
அண்டனூர் சுரா தான் சொல்ல வருகிற விஷயங்களை மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்லிச்செல்கிறார்
காலனிய ஆதிக்கத்துக்குள் சிக்கியிருந்த நம் தேசத்தில் நாவல்கள் எழுதுவதற்குத் தேவையான கருக்கள் ஏராளம் உண்டு. அவற்றில் ஒன்றைக் கண்டெடுத்து அற்புதமான நாவலை உருவாக்கியிருக்கிறார் அண்டனூர் சுரா.
இவர் இதற்கு முன்பு எழுதிய ‘முத்தன்பள்ளம்’ நாவல், தமிழக வரலாற்றில் ஒளி பாய்ச்சப்படாத இருண்ட பக்கங்களையும் மக்களின் வாழ்வையும் பேசியது. இவரின் சமீபத்திய நாவல் தீவாந்தரம்.
திருநெல்வேலியில் சுதேசிப் போராட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வ.உ.சி, பத்மநாப ஐயர், சுப்பிரமண்ய சிவா ஆகிய மூவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கே ஒரு கலவரம் வெடிக்கிறது. அதில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறக்கிறார்கள். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுத் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. சுதேசிகளுக்குப் பத்துவருட தீவாந்தர தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாவல் இங்குதான் தொடங்குகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்ப, மறுவிசாரணை தொடங்குகிறது. அந்த விசாரணையும் அதன் இறுதியாக வெளியான தீர்ப்பும் என்னவாக இருந்தது என்பதுதான் நாவல்.

நாவலில் வரலாற்றைப் பேசுவதுபோல சமகால நிகழ்வுகளைப் பேசிச் செல்கிறார் சுரா. துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன சிறுவனின் தாய் நீதிமன்றத்தில் அளிக்கும் சாட்சியம் முக்கியமானது. தூத்துக்குடியில் நிகழ்ந்த கோரல் ஆலைப் போராட்டம், அதற்குப் பின்புலமாக இருந்த நிர்வாகத்துக்கு ஆதரவான அதிகாரிகள் என்று அதை அவர் விவரிக்கும்போது அது சமகாலச் சிக்கல்களை நினைவுபடுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்கு வசதியாகத் தன் கற்பனையில் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு சில விஷயங்களைச் சேர்க்கிறார்.
அண்டனூர் சுரா தான் சொல்ல வருகிற விஷயங்களை மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்லிச்செல்கிறார். ஆனால் நாவலில் உணர்வுபூர்வமான தருணங்கள் மிக விரைவாகக் கடந்து சென்றுவிடுகின்றன. இதை ஒரு விமர்சனமாக முன் வைக்கலாம். சுரா நம் காலத்தின் காத்திரமான படைப்பாளி. இன்னும் விரிவான ஒரு வரலாற்று நாவலை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
தீவாந்தரம்
அண்டனூர் சுரா
வெளியீடு :
சந்தியா பதிப்பகம்,
புதிய எண் 77, 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை- 600083
தொடர்பு எண் : 044 24896979
பக்கங்கள்: 216
விலை : ரூ. 230