கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

மாடல்: சங்கவி ஆனந்த்

டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா?

என் எந்தப் படத்தையும்

திரையில் நீ கண்டதில்லை

இதுவரை

இன்று

வர முயல்வதாய்ச் சொன்ன ஒற்றை வரியில்

மனதோரம் சிறு நம்பிக்கை

மணிக்கொரு முறை

அலைபேசியை எட்டிப்பார்த்தேன்

தரைதட்டிய கப்பல்போல

சலனமற்றுக் கிடந்தது

உன் உள்பெட்டி

ஏதோ ஒரு தருணத்தில்

ஏதோ ஒரு நொடியில்

அந்தப் பாதைவழியே

உன் வருகையை

ஏங்கித் தவித்தது மனம்

‘டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா’

என்றபடி திரையில்

என் பெயரைக் காணாது

தவித்துப்போகும்

உன் தவிப்பின் மிச்சங்களையும்

ஒருவேளை

நீ கண்டிருந்தால்

இத்தனை கூட்டத்திலும்

கண்டிருப்பேன் உன் முகம்

எனைக் காணக் காரணம் தேட

ஒவ்வொரு முறையும்

தடுமாறும் உன் சிந்தை

இப்போதெல்லாம்

சிறப்பாக வேலை செய்கிறது

கண்டுகொண்டேன்

எனைத் தவிர்க்க

நீ கூறும் காரணங்கள்தான்

உலகின் தலைசிறந்த

திரைக்கதைகள்.

- ஜி.ஏ.கௌதம்

சொல்வனம்
சொல்வனம்

சாமி மரம்

வீட்டை விற்றுப்

புறப்பட்டபோது

சாமி மரம் என்ன ஆகும்

என்ற கவலை நெஞ்சையடைத்தது

வாழ வந்த நாள் முதல்

அதுதான் காப்பதாக

அடிக்கடி சொல்வாள் அம்மா

வெள்ளி, செவ்வாய்களில்

அபிஷேகம் செய்து பொட்டிட்டு

அதற்கென எடுத்துவைத்த

புடவை ஒன்றைச் சுற்றிக்கட்டி

அம்மா வழிபடுவதைப் பார்த்திருக்கிறேன்

ரகசியம் பேசுவதுபோலவே இருக்கும்

அவள் வழிபாடு

வெளியே போகும்போதெல்லாம்

துணைக்கு

ஓர் இணுக்கு வேப்பிலையைச்

சூட்டிவிடுவாள் அம்மா

தனித்து நிற்கும் வேம்பிற்குச்

சொல்ல ஏதுமின்றித் திரும்பி நடக்கிறேன்

வீசியடித்த காற்றில்

இற்று விழுந்து

புடவையோடு ஒட்டிக்கொண்டு உடன் வருகிறது

ஓர் இணுக்கு வேப்பிலை.

- லலிதா சங்கரன்

மாமழை

வலையில் சிக்கும்போதாவது

தரையில் குவிக்கும்போதாவது

உயிர்போகும் தறுவாயிலாவது

பெய்திருக்கலாம்

கூடையில்

வாய் திறந்தபடி போகும்

மீன்கள்மீது

பெய்யும் இந்த மாமழை.

- அரவிந்தன்