சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

பனி உருகுவதில்லை
பிரீமியம் ஸ்டோரி
News
பனி உருகுவதில்லை

நல்ல இலக்கியம் கனியும்போது மன வாசல்கள் திறக்கும் என்பார்கள். அப்படி இதில் நடந்திருக்கிறது

`பனி உருகுவதில்லை' முழுவதும் அருண்மொழியின் இளமை நினைவுகளை ஏந்திச் செல்கிறது. இளவயது வாழ்க்கையை அணுக்கமாகவும் இணக்கமாகவும் எழுதியிருக்கிறார். அவர் கேட்ட இசை, வாசிப்பு, சினிமா, ஊர் ஞாபகங்கள், உடன் நிற்கிற மனிதர்கள் என ஆழப் புதைந்திருக்கிற நினைவுகளை மீண்டும் எடுத்து முன் வைக்கிறார்.

அருண்மொழியின் நினைவுகள் 60-களில் தொடங்குகிறது. பெற்றோரின் ஆசிரியப்பணி, பள்ளியின் சூழல், அவர் சார்ந்த நடுத்தரக் குடும்பங்களின் உணவுமுறைகள், மாணவர்கள்மீது ஆசிரியர் காட்டும் அர்ப்பணிப்பு, வானொலிப் பாடல்கள் அப்போது ஏற்படுத்திய தாக்கம், திரையரங்குகளில் பார்த்த திரைப்படங்கள், அரசியல் நிகழ்வுகள், அதையொட்டி அப்போதிருந்த சமூகப்போக்கு என அருண்மொழி காலத்தைப் பதிவுசெய்துகொண்டே போகிறார்.

படிப்பறை

குஞ்சிதபாதம் அய்யா, ராவுத்தர் மாமா, மனோகர் சார், ஜோதி டீச்சர், தம்பி லெனின் கண்ணன், அப்பா சற்குணம், அம்மா சரோஜா, சித்தப்பா என ஏகப்பட்ட பாத்திர வார்ப்புகள் விரிகின்றன.

‘நிலை’ கட்டுரையில் வடிவேலு மாமாவின் முழுப் பாத்திர வடிவம் வருகிறது. பாவனைகள், உடைமீதான அவரது ஈர்ப்பு, இவர்களையெல்லாம் கொண்டாடிய விதம் எல்லாம் சொல்லி அவர் மறைந்த விதத்தைச் சொல்லும்போது கண்கள் பனித்துவிடுகின்றன.

அளவுமீறிய நெகிழ்ச்சி இல்லாமை, ஒருபோதும் உயராத குரல்... இதுதான் இந்த நூலின் சிறப்பு. குடும்ப மாற்றங்கள், பெண்களின் அமைதி, ஆண்களின் அதிகாரம் எல்லாமே சம்பவங்களில் வருகின்றன. 22 கட்டுரைகள் இருக்கின்றன.

நல்ல இலக்கியம் கனியும்போது மன வாசல்கள் திறக்கும் என்பார்கள். அப்படி இதில் நடந்திருக்கிறது. அதனாலேயே இந்நூல் வாசிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பனி உருகுவதில்லை

அருண்மொழி நங்கை

வெளியீடு: எழுத்து பிரசுரம்,

57 (7),R.பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர்,
சென்னை - 600040.

அலைபேசி : 89250 61999.

பக்கங்கள்: 318

விலை: ரூ. 380