சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

சினிமாக் கலைஞர்கள் தவிர்த்தும் பலரின் படைப்புத்திறன் பற்றிய தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன

நாடகம், திரைப்படம் என இரண்டு துறை ஆளுமைகளோடு பழகிய நடிகர் பி.ஆர்.துரையின் அனுபவங்களே ‘என் பார்வையில் பிரபலங்கள்' தொகுப்பு. எந்த மேல்பூச்சும் இல்லாமல் நூல் நெடுக உண்மைகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார். நாம் அறிந்த பல பிரபலங்களின் வேறொரு முகம், அவர்களைப் பற்றிய கேள்விப்பட்டிராத செய்திகள் என்று உள்ளது உள்ளபடி அடுக்கிச் செல்கிறார்.

ஜெமினி ஸ்டூடியோவுக்கு நடிக்கவந்த திருவாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினியை ஜெமினிகணேசன் தான் நேர்காணல் செய்திருக்கிறார். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை'யில் இந்த நூலாசிரியரே சின்ன வயது நாகேஷாக நடித்து அதகளம் செய்திருக்கிறார். ‘அன்பே வா' படத்தில் நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் கோழி சாப்பிடுவது போல ஒரு காட்சியில் நடிக்கவேண்டும். அவர் பிராமணர். அவரை எப்படி அசைவ உணவு சாப்பிட வைக்கமுடியும் என்று எம்.ஜி.ஆர் யோசித்து, பேக்கரிக்குப் போய் கோழி வடிவத்தில் ஒரு கேக் ஆர்டர் செய்யச் சொல்லியிருக்கிறார். அதைச் சாப்பிட்டு டேக் ஓகே ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் ஏ.பி.நாகராஜன், கண்ணதாசன், பீம்சிங், ஏ.வீரப்பன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என பலதரப்பட்ட கலைஞர்களோடு பழகிய அனுபவங்களை எடுத்து வைக்கிறார்.

படிப்பறை

சிறுவயதிலேயே சகஸ்ரநாமத்தின் புகழ்பெற்ற சேவா ஸ்டேஜில் நடித்ததால் அதன் வரலாறு துரைக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், விவேக், வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்குத் தன் வசனங்களால் வாழ்வளித்துவிட்டு, தனக்கென எதையும் சேர்த்து வைக்காத நகைச்சுவையாளர் ஏ.வீரப்பன் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையும் இருக்கிறது. கரகாட்டக்காரனின் வாழைப்பழ காமெடிகூட வீரப்பன் எழுதியதுதான்.

சினிமாக் கலைஞர்கள் தவிர்த்தும் பலரின் படைப்புத்திறன் பற்றிய தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. நாடகமும் சினிமாவும் முன்பு தந்த பாய்ச்சலை, இந்த நூலைப் படிக்கும்போது உணர முடிவது இதன் சிறப்பம்சம்.

என் பார்வையில் பிரபலங்கள் - கலைமாமணி பி.ஆர்.துரை

வெளியீடு: வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017.

தொடர்பு எண்:

98401 59858

பக்கங்கள்: 316

விலை: ரூ. 250