சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

தேடிச்சிறத்தல் - கவிதை

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

- ஆத்மார்த்தி

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

அம்மாவுக்கு மறதி அதிகம்.

பெரும்பாலும் அவள் தேடல்

தேவை சார்ந்தவை.

மின்சாரம் அணைகிற நேரம்

மெழுகுவத்தியை தீப்பெட்டியை

அவசரப்போழ்தின் விளக்கை

எங்கேயெனத் தேடித் துழாவுவாள்

அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம்

அநேகமாக மின்சாரம் மீண்டிருக்கும்

வெட்கப் புன்னகையோடு

மறுபடி அதனதன் இடத்தில் இருத்துவாள்.

அப்பாவுக்கு நல்ல நினைவுத்திறன்

பெரும்பாலும் எதையுமே

அவர் தேடியதில்லை

எவையெல்லாம் எங்கெங்கே இருக்கும்

என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி.

தேடிச்சிறத்தல் - கவிதை

எங்கள் யாரின் தேடுபொருளையும்

சட்டென்று கிடைக்கச் செய்கையில்

அலாதி மென்பெருமிதம்

முகத்தில் ஜொலிக்கும்

எப்போதாவது அப்பா

வீட்டை ரெண்டாக்கிக்

கொட்டிக் கவிழ்த்து

நெடிய வேட்டையிலாழ்வார்

தனக்குத் தானே முணுமுணுத்தபடி

சின்னஞ்சிறிய சாவி

அல்லது

ரசீது-சிட்டை

இப்படி எதையாவது

காணோமென்று அல்லாடுவார்

ஒரு கட்டத்துக்கு மேல்

பொறுமையிழந்து அம்மா

``எதைக் காணாமத் தேடுறீக?’’

என்பாள்

கவிழ்ந்த தலையோடு

இன்னதைத் தேடுவதாக

அப்பா சொன்ன மறு நிமிஷம்

``இங்கே விட்டுட்டு ஊரெல்லாம் தேடினா

எப்படிக் கிடைக்குமாம்?’’ எள்ளியபடியே

வேறோரிடத்திலிருந்து

எடுத்து நீட்டுவாள்

அத்தோடு தீரும்

தேடல் படலம்

நெடு நாட்களுக்குப் பிறகு

தெரியவந்தது

அப்பா தொலைத்து

அம்மா கண்டறிந்த

அந்தப் பொருளை

அப்பாவும் அம்மாவும் தெரிந்தே

அந்த இடத்தில் வைக்கும் வழக்கமாம்.

தேடித் தீர்வதாம்

தேடலொடு ஊடலும்.