
இந்தக் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் கவிதைகள் கடந்து செல்ல முடியாத உண்மையின் பாரத்தையும் கடக்க நினைக்கும் எத்தனத்தையும் சுமந்து நிற்கின்றன
இழப்பையும் இழப்பின் வலி மேவிடும் துக்கத்தையும் இசையாய், கவிதையாய், பாடலாய் மாற்றித் துயர் ஆற்றுவது தமிழ் மரபு. ஒப்பாரிப் பாடல்களும் இரங்கல் கவிதைகளும் நம் இலக்கியத்தின் இரு அங்கங்கள். அன்பும் அறிவும் இயைந்து வளர்ந்த தன் மகளின் இறப்பு தாங்காமல், இழப்பை எதிர்கொள்ள இதயத்தின் வலியை இறக்கிவைக்கும் கவிஞர் கபிலனின் கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பே ‘மகள்.'
தன் மகள் தூரிகை பிறந்த கதை முதல் வளர்ந்து தீவிரச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு இணையவெளியில் இயங்கிய கதை வரை முன்னுரையில் சொல்லும் கபிலன், மகள் தற்கொலை என்னும் தவறான முடிவைத் தேடிக்கொண்டதைச் சொல்லும்போது தடுமாறிப்போகிறார். ‘20 ஆண்டுகள் கடந்த இளவரசியை ஓரிரு பக்கங்களில் ஒளித்துவைக்க முடியாது' என்னும் எதார்த்தம் பகிரும் கபிலன், ‘அவள் என்னை எழுதிக்கொண்டே இருக்கிறாள். கனவுகளின் கைப்பிடித்து நடக்கிறாள். அவளோடு இருக்கும் தனிமை நான்' என்று கவிதையும் கண்ணீருமாய் முடிக்கிறார்.

இந்தக் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் கவிதைகள் கடந்து செல்ல முடியாத உண்மையின் பாரத்தையும் கடக்க நினைக்கும் எத்தனத்தையும் சுமந்து நிற்கின்றன. தன் மகளுக்கான மலர்வளையத்தைப்போலவே அழகிய புகைப்படங்களுடன் இந்தக் கவிதைத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் கபிலன்.
கண்ணீரின் வெளிச்சம் / வீடு முழுக்க / நிரம்பியிருக்க / இருந்தாலும் இருக்கிறது / இருட்டு
என்னும் வரிகள் அளவில் குறைந்தவை என்றாலும் சொல்லும் உணர்வுகள் ஒரு முழுவாழ்க்கையைச் சுமந்திருக்கின்றன.
அவளை / பூமிக்குள் / வைத்த பிறகும் / என்னையே / பார்த்துக்கொண்டிருந்தாள் / நான்தான் / கண்களை மூடிக்கொண்டேன்
என்ற வரிகளில் நாம் பக்கத்தைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு ஒரு கணம் திகைத்துப்போகிறோம். இப்படித்தான் எல்லாப் பக்கங்களிலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் அடுத்தடுத்த கவிதைப் பக்கங்களுக்குள் பயணிக்க முடிகிறது.
பகுத்தறிவாளன் / ஒரு கடவுளைப் / புதைத்துவிட்டான்
என்று தேம்புவது தகப்பனின் குரல் மட்டுமல்ல, தமிழும்கூடத்தான்.
மகள் கபிலன்
வெளியீடு : தூரிகை, H 92, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை 600 106
பக்கங்கள் : 128
விலை : ரூபாய் 150