
ஸ்டாலின் சரவணன் - ஓவியம்: மணிவண்ணன்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
வாழ்க்கையின் கால்கள்
விதவிதமாக
ஆடுகின்ற ரயிலின்
தடதடக்கும் அதிர்வில்
ஒளி மிகுந்த பாடலோடு வருகிறான்
கண் தெரியாத இசைஞன்.
மெலிந்த தேகமுடைய அக்கா
கொய்யாவைப் பிளந்து
மிளகுப்பொடி தூவ
நாக்குகள் எச்சில் ஊறுகின்றன.
காற்றில் பறந்த மிளகு
பளிங்கு மீனைக் கண்களாகக்கொண்ட
சிறுமியை அழவைக்கிறது.
அதுவரை அடைத்துக்கிடந்த மாய வாசல்களின் கதவுகள் திறக்கின்றன.
தூங்கி வழிந்த
பெட்டியோ
இப்போது பரபரக்கிறது.
பெரியவர் ஒருவர் துண்டை வாயில் வைத்து ஊதி
அவள் கண்களை ஒத்துகிறார்.

ஒரு கால் தாங்கிய
சிறு வியாபாரி
பீப்பியை ஊதி
சிறுமியை
விண்ணைத் தொட வைக்கிறார்.
ரயில் கூவிக்கொண்டு வேகமெடுக்கிறது
இந்த நூற்றாண்டில் ஒரே நாளில்
ஒரே கூபேயில்
இத்தனை மனிதர்களைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
அடுத்தடுத்த நிறுத்தங்களில்
கைகாட்டுபவர்களுக்கு
நிற்காமல்
உன்னதத்தை நோக்கித் தலைதெறித்தோடுகிறது.
அதற்குள்
டிக்கெட் பரிசோதகர் தன் கடமையை
நிறைவேற்றக் கண்விழித்துவிட்டார்
எடுக்காத டிக்கெட்டை பாக்கெட்டில் தடவிப் பார்க்கிறேன்
விநோதத்தின் சாவிகளை சன்னல் வழி
தண்ணீர் ஓடாத பாலத்தின் மேலிருந்து வீசுகிறேன்.
அவசர சங்கிலியைப் பற்றி இழுக்கிறேன்.
உன்னதத்தின் தடம் சட்டென மாற
ஆதார் எண்ணைக் குறித்துக்கொண்டு
அபராதம் அபராதம் என்று கூக்குரலிடத் தொடங்குகிறது ரயில்.