Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

திருச்சிராப்பள்ளி... ஊறும் வரலாறு

கவிஞர் நந்தலாலா விகடனில் எழுதிவந்த ‘திருச்சி - ஊறும் வரலாறு' தொடரின் நேர்த்தியான புத்தக வடிவம்.

திருச்சியின் வரலாற்றைக் குறித்துப் பேசும் தொடர்தான் என்றாலும், அந்த நகரை முதன்மையாக வைத்து தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியை சுவைப்படச் சொல்கின்றன நந்தலாலாவின் எழுத்துகள். திருச்சியில் வாழ்ந்து, மறைந்து, உலகெங்கும் நிறைந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு தொடங்கி, திருச்சியின் முக்கிய இடங்கள் உருவான சுவாரஸ்யக் கதைகள் வரை அனைத்துத் தளங்களையும் தொட்டுச் செல்கின்றன இதன் கட்டுரைகள். உதாரணமாகத் திருச்சிக்கு ரயில் வந்த கதையைப் பேசும் கட்டுரையில் திருச்சி அலுவலகத்தில் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் பொன்மலை வாட்டர் டேங்க் அங்கு எப்படி வந்தது என்பது வரைக்கும் வரலாறு சொல்கிறார் நந்தலாலா.

படிப்பறை

திருச்சிக்கு காந்தி வந்தபோது என்ன நடந்தது, கல்லணை எப்படி உருவானது, ஆங்கிலோ இந்தியர்கள் எங்கே போனார்கள், திருச்சி பெரியார் மாளிகை இப்போது எப்படியிருக்கிறது, தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஆர்.ராதா, சுஜாதா வரை நீளும் ஆளுமைகளுக்கும் திருச்சிக்குமான தொடர்பு போன்றவற்றைப் பேசும் அத்தியாயங்கள், அது சார்ந்த அரிய புகைப்படங்கள் என அனைத்துமே தகவல் களஞ்சியங்கள். திருச்சியின் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தொடங்கி மற்ற கல்லூரிகளின் கதைகள், BHEL நிறுவனம் திருச்சி வந்த கதை, முதலாம் மொழிப்போரில் திருச்சியின் பங்கு என்ன என அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளும் பல புதுத் தகவல்களை எடுத்துச் சொல்கின்றன. திருச்சி மலைக்கோட்டை, திருவரங்கம் பெரியகோயில், சமயபுரம் மாரியம்மன், தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவிய விதம் என மனம் நிறைக்கும் ஆன்மிகப் பக்கங்களும் இதிலுண்டு.

ஒரு மாநிலத்தின் மையப்பகுதியில் இருக்கும் நகரம், அதில் நிகழும் ஒரு மாற்றம் எப்படி அந்த மாநிலம் முழுக்கவே தாக்கத்தை ஏற்படுத்தும், முன்னேற்றம் என்பது எப்படி அதன் கிளைகளைப் பரப்பும் என்பதற்கான மாபெரும் வரலாற்று ஆவணம் இந்தக் கட்டுரைகள். அது மட்டுமன்றி, ஒரு கட்டத்தில் நம் மாநிலத்தின் தலைநகராக ஆகவே தகுதிகள் கொண்டிருந்த ஒரு மாபெரும் நகராட்சியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது நமது கடமையும்தானே?!

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு - கவிஞர் நந்தலாலா

வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

போன்: 044-4263 4283

பக்கங்கள்: 295

விலை: ரூ.470