சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

மழைத்துளிகள் விழுவது போலான படத்தை வால்பேப்பராக வைத்தும் மழைத்துளியொன்று விழும் ஓசையை மெசேஜ் டோனாக்கிய பிறகும்

நடுங்கும் நரம்புக் கைகள்

வந்ததிலிருந்து அம்மாவிடம்

பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை

பேசுவதற்கும் எதுவுமில்லை

என்றிருந்தது

நாங்கள் ஊருக்குத் திரும்பும் நேரத்தில்

என்னிடம் சீவல் வாங்கக் காசு கேட்கிறாள்

வெற்றிலை நரம்புக் கைகள்

அதிகமாக நடுங்குகின்றன

சற்றுமுன் குத்தகைப் பணத்தை

வடிவேலு மாமா கொடுத்துப் போனபோது

‘சரியா இருந்ததுப்பா' என

அவளே சொன்னதுதான்

பேத்திக்கு ஐந்து நூறுரூபாய்த் தாள்களை

நடுங்காமல் கொடுத்ததை நானே பார்த்தேன்

‘எனக்குக் காசு தர ஏனாம்

இம்புட்டு யோசன?'

அம்மா சொன்னதும்

அதிர்ந்து ஐந்து வயதுக்கு மண்டியிட்டேன்

தூரம் போன பிள்ளையை

நடுங்காமல் வாரிக்கொண்டாள்.

- ஆண்டன் பெனி

சொல்வனம்

நினைவில் இருக்கும் மண்வாசம்

மழைத்துளிகள் விழுவது போலான படத்தை

வால்பேப்பராக வைத்தும்

மழைத்துளியொன்று விழும் ஓசையை

மெசேஜ் டோனாக்கிய பிறகும்

போதாக்குறைக்கு

மழை விழும் காட்சியை

யூடியூபில் கண்டுகளித்த போதும்

முன்னெப்போதோ

மூக்கு துளைத்து

நெஞ்சம் குளிரவைத்து

நினைவிலேயே இருக்கும்

மண்வாசத்தை

உள்ளங்கைகளுக்குள் உணரவே முடிவதில்லை.

- தி.சௌம்யா

****

திரும்புதல்

நேற்று

அப்பாவும் அண்ணனும் கனவில் வந்தார்கள்

இருவரும் ஒருசேர வருவது முதல் முறை

நிச்சயமற்ற ஒன்றை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்

அப்பா கைப்பிடித்து

நிதானமாகக் கூட்டிச் செல்கிறார்

நிஜத்தில் இது நடந்ததேயில்லை

நிராசைகளை ஒவ்வொன்றாகச்

சொல்கிறார் அப்பா

நடுங்குகிறேன் நான்

பொடிப்பொடியாக உதிர்கின்றன

ஆசைகள்

ஆசைகள் இல்லாத உலகில்

யாராலும் வாழ முடியாது என்று

பயமாய் இருக்கிறது

நான் திரும்ப யத்தனிக்கிறேன்

திரும்பியும்விடுகிறேன்

கனவிலிருந்து திரும்புவது

காலத்திலிருந்து

திரும்புவதைப் போல

அயர்ச்சியாய் இருக்கிறது.

- கலைச்செல்வி

****

கனவில் செல்லும் குழந்தை

விட்டுவிடவேண்டும்

பொம்மை விற்பதை

தினமும் ஒருமுறையாவது

கனவில் வந்துவிடுகிறது

அழுதபடி செல்லும் குழந்தை.

- அரவிந்தன்