சினிமா
Published:Updated:

படிப்பறை

கலைஞர் மு.கருணாநிதி வரலாறு
பிரீமியம் ஸ்டோரி
News
கலைஞர் மு.கருணாநிதி வரலாறு

கருணாநிதிமீதான தீராப் புகார், 2009 இறுதி யுத்தக் காலத்தில் அவர் ஈழமக்களைக் கைவிட்டார் என்பது. இந்த நூலின் 19வது அத்தியாயம், கருணாநிதியின் அக்காலகட்டச் செயல்பாடுகளைப் பேசுகிறது.

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆங்கிலத்தில் எழுதிய Karunanidhi: A Life என்ற நூலின் தமிழாக்கம். சந்தியா நடராஜன் எளிமையான மொழியில் சுவாரஸ்யம் குறையாமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.

நிலவுடமைச் சமூகமும் விளிம்புநிலை கலைஞர்களும் குடிகொண்ட ஒரு நிலப்படுகையில், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த முத்துவேல் கருணாநிதி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக வளர்ந்த வரலாற்றை ஓர் ஊடுபாவுப் பயணமாகப் பதிவு செய்திருக்கிறார் பன்னீர் செல்வன். இந்திய விடுதலைக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கருணாநிதியின் அரசியல், 80 ஆண்டுகள் காத்திரமாகத் தொடர்ந்தது. இந்திய அரசியல் தலைவர்களில் அவரளவுக்கு ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள், விமர்சனங்களை எதிர்கொண்ட தலைவர்கள் யாருமில்லை. 2018 ஆகஸ்ட் மாதம் மரணத்தைத் தழுவும்வரை அசைக்க முடியாத சக்தியாக தி.மு.க-வின் தலைமைப்பொறுப்பில் அமர்ந்திருந்தார். வலுவான பிளவுகள், மிகப்பெரும் தோல்விகள், இரண்டு ஆட்சிக் கலைப்புகள், கைதுகள், சிறைகளென சோதனைக் காலங்களைக் கடந்து கட்சியைக் காத்தவர்.

வெறும் சம்பவங்களின் கோவையாக இல்லாமல் ஒரு பத்திரிகையாளரின் ஆய்வுப் பார்வையில் அமைந்த வரலாறு என்ற வகையில் இந்த நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட 80 ஆண்டுக்கால தமிழக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் சாத்தியங்களையும் இந்த நூல் உருவாக்குகிறது.

படிப்பறை

கருணாநிதிமீதான தீராப் புகார், 2009 இறுதி யுத்தக் காலத்தில் அவர் ஈழமக்களைக் கைவிட்டார் என்பது. இந்த நூலின் 19வது அத்தியாயம், கருணாநிதியின் அக்காலகட்டச் செயல்பாடுகளைப் பேசுகிறது. 1984-ல் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ராணுவப் பயிற்சியளிக்க இந்திய அரசு முடிவெடுத்தது தொடங்கி, 2009 இறுதி யுத்தக்காலம் வரை கருணாநிதிக்கும் புலிகளுக்குமான உறவு, பிரபாகரனுக்கும் கருணாநிதிக்குமான பந்தம், ஈழத்தின் பிற ஜனநாயக சக்திகள்மீதான கருணாநிதியின் பார்வை, இறுதி யுத்தக் கால நெருக்கடிகள் என விரிவான காலப்பதிவாக அது இருக்கிறது.

இதுவரை அதிகம் வெளிச்சம் பெறாத, துயரமும் சுவாரஸ்யமும் சேர்ந்த கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையை இந்த நூலில் வாசிக்கலாம். குழந்தைப்பருவம் முதல் சக்கர நாற்காலிக் காலம் வரையிலான கருணாநிதியின் புகைப்படத் தொகுப்பு அபூர்வமானது. சுமார் 100 பக்கங்களில் சிறப்பாகப் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிடம், ஆரியம், தமிழ்த்தேசியமென எந்த அரசியல் கொள்கை கொண்டவர்களும் வாசிக்க வேண்டும் இந்த நூலை!

கலைஞர் மு.கருணாநிதி வரலாறு - ஏ.எஸ். பன்னீர்செல்வன்

தமிழில் - சந்தியா நடராஜன்

வெளியீடு : வ.உ.சி நூலகம், ஜி-1 லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600014

தொடர்பு எண்: 98404 44841

பக்கங்கள்: 624

விலை: ரூ. 900