Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

சிங்கப்பூரில் புட்டு வியாபாரம் செய்த வெங்கடாசலம், இராஷ்பிகாரி போஸ் உருவாக்கிய இந்திய தேசிய லீக்கில் இணைந்து இரணியன் ஆகிறார்.

தேச விடுதலைப் போராட்டம் தொடங்கி சுரண்டல் சமூக அமைப்புக்கு எதிரான போராட்டங்கள் வரை இடதுசாரிகளின் பங்களிப்பு தீவிரமானது. சமூக வரலாற்று வளர்ச்சியின் உந்துசக்தியாக இருந்தவை இடதுசாரிகள் நிகழ்த்திய வர்க்கப் போராட்டங்களே. சாதிய, வர்க்க ஆதிக்கத்துக்கு எதிராக அந்தக் களப்போராட்டங்களை அமைப்பாக, அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்தவர்கள் பலர். அவர்களில் பத்துத் தோழர்களை அறியத்தருகிறது இந்த நூல்.

இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்குப் பெரும்பங்காற்றியவரும், சங்கர் என்ற புனைபெயரில் தலைமறைவாகச் செயல்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவரும், பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவருமான அமீர் ஹைதர்கானின் வரலாறு முக்கியமானது.

நிலப்பிரபுத்துவக் கொடுமையாலும் சாதிய வன்மங்களாலும் விவரிக்க முடியாத துன்பங்களை எதிர்கொண்டு தவித்த எளிய மக்களின் பக்கம் நின்று போராடிய பி.எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட பி.சீனிவாசராவின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறை கட்டாயம் வாசிக்கவேண்டும்.

படிப்பறை

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராகத் தீரமுடன் களமாடிய களப்பால் குப்புவின் வரலாறு சிலிர்க்க வைக்கிறது. சாணிப்பால் கொடுமை, சாட்டையடித் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக பண்ணையார்கள் கூலிப்படை ஏவ, கொல்ல வந்த கூலிப்படையையே தன் சொற்திறத்தால் சிந்திக்க வைக்கிறார் குப்பு. ஆத்திரம் கொண்ட பண்ணையார்கள் குப்புவின் மகன் கையை வெட்ட, அந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்துபோகிறார். பின்பு ஒரு கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுத் திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு விஷம் தரப்பட்டுச் சிறையிலேயே கொல்லப்பட்டதாக நிறைவுறுகிறது குப்புவின் வரலாறு.

சிங்கப்பூரில் புட்டு வியாபாரம் செய்த வெங்கடாசலம், இராஷ்பிகாரி போஸ் உருவாக்கிய இந்திய தேசிய லீக்கில் இணைந்து இரணியன் ஆகிறார். 12,000 தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர்த் துறைமுகத் தொழிற்சங்கத்தின் தலைவரான இரணியன், தொழிலாளர்களுக்குப் பிரச்னையாக இருந்த நான்கு ரவுடிகளைச் சுட்டுக்கொன்று சிங்கப்பூரை அதிரச் செய்கிறார். பிறகு தமிழகம் வந்து காவிரிப்படுகை பண்ணை முதலாளிகளின் வன்மத்துக்கு எதிராகக் களமாடி காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிர்துறந்து வாட்டாக்குடி இரணியனாக வரலாற்றில் பதிவாகிறார்.

இப்படிப் பெயர் அறிந்த, இதுவரை கேள்வியே பட்டிராத தோழர்களின் தீர வரலாற்றைச் சுருக்கமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிற இந்த நூலை இளைஞர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்!

இவர்கள் நம் தோழர்கள் - சு.கருப்பையா, செ.காமராஜ்

வெளியீடு :
வாசிப்போர் களம், எண்-67, காந்திபுரம், தில்லை நகர், திருச்சிராப்பள்ளி-620018 தொடர்பு எண்: 9486103547

பக்கங்கள்: 96

விலை: ரூ.100