Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம் ( ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி )

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

கன்னியம்மா அலங்காரம்!

கல்யாணப் பொண்ணு அலங்காரம்னா

அது கன்னியம்மா சித்திதேன்

ஈரத்தலையில படிஞ்ச

சீவக்காய்த் தூளை வலிக்காம எடுத்துரும்

கண்ணாடி வளவி, கண்மை டப்பா,

பாலிஸ்டர் ரிப்பன், குட்டிகுரா பவுடர்

கன்னியம்மா வாங்கியாந்தா

கண்ணு கசங்குனாலும் கண்மை கலைஞ்சதில்ல

மொத ராத்திரிக்கு முன்னே வளையலும் ஒடைஞ்சதில்ல

இதுக்கெல்லாம் பத்துப்பைசா வாங்காதவன்னு பேருன்னாலும்

குட்டிகுரா பவுடருக்குக் கொலையும் பண்ணுவா

கன்னியம்மான்னுதான் ஊருல பேச்சு

‘யேத்தா, சாப்பிட்டுத்தான் போயேன்’ன்னா

முந்தியப் பிடிச்சபடி ஓடியே போயிரும்

குட்டிகுரா பவுடரக் கூட்டிக்கிட்டே...

- ஆண்டன் பெனி

பூனைக்கால்களின் இசை

வாசிக்கத் தெரிவது பற்றி

யோசனை இல்லை

வாசித்த காலம் பற்றிய

நினைப்புகூட இல்லை

வீடடைத்துக் கிடப்பதாக வரும்

எண்ணங்களை

கடந்துவிடுதலும் நடக்கிறது

பூனைக்கால்கள் படுக்கையில்

குழம்பும் சத்தம்

வீட்டைத் துள்ளி எழுப்பும்

தூசு தட்ட துடைத்து வைக்க

அதனோடு அடுப்படியும்

ஒன்றுதான் அம்மாவுக்கு

அழகுக்கு

ஆசைக்கு

எல்லாம் தாண்டி

ஆள் கணக்குக்கு

அது இருந்தது இருக்கிறது

வாசிப்பை நிறுத்திக்கொண்ட

கறுப்புவெள்ளைக் கட்டைகள்

எப்போதாவது

கவிதை ஆவது இப்படித்தான்

நான் ஊருக்கு வந்திருக்கிறேன்.

- கவிஜி

சொல்வனம்
சொல்வனம்

அழுகையின் உறவு

எப்பவுமே என்னை

அழுவவிட்டுக்கிட்டே

இருப்பாரு மாமா

ரெண்டாவது படிக்கையில

`நீ இந்த வீட்டுப் பிள்ளையில்ல

உன்ன தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தது'ன்னு

அவர் சொல்லச் சொல்ல

நான் அழுதுக்கிட்டே இருப்பேன்

அப்புறம் ஒருநாள்

உங்கொப்பன் திருடிப்புட்டானாம்

பட்டுக்கோட்டை மாட்டுச் சந்தையில

கட்டிக் கெடக்கான் என்பார்

அப்பாவியாய் அம்மாவைப் பார்க்க

அம்மாவும் ஆமோதிப்பதுபோல இருக்கும்

அழுவேன் நான்

ஏழாவது எட்டாவது படிக்கையில

பள்ளிக்கூடமில்லாத நாளில்

காலையிலிருந்து மத்தியானம்வரை

கண்ணு செவக்க

குளத்துக்குள்ளயே குளிச்சிக்கிட்டு

இருக்கறதைப் பார்த்துட்டு

கம்பெடுத்து அடிச்சு விரட்டுவார்

அழுகையோடு ஓட்டமெடுப்பேன்

கல்லூரி நாள்களில்

ஊர் காமான்டி திருவிழா நாளில்

நண்பர்களோடு

நான் சிகரெட் அடிப்பதைப் பார்த்துவிட்டு

‘தப்பு மாப்பிள்ள’ என்று கண்டித்த மாமாவை

‘உங்க வேலையப் பாருங்க

எங்களுக்குத் தெரியும்' என்று சொல்ல

மௌனமாய் அழுதுக்கிட்டே

போன மாமா

பதினாறாம் நாள்

படத்திறப்பு போட்டோவில்

முறுக்கு மீசையுடன்

சிரித்தபடி மாமா...

கண்கலங்கியபடி நான்.

- இயக்குநர் சற்குணம்