சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

நவீன இலக்கியம் தனிமனித மனங்களை அணுக்கமாகப் பார்க்க விரும்புகிறது. அவற்றின் செயல்பாடுகளைக் கதைக் களமாகக் கண்டடைகிறது. ஒவ்வொரு மனிதனும் உள்ளும் புறமுமாய் வேறுவேறாய் இருப்பதன் சூட்சுமத்தை, மனம் சார்ந்து பேசப்படாத இருள் பக்கங்களைப் புனைவுகளில் பேச முயல்கிறது. இத்தகைய முயற்சிகளில் சிலநேரம் மனம் சார்ந்த விஷயங்களையே விதந்தோதி, சமூகம் சார்ந்த பதிவுகள் எதுவும் இல்லாமல் ஆகிவிடும் ஆபத்தும் உண்டு. அப்படியில்லாமல் இரண்டையும் ஒரு கலவையாக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கும் ஒரு படைப்பாக அரிசங்கரின் ‘உண்மைகள், பொய்கள், கற்பனைகள்’ நாவலைச் சொல்லலாம்.

நாவலின் கதைமாந்தர்கள் யாருக்கும் தனிப்பட்ட பெயர்கள் இடப்படவில்லை. அனைவருக்கும் குறிப்புப் பெயர்தான். வெள்ளை, கறுப்பு, பச்சை, நீலம், ஆரஞ்சு, சாம்பல், அடர் சாம்பல் என்றே கதைமாந்தர்கள் சுட்டப்படுகிறார்கள். இவர்களில் வெள்ளை என்பவன் இந்தக் கதையின் முக்கியமான கதாபாத்திரமாகச் செயல்படுகிறான். அவன் மனம் சமூகப் பொருளாதாரக் காரணிகளால் பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதிவைக்கிறான். அதில் அவன் ஒரு பெண்ணைக் கொலைசெய்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு குறிப்பை எழுதிவைத்திருக்கிறான். ஆனால் அவன் கொலை செய்த பிணம் குறித்த குறிப்பும் தடயமும் இல்லை. காவல்துறையின் விசாரணையே இந்த நாவலாக விரிகிறது.

நாவலில் காவலர்களாக வரும் கறுப்பு, பச்சை, நீலம் ஆகியோர் வெள்ளையின் மரணத்தைத் துப்புத்துலக்குகிறார்கள். இவர்களின் குறியீட்டுப் பெயர்களே இவர்களை சமூக அதிகார வர்க்கப் படிநிலையின் குறியீடுகளாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிடும். அதிலும் நீலம் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாகவே காட்டப்படுகிறார். கதை ஓட்டத்தில் நீலம் மிக இயல்பாக உயர்ந்து நிற்கிறார். அவரே வழக்கில் முக்கியத் துப்பையும் கண்டுபிடிக்கிறார்.

வாசிக்க மிக சுவாரஸ்யமான இந்த நாவலில் குறையாகச் சொல்லவேண்டுமானால், பல இடங்களில் எழுத்தாளரின் குரல் கேட்பதுதான். அதிலும், இன்னும் எத்தனை காலத்துக்கு இலக்கியம் படிக்கும் பெண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று எழுதுவார்கள் என்றுதான் புரியவில்லை. மற்றபடி சுவாரஸ்யமான ஒரு நாவலைத் தந்ததற்காக அரிசங்கரைப் பாராட்டலாம்.

படிப்பறை

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

- அரிசங்கர்

வெளியீடு: டிஸ்கவரி புக்பேலஸ்

# 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே. நகர் மேற்கு,

சென்னை - 600078

தொடர்புக்கு: 044 48557525, 87545 07070

பக்கங்கள்: 160

விலை: ரூ.180