
கவிதை
பச்சிலை வாசமுள்ள
ஆடுகளின் காற்குளம்பை
முகருங்கால்
வானவில்லை உழப்பி வந்த
நிறங்களின் மிச்சம் இருந்தன
குளத்தலையாய்ப் பாய்ந்து
எனை நோக்கி
என் மந்தையாடு வருகையில்
ஊற்றுச் சொட்டுகள்
உடம்பிற் கண்டேன்

காற்றில் ஆய்கின்றன
கட்டமண்ணில் ஆய்கின்றன
வட்டவளையமிடுகின்றன வானில்
வீண்மீனைப் பிணையல் அடிக்கின்றன
மேக வரிசையில் ஊர்கின்றன
என் விசிற் சத்தம் கேட்டு
சப்பாத்திக் கள்ளியை
ஒரே தவ்வாய்த் தவ்வி வருகின்றன
என் உள்ளங்கையை உதறினால்
ஒரு குத்து செம்மறிகள் பிறந்துவிடும்
ஒரு குத்து வெள்ளாடுகள் உதிர்ந்து வரும்
நான் மந்திரவாதியில்லை
ஆட்டு வீச்சமுள்ள ஆளேதான்
எனக்கு இரண்டு பிள்ளைகள்
மகள் ஒரு மயிலம்பாரிக் குட்டி
மகன் ஒரு போர்ப் புருவை
எத்தனை ஆடுகள்
என் மந்தையில் உள்ளனவோ
அத்தனை எழுத்துகள்
என்னிடம் உள்ளன
அத்தனை கவிதைகள்
என்னிடமுள்ளன
அத்தனை பாட்டுகள்
என்னிடமுள்ளன
அத்தனை கதைகள்
என்னிடமுள்ளன
இனி என்னை
வழிமறிக்க முடியாது...
தொரட்டிக்கம்போடு
நான் பட்டி திறக்கிற நேரம் இது.