Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

தெய்வீகனின் ‘உன் கடவுளிடம் போ' தொகுப்பு பத்துச் சிறுகதைகள் கொண்டது. ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைக்களம்.

புலம்பெயர் இலக்கியங்கள் உலக இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. போர், அரச பயங்கரவாதம், இன அழிப்பு, மத அரசியல் ஆகியவற்றின் சாட்சிகளாகத் திகழ்பவை. மனித வாழ்வின் அபத்தங்களை, பெருமிதங்களை எள்ளி நகையாடுபவை. போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட தேசங்கள் அனைத்திலிருந்தும் பல புதிய குரல்கள் படைப்புகளாக வெளிப்பட்டு உலகின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கின்றன. அவ்வகையில் ஈழத்திலிருந்து புறப்பட்டு இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரின் படைப்புகள் முக்கியமானவை. அவர்களில் தெய்வீகன் மிக முக்கியமானவர்.

தெய்வீகனின் புனைவுமொழி எளிமையானது. வட்டார வழக்கின் பயன்பாடு குறைத்து, பொதுவான மொழியில் விவரிக்கும் தன்மை கொண்டது. கதையின் காட்சிகளை ஓர் ஓவியம்போல விவரிக்கும் தன்மை மொழி கடந்து அந்தந்த வாழ்வுக்குள்ளாகப் பிரவேசிக்கச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்துபவர்.

தெய்வீகனின் ‘உன் கடவுளிடம் போ' தொகுப்பு பத்துச் சிறுகதைகள் கொண்டது. ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைக்களம். யுத்தம் கலைத்துப்போடும் வாழ்வை எதிர்கொள்ள இயலாமல் தத்தளிக்கும் மனிதர்களின் கதைகள். இத்தொகுப்பில், ‘அவனை எனக்குத் தெரியாது’, ‘இருள்களி’, ‘பொதுச்சுடர்’, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ ஆகிய கதைகள் மிகவும் முக்கியமானவை.

படிப்பறை

தொகுப்பின் கடைசிக் கதை ‘ஆழியாள்', வாசகருக்குள் சிறு நடுக்கத்தை உண்டாக்கக் கூடியது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்குக் காலனியாதிக்கத்தால் நிகழும் வன்முறையே கதைக் களம். காடும், கடலும் சார்ந்து வாழ்ந்த பழங்குடி நிலங்களை ஆக்கிரமிக்கின்றன பிரித்தானியப் படைகள். கிளர்ச்சி செய்யும் மக்களைக் கொன்று அவர்களின் தலையை வெட்டி பிரிட்டனுக்கு அனுப்புகிறார்கள் அதிகாரிகள். கடலில் முத்துக்குளிக்க நன்கு ஆழத்தில் மூச்சடக்கி இருக்க வேண்டும். அதற்காகவே கர்ப்பிணிகளைக் கடத்திவந்து முத்துக்குளிக்க வைக்கிறார்கள் கம்பெனிக்காரர்கள். இன்று நாகரிகம் பேசும் மேற்குலகின் கடந்த நூற்றாண்டு எவ்வளவு கரிய பக்கங்களைக் கொண்டது என்பதன் சாட்சியமாக விரிகிறது இந்தக் கதை.

கதைகளில் துயரம் ஒரு மைய இழையாக ஓடினாலும் வாசிப்பின்போது அது முகத்தில் அறைவதேயில்லை. பல துயரங்களைக் கடந்து மீண்டும் இணையும் தம்பதி வெடித்து அழுகிறார்கள். ‘எந்தக் கண்ணீர்த்துளி எதற்கென்று தெரியாமல் இருவரும் அழுதார்கள்' என்று எழுதுகிறார் தெய்வீகன். இப்படித் துயரத்தின் அழகியலைக் கவித்துவமாகப் பேசும் வரிகள் தொகுப்பு முழுமையும் நிறைந்துகிடக்கின்றன. புலம்பெயர் இலக்கியத்தில் ‘உன் கடவுளிடம் போ’ முக்கிய இடம் பிடிக்கும் ஒன்று.

உன் கடவுளிடம் போ - தெய்வீகன்

வெளியீடு: தமிழினி

63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை-51

தொடர்பு எண்: 86672 55103

பக்கங்கள்: 175

விலை: ரூ. 190