேரி எல்லையோரக் குழந்தைகள் என்னவாகிறார்கள், அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன என்பதையெல்லாம் வாசிக்கும்போது இதுவரை இதை எப்படி கவனத்தில் கொள்ளாமல் இருந்தோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விளையாட்டைத் தவிர்த்துவிட்டு வேகவேகமாக வீட்டுக்கு ஓடி, மரபணு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் அக்காவின் மலம் துடைத்துப் பராமரிக்கிற ஒரு குழந்தையின் கதை அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கான பாலின சமத்துவம், உணவு சமத்துவம் பற்றியும் இந்த நூலில் பேசுகிறார் இனியன். மூன்று தலைமுறைகளாக ஒற்றையடுக்குச் செங்கல் சுவர், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகொண்ட வீட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகள் குறித்து நம்மிடம் எவ்விதச் செயல்திட்டங்களும் இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறார். பேரிடர் காலத்தில் நிலைகுலைந்துபோன குழந்தைகள் பற்றிய கட்டுரையும், தனிப்பெற்றோரின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கட்டுரையும்கூட மிக முக்கியமானவை.
நம் செயல்திட்டங்களிலிருந்து, பதிவேடுகளிலிருந்து விடுபட்டுப்போன குழந்தைகளை சமூகத்தின் கவனத்துக்கு முன்வைப்பதில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது இந்த நூல்.
விடுபட்டவர்கள்
இனியன்
வெளியீடு : நாடற்றோர் பதிப்பகம், 16, வேங்கடசாமி சாலை கிழக்கு, இரத்தின சபாபதிபுரம், கோவை-641002
தொடர்பு எண் : 94435 36779
பக்கங்கள்: 78 விலை: ரூ. 100