சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

உங்களில் ஒருவன்
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களில் ஒருவன்

ஸ்டாலின் பிறந்த சிலநாள்களிலேயே கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுகிறார் கருணாநிதி.

தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினின் தன்வரலாற்று நூல் ‘உங்களில் ஒருவன்.' பிறப்பு முதல் மிசாக் கைதியாகச் சிறைக்குச் சென்றது வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளை இந்த முதல் பாகத்தில் பதிவு செய்துள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பிறந்த சிலநாள்களிலேயே கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுகிறார் கருணாநிதி. 20 நாள் குழந்தையை பாளையங்கோட்டைச் சிறைக்குச் சென்று காட்டுகிறார்கள். பின்னாளில் உதயநிதி பிறந்தபோதும் சிறையிலிருந்த கருணாநிதி, முந்தைய சம்பவத்தை நினைவுகூர்ந்து எழுதிய கடிதம் சுவாரஸ்யமானது.

சிறுவயதிலிருந்து அரசியல் ஆசை இருந்ததைப் பதிவு செய்யும் ஸ்டாலின், கோபாலபுரத்தில் ஆண்டுதோறும் கொண்டாடிய அண்ணா பிறந்தநாள் விழாக்கள், தான் நடித்த நாடகங்கள் ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார். ஸ்டாலின் விழாக்களில் கலைஞர் கலந்துகொண்டு பாராட்டைப் பதிவுசெய்தாலும், ஒரு கறாரான தந்தையாக ‘ஸ்டாலின் அரசியலைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதையும் குறிப்பிடுகிறார். ஒரு நாடக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்.ஜி.ஆரும் ‘அப்பாவின் பேச்சை ஸ்டாலின் கேட்கவேண்டும்' என்று வழிமொழிந்தது வரலாற்று சுவாரஸ்யம்.

படிப்பறை

பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் எம்.ஜி.ஆர் வேட்பாளராக நின்றபோது ஸ்டாலினின் நாடகத்தைத் தொடங்கிவைத்ததையும், தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் நாடகம் பார்த்ததையும் குறிப்பிடுகிறார். அதேபோல் சிவாஜிகணேசன் சுருள்சுருளான ஸ்டாலினின் தலைமுடியைப் பிடித்து, ‘தஞ்சாவூர்க் கோபுரம்போல் இருக்கே’ என்று ஆட்டி விளையாடுவதையும் குறிப்பிட்டிருக்கிறார். நாடகத்தில் ஸ்டாலினின் முதல் ஹீரோயின், சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து விலகிய குட்டி பத்மினி என்பது ஆச்சர்யத் தகவல். இந்திராகாந்தியால் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் நடந்த ஸ்டாலின் - துர்க்கா திருமண நிகழ்ச்சியே, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் அணிவகுப்பாக இருந்ததும் முக்கியமான வரலாற்றுப்பதிவு.

கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி' நூலில் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாது அன்றைய காலகட்டத்தில் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்ற பல முக்கியமான சம்பவங்கள் சுவைபட விவரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய முழுமையான வரலாற்றுக் கண்ணோட்டம் இந்த நூலில் இல்லாதது ஒரு குறை. எமர்ஜென்சி சிறைவாசத்துக்குப் பிறகுதான் ஸ்டாலினின் முழுமையான அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தமிழகம் அறிந்த உண்மை. அந்தக் காலகட்டங்களில் ஸ்டாலினின் வாழ்க்கையில் நடந்த நாமறியாத சம்பவங்கள் குறித்த எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது ‘உங்களில் ஒருவன்' முதல் பாகம்.

உங்களில் ஒருவன் - தன்வரலாறு - பாகம் 1

மு.க.ஸ்டாலின்

வெளியீடு :
பூம்புகார் பதிப்பகம்,
127 (ப.எண் 63), பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை - 600 108

தொலைபேசி : 044-25267543

பக்கங்கள் : 336

விலை : ரூ. 500