சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பீரங்கி மலர் - கவிதை

பீரங்கி மலர் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
பீரங்கி மலர் - கவிதை

- தீபச்செல்வன்

சயனைடு குப்பிகளில் மண் நிறைத்து

விளையாடும் குழந்தைகள்

பூக்களைப் பறிக்கக் காடு நுழைந்தனர்

ராணுவச் சீருடை அணிவிக்கப்பட்ட

காட்டுமரங்களின் இடையே

நிறுத்தப்பட்ட பீரங்கிகளில்

கொடியெனப் பறந்தன

குருதி புரண்ட வெண்சீருடைகள்

அகழப்பட்ட காட்டின் நடுவே

யுத்த ஒத்திகையின்

அதிரும் குரலால் நடுங்கின காடுகளின் விழிகள்

‘இனி யார்மீது யுத்தம்?'

குழந்தைகளின் முகங்களில் முடிவற்ற கேள்விகள்

பீரங்கி மலர் - கவிதை
பீரங்கி மலர் - கவிதை

காட்டின் பழங்களெல்லாம்

சயனைடு குப்பிகளெனத் தொங்கின

குருதிக் கறைகளால் சிவந்த பாதையில்

யாரோ இழுத்துச் செல்லப்பட்ட விரலடையாளங்கள்

ஒரு நாடு புதைக்கப்பட்ட நிலத்தில்

‘எப்போது வேண்டுமானாலும் யுத்தம்' என

நீட்டி நிற்கும் ஒரு பீரங்கியின் வாய்க்குழல் அருகே

ஒரு காந்தள் கொடி படர்ந்தெழ

அதன் மலர்

நீர்ச் சொட்டுகளுடன் விரிந்து பூத்திருந்தது

ஒரு குழந்தையின்

புன்னகை நிரம்பிய முகமாய்.