சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

சொல்லகராதிகள்தான் மொழியின் மூலவேர். தனித்துவமான பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட சமூகங்கள் மத்தியில் விரவிக்கிடக்கும் சொற்களைச் சேகரித்து வகைப்படுத்திப் பொருள்விளக்கம் தந்து ஆவணப்படுத்துவதன் வழியாக வளமும் செம்மையும் குன்றாமல் மொழி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படும். உலகத்தின் ஆதிமொழிகள், அகராதிகளால்தான் காலத்தை வென்று உயிர்த்திருக்கின்றன.

உயிரியலுக்கும் மரபியலுக்கும் அகர வரிசைப்படி சொற்பொருள் தந்த தொல்காப்பியமே தமிழில் வெளிவந்த முதல் அகராதி என வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். கி.பி 8-ம் நூற்றாண்டில் வெளிவந்த திவாகர நிகண்டும், 11-ம் நூற்றாண்டில் வெளிவந்த பிங்கல நிகண்டும் அடுத்தடுத்து வந்த சொற்கருவி நூல்கள். வீரமா முனிவரின் சதுரகராதி, யாழ்ப்பாணம் கதிரைவேல் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி. தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் வாழ்வியற்களஞ்சியம் என வரிசைப்படுத்த தமிழில் ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனாலும் வட்டாரச்சொல் அகராதிகள் தமிழில் வெகு சிலவே வந்துள்ளன. கரிசல் நிலப்பரப்பு, நாஞ்சில் நாடு, நீலகிரி மலைப்பரப்பு, நடுநாடு, செட்டிநாடு, கொங்கு, நெல்லை, கடலோர மக்களின் வழக்குச்சொற்களைச் சில படைப்பாளிகள் தங்கள் தனிப்பட்ட பேரார்வத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். தற்போது பேராசிரியர் சண்முகசுந்தரம், இலங்கை உள்ளடங்கிய ஒட்டுமொத்தத் தமிழ் நிலப்பரப்பிலும் புழங்கும் வட்டாரச் சொற்களைத் தொகுத்திருக்கிறார். ஆக்கபூர்வமான தொடக்கம் என்ற வகையில் இதை வரவேற்கலாம்.

படிப்பறை

வட்டார வாழ்க்கைபோலவே வட்டார வழக்குகளும் தேய்ந்து வருகின்றன. உணவு, உடை, வாழ்க்கை முறையில் ஏற்படும் பொதுத்தன்மை மொழியையும் பாதித்திருக்கிறது. தனித்தன்மை மிக்க சொற்கள் காணாமல்போகும் நிலையில் இதுமாதிரியான முயற்சிகள் அவசியமானவை. அச்சுப்பூட்டி, அஞ்சல குஞ்சரம், அந்தக்கழுதை-இந்தக்கழுதை என நாட்டுப்புற விளையாட்டுகளை அதன் தன்மையோடு வகைப்படுத்துகிறது இந்த நூல். ‘அடிச்சாண்டா பாதர்வெள்ளை’, ‘அடிச்சான் பிடிச்சான் வியாபாரம்’, ‘அடுகிடையும் படுகிடையும்’, ‘கொள்வனை, கொடுப்பனை’ என கிராமங்களில் எடக்காகப் புழங்கும் சொற்றொடர்களுக்குப் பின்னாலிருக்கும் சுவாரஸ்யங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் சண்முகசுந்தரம். நாட்டார் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், வட்டார இலக்கியங்களில் எடுத்தாளப்படும் சொற்கள் அகராதியெங்கும் தூவப்பட்டுப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன.

ஒரு மொழியின் நாட்டுப்புறச் சொற்கட்டுக்குள் அந்நிலப்பரப்பின் பண்பாடு புதைந்திருக்கிறது. இந்த அகராதி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தப்பணி இன்னும் பல்லாயிரம் பக்கங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்!

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி - பேரா. சு.சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600024 தொடர்பு எண்: 98404 80232

பக்கங்கள்: 758

விலை: ரூ. 800