கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

படிப்பறை

இத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
இத்தா

மரியம், ஆமினா என்னும் இரு வெவ்வேறு வயதுள்ள பெண்களின் மனநிலையில் உள்ள வித்தியாசங்களைச் சரியாகச் சித்திரித்துள்ளார் ஜாகிர் ராஜா.

நவீன எழுத்து உத்திகள், இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கதைகள் ஆகியவற்றைத் தன் அடையாளங்களாகக் கொண்டுள்ள கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘இத்தா' நாவல், பலராலும் அறியப்படாத புதிய விஷயத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. கணவனை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. மறுமணத்துக்குமுன் கருவுற்றிருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்காக அந்தப் பெண் காத்திருக்கும் இடைக்காலமே ‘இத்தா.' இந்த இத்தா காலத்தில் அந்தப் பெண் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், ஆண்களைச் சந்திக்கக்கூடாது, குறைவான வெளிச்சமுள்ள அறையிலேயே வசிக்கவேண்டும், அலங்காரம் செய்துகொள்ளக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் உள்ளன.

கோவையைச் சேர்ந்த நியாஸ் என்ற இளைஞன் குண்டுவெடிப்புக்குக் காரணமானவன் என்று மணமேடையிலேயே கைது செய்யப்படுகிறான். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மாமனார் வீட்டில் காத்துக் கிடக்கிறாள் அவன் மனைவி மரியம். ஒருகட்டத்தில் தன் மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க மாமனார் காதர் முடிவெடுக்கிறார். மறுமணம் செய்வதற்கு முன்பு மரியம் ‘இத்தா'வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் ஜமாத் தலைவர். மணமேடையிலேயே கைது செய்யப்பட்ட கணவன், எந்தவித உறவும் இல்லாத நிலையில் ‘இத்தா' மேற்கொள்வது அவசியமா என்கிற கேள்வி தொடங்கி பல்வேறு கேள்விகளை மரியம் பாத்திரத்தின் மூலம் முன்வைக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

படிப்பறை

இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, இஸ்லாமியப் பெண்களின் மனநிலை, கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்கள் படும் பாடு, என்று பல்வேறு விஷயங்களையும் பேசுகிறது ‘இத்தா' நாவல். குறிப்பாக மரியத்துக்கும் நபிகள் நாயகத்துக்கும் இடையில் நடத்தப்படும் கற்பனை உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. பல்வேறு புரிதல்களுக்கான திறப்பாக இருக்கும் அந்த உரையாடல், அதேநேரம் முடிவற்ற கேள்விகளையும் விட்டுச்செல்கிறது.

மரியம், ஆமினா என்னும் இரு வெவ்வேறு வயதுள்ள பெண்களின் மனநிலையில் உள்ள வித்தியாசங்களைச் சரியாகச் சித்திரித்துள்ளார் ஜாகிர் ராஜா. ஒரு முஸ்லிம் பெண்ணாக தன் மருமகளின் மறுமணத்தை அங்கீகரிக்கும் அதே சமயம், ஒரு தாயாக, தன் மகன் வந்துவிடுவான், மறுமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கும் ஆமினா பீவியின் மனநிலை எதார்த்தமானது. மரியம் குடும்பத்தைச் சுற்றியே நகரும் கதை, கோவை குண்டுவெடிப்பில் சிறைப்பட்டுள்ள அப்பாவிகளின் வாழ்க்கை, அதன்பின்னுள்ள அரசியல் குறித்து இன்னும் விரிவாகப் பதிந்திருக்கலாம்.

ஒரு பெண்ணுக்கான சுதந்திரவெளி குறித்து அக்கறைப்படும் முக்கியமான படைப்பு இது.

இத்தா - கீரனூர் ஜாகிர் ராஜா

வெளியீடு :
நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி - 610 203.

தொலைபேசி: 99436 24956

பக்கங்கள்: 260

விலை: ரூ. 280