
மகாபாரதக் கதையில் இடம்பெற்றிருக்கும் அரவானுக்கும் பாலினப் பிறழ்வாளர்களுக்கும் உள்ள தொன்மத்தையும் மிக ஆழமாக அலசுகிறார் முனிஷ்.
பாலினப் பிறழ்வு எல்லா உயிரிகளிலுமே உண்டு என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மிகுந்த நுண்ணுணர்வோடு படைக்கப்பட்ட நம் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் பாலினப் பிறழ்வு பற்றி ஏராளமான செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் பாலினப் பிறழ்வு என்பது உளவியல் சிக்கல் என்ற எண்ணமே பலருக்கு இருக்கிறது. அது பிறப்பு வழி நிகழும் ஓர் இயல்பு என்ற விழிப்புணர்வு முழுமையாக வரவில்லை.
பாலினப் பிறழ்வாளர்கள் எந்தச் சூழலில் தங்களை அடையாளம் காண்கிறார்கள், அவர்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது, காற்றிலடித்துச்செல்லும் காய்ந்த சருகாய் காலவெள்ளத்தில் அவர்கள் எப்படியெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்பதையெல்லாம் காணொலிகள் வழி நிறைய திருநங்கைகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பாலினப் பிறழ்வாளர்கள் சிலர் நூல்களையும் எழுதியிருக்கிறார்கள்.
அரசுக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரியும் முனிஷ், தத்துவார்த்த ரீதியாக மூன்றாம் பாலினத்தவர் குறித்த ஒரு கோட்பாட்டை உருவாக்க முயன்றிருக்கிறார். அதற்கென இவர் கையாளும் ‘சமபாலினம்' என்ற சொல்லாடலே ஆக்கபூர்வமான தொடக்கமாக இருக்கிறது. இலக்கியங்களையும் இலக்கணங்களையும் வரலாற்றையும் தீர ஆய்வு செய்து மூன்றாம் பாலினத்தவர் குறித்துப் பதிவு செய்யப்பட்ட செய்திகளைத் தொகுத்து அதன்வழி பாலினப் பிறழ்வாளர்களின் கோட்பாட்டுக் கட்டுமானத்தை வடிவமைக்கிறார் முனிஷ். அண்ணகன், அண்ணாளன், அல்லி, அழிதூஉ, ஆணலி, கிடபி, பேடன், பேதை, பண்டகன் எனப் பல பெயர்களில் பாலினப் பிறழ்வாளர்கள் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். பேடி, சிகண்டி, அன்னகர், கஜசரா என சமய நூல்களிலும் குறிப்பிடப்படுகிறார்கள். இப்பெயர்களைத் தொகுத்து, ஒற்றைச்சொல் உருவாக்கத்தின் அவசியத்தை அலசுகிறார் முனிஷ்.

மகாபாரதக் கதையில் இடம்பெற்றிருக்கும் அரவானுக்கும் பாலினப் பிறழ்வாளர்களுக்கும் உள்ள தொன்மத்தையும் மிக ஆழமாக அலசுகிறார் முனிஷ். அரவான் மட்டுமன்றி, ஆணுடலில் பெண்ணும் பெண்ணுடலில் ஆணுமாக மாறுகிற மகாபாரதப் பாத்திரங்களையும் வரிசைப்படுத்துவது புதிய பார்வையாக இருக்கிறது. பாலினப் பிறழ்வாளர்கள் பெற்ற சட்ட உரிமைகள், அமைப்பு உருவாக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது இந்த நூல். தவிர, இதுநாள்வரை பாலினப் பிறழ்வாளர்கள் குறித்து வெளிவந்த நூல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்களையும் துல்லியமாக வரிசைப்படுத்துகிறது.
நூலின் வடிவமைப்பு ஈர்க்கும்படியில்லை என்றாலும், உள்ளடக்க அளவில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.
சமபாலினம்
வெ.முனிஷ்
வெளியீடு : கொங்குநாடு பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
118, மேட்டூர் சாலை, ஈரோடு-638011
தொடர்பு எண் - 9442251549
பக்கங்கள்: 263
விலை: ரூ.250