சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

மூன்றே பக்கங்களிலான முதல் கதையைப் படித்துவிட்டு உடனே அடுத்த கதையைப் படிக்க முடியாது.

அரபு நாடுகளைச் சேர்ந்த 11 பெண் எழுத்தாளர்கள் எழுதிய 14 சிறுகதைகளின் தொகுப்புதான் எதிர் வெளியீடாக வந்திருக்கும் `ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்.’ ஜான்ஸி ராணி இந்தக் கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

கல்வி, சுதந்திரம், கலாசாரக் கட்டுப்பாடுகள், தாய்மை, காதல், ஆசைகள் என்று பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அராபியச் சூழலைத் தாண்டி உலகளவிலான பெண்களின் அனுபவங்களை உணர்த்துகின்றன. ‘இதில் இடம்பெற்றிருக்கும் நாட்டின் பெயர்களை, கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டால் இது வேற்று நாட்டின், பிறிதொரு கலாசாரத்தின் கதை என்றே கூறமுடியாது’ என்று மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல, சம்பவங்கள் நம் நாட்டில், நம் ஊரில், நம் தெருவிலும் நடப்பதைத்தான் பேசுகிறது என்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. ஒருவகையில் வேதனையும் அதுதான்!

ஆண்களும் சமூகமும் பெண் என்ற இனத்தின்மீது பண்பாட்டின் பெயரால் நிகழ்த்தும் மனரீதியான, உடல்ரீதியான வன்முறைகளை சின்னச் சின்னக் கதைகள் மூலம் அராபிய எழுத்தாளர்கள் தோலுரித்திருக்கிறார்கள். மூன்றே பக்கங்களிலான முதல் கதையைப் படித்துவிட்டு உடனே அடுத்த கதையைப் படிக்க முடியாது. தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் நீண்டநேரம் நீடிக்கும்.

படிப்பறை

எப்போதும் போலவே சிறப்பான நூலாக்கத்தை வழங்கியிருக்கிறது எதிர் வெளியீடு. தொகுப்பின் கதைகள் சொல்லும் உண்மைகள் நம்மை அதிர்ச்சிக்கோ, கேள்விக்கோ உள்ளாக்குவது போலவே, சில கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் குறிப்புகளைப் படிக்கும்போது அவர்கள் எத்தனை அடக்குமுறைகளுக்குப் பிறகு இந்த எழுத்துலகில் பயணிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பதினொரு எழுத்தாளர்கள் பற்றிய விரிவான விளக்கம் அவர்களின் படைப்புகளை மேலும் தேடிப் படிக்கச் செய்யும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளதை நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டலாம்!

ஒரு வாழ்க்கை... சில சிதறல்கள்... அராபியப் பெண்ணியச் சிறுகதைகள்

தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி

எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம்ரோடு, பொள்ளாச்சி - 02

தொடர்புக்கு: 04289 - 226012, 99425 11302

பக்கங்கள்: 136

விலை. ரூ. 160