
- கலாப்ரியா
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
சூரியனும் ஒளியும் தினமும்
பூமியில் கட்டும் கோட்டைக்கு
மேக நிழல்களே மதில் சுவர்கள்
அவை கண்சிமிட்டும் நேரத்தில்
இடம் உயரம் திசை என
எதையும் மாற்றிக்கொள்ளும்.
அகழிகளுக்குக் கடலை நம்புவதில்லை
நீர்வீழ்ச்சிகளையே நியமிக்கிறது
அதை எதிரிகள் எதைக்கொண்டும்
ஏறிக் கடக்க முடியாது.
புதிர்ப்பாதைகளுள்ள கானகத்தையே
சிறைக்கூடங்களாக்குகின்றன
மழைத்தாரைகளைக் கம்பிகளாக்குகின்றன
குற்றவாளி தானாக விரும்பினால்
சென்று ஒளிந்துகொள்ளலாம்.
கோட்டைக்குள் வீடுகட்டி வாழ்பவரை
விரும்புவதுமில்லை வெறுப்பதுமில்லை
அதுபோல வேலைக்குச் செல்வோரையும்
மாறாக ஜன்னல் வழியே
அகலாது அணுகாது தீக்காய்வார்போல
கருக விடாது கடுகு தாளிக்கும் அந்தப்
பெண்களின் சாமர்த்தியத்தை வியக்கும்.

மேலும் பறவைகள் இரவில்
கூடுகளில் தங்குவதையும்
பகலில் வௌவால்கள்
மரங்களில் தொங்குவதையும்
அபூர்வமாய் அவை சண்டையிடுவதையும்
அது அறிந்தே வைத்திருக்கிறது.
ஏனைய நட்சத்திரங்கள் இது எதற்கு
இந்த பூமியைக் காக்கும்
வெட்டி வேலை என்னும்போது
கொண்டலுக்குள் கோட்டையையே மறைத்து
நீங்கள் தூரத்துச் சொந்தம் சற்றே
சும்மாயிருங்கள் என்று
இடிகள் மூலம் எதிர்ப்பைக் காட்டும்.
மழை ஓய்ந்ததும் குழந்தைகள் விடும்
காகிதக் கப்பல்களை மடமடவெனச் சேகரிக்கும்.
ஏனென்றால் இரவு நெருங்குகையில்
எல்லாவற்றையும் காலி செய்து ஏற்றி
பூமிப் பந்தின் மறுபக்கம் கொண்டு சேர்த்து
அத்தனை ஏற்பாடுகளையும்
அலுக்காமல் செய்ய வேண்டுமே!