Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு நாட்டிய நிகழ்வுக்குப் போகும் ஷாலினி, வழியில் எதிர்கொள்ளும் புஷ்பா என்கிற திருநங்கை குறித்துப் பதிவிட்டிருக்கிறார்.

பயணங்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. புதிய அனுபவங்களைப் பெற, அறிவை விசாலப்படுத்திக்கொள்ள, முக்கியமாக சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுப்பவை பயணங்களே. பண்பாடுகளையும், விதவிதமான உணவு வகைகளையும், புதிய தானியங்களையும் பயணங்களின் மூலமாகவே மனிதர்கள் கண்டடைந்திருக்கிறார்கள். `ஒரு சிறந்த பயணி திட்டம் வகுத்துக்கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதில்லை’ என்பது சீனத் தத்துவவியலாளர் லாவோட்ஸுவின் கூற்று. அதன்படி வாழ்ந்திருப்பவர் ஷாலினி பிரியதர்ஷினி.

இந்தியச் சூழலில் இஷ்டப்படி, நினைத்த இடத்துக்குப் போக ஆண்களுக்கே வாய்ப்பதில்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டவர் ஷாலினி. டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு, அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் என இந்தியாவின் பல இடங்களுக்குப் பயணம் சென்றவர்; சில காலம் வட இந்தியாவில் வாழ்ந்தவர். ஆனால், இந்த நூலில் அவர் சென்ற இடங்கள் வெற்றுக் குறிப்புகளாக, வரைபடம்போல் அமையாமல் அந்தந்த இடங்களில் வாழும் மனிதர்களை, அவர்களின் இயல்புகளை, குண விசித்திரங்களைப் பற்றிப் பேசும் கதைகளாக விரிகின்றன.

படிப்பறை

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு நாட்டிய நிகழ்வுக்குப் போகும் ஷாலினி, வழியில் எதிர்கொள்ளும் புஷ்பா என்கிற திருநங்கை குறித்துப் பதிவிட்டிருக்கிறார். கலையின் உயிரோட்டத்தை அந்தத் திருநங்கை ஆடும் ஓர் இந்திப் பாடல் வழியே வெகு அநாயாசமாக விவரித்திருக்கிறார். படித்தவுடன் மனதில் பதியும் சித்திரங்களாக, இந்தத் தொகுப்பில் இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கின்றன. ரயில் பயணத்தில் அவர் சந்தித்த காவல்துறை அதிகாரி தொடங்கிப் பலவிதமான மனிதர்கள் நம்மில் நிறைந்துபோகிறார்கள். நம்மைத் துணுக்குறச் செய்யும் சில நிகழ்வுகளையும் ஒளிவுமறைவில்லாமல் பதிவுசெய்திருக்கிறார்.

படித்து முடித்ததும் இந்தியா முழுக்கப் பயணம் செய்த அனுபவம் கிடைக்கிறது. எத்தனையோ பயண நூல்கள் தமிழில் வந்திருந்தாலும், `நாடோடிச் சித்திரங்கள்’ தரும் அனுபவம் வேறானது. இந்த நூல் பிரம்மபுத்திரா நதியையும், காமாக்யாவையும் மட்டும் நமக்குக் காட்சிப்படுத்தவில்லை... இந்தியா என்கிற ஒரு தேசம் குறித்த அற்புதமான சித்திரத்தைக் காட்சிப்படுத்துகிறது. `பாதைகளைக் கடினமாக்கியதும் மனிதர்களே; வழிகாட்டிகளாக மாறி என்னை அரவணைத்ததும் மனிதர்களே’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஷாலினி. அந்த நிதர்சனம், ஒரு நாடோடியாக மாறி இந்தியா முழுக்க சுற்றித் திரிந்தால்தான் புரியும்.

நாடோடிச் சித்திரங்கள் - இந்திய நிலவழிப் பயணக் கதைகள்

ஷாலினி பிரியதர்ஷினி

வெளியீடு: மோக்லி புக்ஸ், 9/6, S2, A பிளாக், நவரத்னா அப்பார்ட்மென்ட்ஸ், வேலாயுதம் தெரு, ராதாநகர் பிரதான சாலை, குரோம்பேட்டை,

சென்னை - 600 044.

பக்கங்கள்: 320

 விலை: ரூ. 320