
- மனோ
‘நடந்துகொண்டே இரு... பாதை தானாக உருவாகும்’ - இது ஒரு ஜென் பழமொழி. நம் வாழ்க்கையைச் செதுக்குவதில் பயணங்கள் முக்கியமானவை. வாழ்வின் புதிய பக்கங்களைத் திறந்துவைக்கும் சாவியாகப் பயணங்களே இருக்கும். ஒருவன் எவ்வளவு பயணிக்கிறானோ அவ்வளவு அனுபவங்களைச் சேகரித்து வைத்திருப்பான். அந்த வகையில் தனிப் பயணியாகக் கிளம்பி ஒருவர் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் 21 நாள்கள் மேற்கொண்ட தனது நெடும்பயண அனுபவங்களைச் சொல்லும் இந்த நூல் கவனம் பெறுகிறது.
தனிப் பயணியாக சென்னையில் இருந்து கிளம்பிய திலீபன், ரயிலில் கிடைத்த சீட் முதல் ஆங்காங்கே கிடைத்த உணவுகள், சந்தித்த மக்கள், மொழிக்குழப்பங்கள் வரை அனைத்தையும் பயண அனுபவமாகவே பதிவு செய்கிறார். எளிமையான எழுத்துநடையின் வழி, நமக்கும் அவருடன் பயணித்த உணர்வு கிடைக்கிறது.

நாகாலாந்தின் கிசாமா கிராமத்தில் டிசம்பர் முதல் வாரம் நடைபெறும் புகழ்பெற்ற ஹார்ன்பிள் திருவிழா, நாகா பழங்குடிகளுக்கான பயிலகம் ‘மொராங்’ ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறார். கொனோமா என்கிற ஆசியாவின் முதல் பசுமைக் கிராமம் பற்றிய தகவல்கள் ஆச்சர்யத்தைக் கொடுக்கின்றன. அந்தக் கிராம மக்கள் வேட்டைத் தொழிலைக் கைவிட்டு விவசாயத்துக்குத் திரும்பி இருக்கின்றனர்.
ஸூகு பள்ளத்தாக்கு, உலகின் மிகப்பெரும் நதித்தீவு மஜ்ஜுலி என இயற்கையின் அத்தனை அழகையும் கண்ணாரக் கண்டு களித்திருக்கிறார். மஜ்ஜுலியின் பாரம்பரிய மூங்கில் வீடுகள், சமுகுரி சத்ராவில் தயாரிக்கப்படும் முகமூடிகள் என எல்லாவற்றையும் வாடகை சைக்கிளில் சுற்றிப் பார்த்த அவரது உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. தவாங், ஷில்லாங், சிரபுஞ்சி, குவஹாத்தி எனத் தொடரும் பயணத்தை நியூ ஜல்பைகுரியில் முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார்.
எந்த ஒரு திட்டமும் வகுக்காமல் கிடைத்த இடங்களில் தங்கி, கிடைத்த உணவுகளை உண்டு, நடந்தும், வாடகை சைக்கிள் எடுத்தும், லிஃப்ட் கேட்டும், ஆங்காங்கே நண்பர்கள் பிடித்தும் என பல இன்னல்களைச் சந்தித்தாலும் தன் பயண நோக்கத்திலிருந்து விலகாமல் ஆர்வத்துடன் பயணித்துள்ளார் திலீபன்.
தனிப் பயணி என்றால் எப்படி எல்லாவற்றையும் சமாளிப்பார்? புதிய சூழல், புதிய மக்கள், புரியாத மொழி, பழக்கமில்லா காலநிலை, பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் எப்படி என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். இவை அத்தனைக்குமான விடைகளையும் எல்லோரையும் பயணிக்கத் தூண்டும் முனைப்பையும் இந்தப் புத்தகம் கொடுக்கிறது.
BACK பேக் - தனிப்பயணியின் வடகிழக்கு அனுபவங்கள்
ஆசிரியர்: கி.ச.திலீபன்
வெளியீடு: நடுகல் பதிப்பகம், வாய்ப்பாடி அஞ்சல்,
விஜயமங்கலம் வழி, ஈரோடு - 638056.
தொடர்புக்கு: 7010980337
பக்கங்கள்: 120
விலை: ரூ. 150