
ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையராஜா
இடம் மாறும் தேடல்
அடுக்குமாடிக் குடியிருப்புகளின்
நடுவில் காரை பெயர்ந்த வீடொன்றின் முன்
மாக்கோலம் இடும் வளைக்கரங்களை
பரிதி முத்தமிடத் தொடங்கும் காலை!
குடல் சரிந்து கிடக்கும் தெருநாயின்
பால் கனத்த மடி கண்டு
திகைத்த கால்கள்மீது
மோதி மோதி முலையருந்தும்
கண் திறவாத நாய்க்குட்டிகள்!
விலைப்பட்டியலைப் பார்த்தபின்
கையில் கிடைத்த உடைக்கு
மனதைச் செலுத்துகிற வித்தை...
கதகதப்பாய் அசைகிறது
காகத்தின் கூட்டில் குயிலின் முட்டை!
- ப்ரிம்யா கிராஸ்வின்
****
அம்மாவும் அப்பாவும்
மேகங்களைப் பார்
அவை அம்மாவும் அப்பாவும் போல
மோதிக்கொள்கின்றன
அம்மாவும் அப்பாவும்
இதேபோல் ஒருநாள்
தென்னை மரங்கள் ஆனார்கள்
அம்மாவும் அப்பாவும்
இரண்டு புதிய இலைகளாக இருந்து
அதே நாளில் சன்னலின்
கதவுகளாகவும் இருந்தார்கள்
பிறகு
ஒன்றன் பின் ஒன்றாகப்போகும்
எறும்புகள் ஆனார்கள்
இருந்ததிலேயே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடித்திருந்தது
அன்றொரு நாள்
பிள்ளையின் கையில்
அருகருகே சிறு விரல்களாய்
இருந்ததுதான்!
- நிலாகண்ணன்

மழையிலாடுவது
விடுமுறை அறிவிப்புக்குக்
காத்திருந்து ஓய்ந்த
மழைக்குப் பிறகான
வண்டல் நிலத்தில்
கால்தடங்கள் பதித்துப் பார்த்தோம்
ஈரம் குடித்துச் சரிந்த
ஒரு பெருமரத்தினடியில்
ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன
பிடித்த கிளைகளில் ஏறி
பக்கத்து டவுனுக்கு
பச்சிலை டிக்கெட் எடுத்துக்கொண்டோம்
எங்களில் வலுவானவன்
உந்திக் கிளையசைக்க
மெல்லமாய் மிதக்கத் தொடங்கியது
எங்களின் வாதரச மரமென்னும்
மழைக்கால ட்ரான்ஸ்போர்ட்.
- கட்டாரி
*****
வேறு வேறு நினைவுகள்
ஒரு தவத்தாலும்
பல தூரிகைகளாலும்
உருவான ஓவியம் ஒன்று
கண்களுக்குக் கண்கள்
வேறு வேறு
நினைவுகளைக் கிளறுகிறது
வரிசையில் வரும் மனங்கனை
வைத்த கண் வாங்காமல் பார்த்து
பல நேரம் ரசிகனின் தேடலைத்
தவறவிடுகிறது
சில நேரம் ரசிகனின் மனதில்
காதலாகிறது
எத்தனை கள்ளத்தனம்
பாருங்கள்
ரசிகனிடம் கண் சிமிட்டும்
இந்த ஓவியம்
இன்னொரு ஓவியனைச்
சந்திக்கும்போது
ரகசியமாய்
கைகுலுக்குகிறது.
- இளந்தென்றல் திரவியம்