சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

தென்கோடி தமிழகத்தின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், வாழ்க்கை முறையை நாவலில் விவரித்திருக்கிறார்.

கிராமத்து வாழ்க்கையை அதன் உண்மையான மொழியோடு எழுதியிருக்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா. தொடக்கத்தில், நூலின் கனமும் மொழியும் ஏற்படுத்துகிற தயக்கம் பழகப் பழக விலகி, பாத்திரங்களோடு ஒன்றிப்போகிறது வாசிப்பு.

தென்கோடி தமிழகத்தின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், வாழ்க்கை முறையை நாவலில் விவரித்திருக்கிறார். மொளச்சா செடி, தளுத்தாக் கொளுந்து, அரும்புனா மொட்டு, மலந்தா புவ்வு, பரிஞ்சா பூட்ட, சமஞ்சா கருது, காச்சா பிஞ்சு, வெளஞ்சா காயி, பழுத்தாப் பழம், முத்துனா நெத்து, வெடிச்சா வெத என இருபது வார்த்தைகளுக்குள் ஒரு செடியின் பிறப்பையும் இறப்பையும் பதிவுசெய்துவிடும் பாமர மொழியை அத்தனை லாகவமாகக் கையாண்டிருக்கிறார் கஸ்தூரிராஜா.

படிப்பறை

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் எப்படியான உணர்வுகளைக் கொண்டிருந்தது, மனிதர்கள் என்ன மனநிலையில் வாழ்ந்தார்கள் என்பதை நாவலின் வழியாகக் காட்சிப்படுத்துகிறார் கஸ்தூரிராஜா. முத்துக்கருப்பனும் முருகேசனும் இந்த நாவலின் போக்கை வழிநடத்திச்செல்கிறார்கள். வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கிற சம்சாரிகளின் சுவாரஸ்ய வாழ்க்கையை பாத்திரங்கள் நம் கண்முன் நிறுத்துகின்றன.

`கெணறு வெட்டுக் கண்ட்ராட்டுக்காரென் சுந்தரராசுப்பய காஞ்சனாப்புள்ளைகிட்ட கவுந்த கதை' இந்தச் சொற்சித்திரத்தின் ஆகச்சிறந்த பகுதி. தேனி வட்டார மக்களின் உறவு, சண்டை சச்சரவு, வீரம், சடங்குகள், நம்பிக்கைகள் என அத்தனையும் கொண்டுவந்து நாவலில் நிறைக்கிறார். கஸ்தூரிராஜாவும் பாமர இலக்கியத்தில் ஒரு பாத்திரமேற்று வருகிறார்.

ஆடிமாதத் திருவிழா, தனியாக வந்து சிக்கிக்கொண்ட அத்தை மகள், தேனிக்கு வெள்ளைக்காரத் துரைகள் வரும்போது மறியல் செய்யப்போய் பலத்த அடி வாங்கும் பாண்டுரங்கன் என பல பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. கிராமியக் கலாசாரத்தில் ஒரு பயணம் போக விரும்புவோருக்கான படைப்பு.

பாமர இலக்கியம் - கஸ்தூரிராஜா

வெளியீடு:
விஜயலட்சுமி பதிப்பகம்
33/5 ராஜமன்னார் சாலை,
தி. நகர்,
சென்னை - 600017
அலைபேசி : 73581 85055

விலை : ரூ. 500

பக்கங்கள் : 934