சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

பூனை
பிரீமியம் ஸ்டோரி
News
பூனை

நண்பர்களின் இல்லங்களுக்கு திடீரெனச் செல்லாதீர்கள்தவிர்க்கவியலா வருகையெனில் வருமான வரித்துறைபோல்

இன்னும் கொஞ்சம் அதிகமாக...

பதிந்து வைத்திருக்கும்

நம் பிள்ளையின் முதல் அழுகையை

அலைபேசியில் அனுப்பு

எப்போதோ பரிசளித்து

இப்போது அளவு குறைந்திருக்கும் மோதிரத்தை

என் கண்களில் விழும்படி நம் வீட்டில் வை

கடிகார முட்களோடு

நாம் புன்னகைக்கும் புகைப்படத்தில்

படராத தூசிகளைத் துடை

தூக்கத்தில் கைபட்டும்

படாதவாறு திரும்பி கண்களை நான் மூடுகையில்

நீயும் பொய்யாய் பார்க்காதபடி திரும்பு

பிறகு தொடரும் உரையாடலில்

‘என்ன விட்டா உனக்காரு இருக்கா’ என்பதை

சமாதானங்களின் நடுவே சேர்த்துக்கொள்

மற்றபடி

நான் கோபம் கொண்டு பேசாதிருக்கும்

கணங்களில் இன்னும் கொஞ்சம்

அதிகமாகக் காதலி..!

- கனா காண்பவன்

****

இது அவர்கள் வீடு

நண்பர்களின் இல்லங்களுக்கு

திடீரெனச் செல்லாதீர்கள்

தவிர்க்கவியலா வருகையெனில்

வருமான வரித்துறைபோல்

வீடெங்கும் நோட்டம் விடாதீர்கள்

உங்கள் திடீர் வருகைக்கென

வீட்டுக் குப்பைகளை

ஆங்காங்கே

அவசரமாய்த் திணித்திருக்கக்கூடும்

நீங்கள் அமரக்கொடுத்த நாற்காலி

சற்று சரியில்லாமல் இருக்கலாம்

கொடுத்த காபியில்

சர்க்கரை தூக்கலாகவோ

குறைவாகவே இருந்திருக்கலாம்

மேசைமேல் பூச்சாடியை

அவசரமாய்த் துடைத்ததில்

தூசி சிறிது விடுபட்டிருக்கக்கூடும்

ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளுங்கள்

உங்கள் வருகைக்காகத்தான்

அவ்வளவு மெனக்கெடல்களும்

எனக்காக ஏன் இதெல்லாமென

உரிமையாய்க் கேளுங்கள்

ஏன் இப்படி இருக்கிறதெனப் பேசிவிடாதீர்கள்

இது அவர்கள் வீடு

அவர்களுக்குப் போதுமானது!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

****

பெயரிடப்பட்டவள்

கருவில் உதைக்கும் ஒவ்வொருமுறையும்

ஒரு பெயர் சூட்டிப் பூரித்தாள்

பெண் என்றால்

முன்னாள் காதலியின் பெயர் என

குறித்துக்கொண்டான் அப்பன்

தத்தமது மனைவியரின் பெயருக்கு

அடிப்போட்டார்கள் தாத்தாக்கள்

பிறந்த நேரத்தைக் கட்டம் கட்டி

சோழிகளை நடனமாட வைத்து

எண்களைக் கொஞ்சம் குழப்பிவிட்டு

நாகரிக வாசத்தோடு பெயரிடப்பட்டாள் புது தேவதை

எந்த முன் கணிப்பையும் ஏமாற்றாமல்

கடல் கடந்து வேலை கிடைத்திருப்பதை

எல்லாருக்கும் பகிர செல்பேசியின் திரையில் ஒளிர்ந்தாள்

‘பேரே வாய்ல நுழையல’ என

நடுச்சாமத்தில் அப்பாவால் பெயரிடப்பட்ட அப்புக்குட்டி.

- நான்சி

****

பூனை
பூனை
Nadezda Gudeleva

பூனை சகுனம்

அவர்கள் இருவர்

ஆளுக்கொரு பூனையை

மடியில் கட்டிக்கொண்டு

எதிரெதிர் திசையில் திரிவார்கள்

எதிரிகளாக இருந்தாலும்

பூனை விஷயத்தில் பிரச்சினையில்லை

அவர்களைப் போலவே

பூனைகளுக்கும் ஒரே தாய்தான்

தாயிடமும் கருவாட்டிடமும்

அண்ட விட்டதில்லை

இப்படியாக அவை இரண்டும்

அவர்கள் இருவரையும்போல

ஒரே மாதிரியும்

வேறு மாதிரியும் வளர்ந்து

மடிவிட்டு இறங்க

நல்ல சகுனம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

- பாலா