
அதிகம் மெனக்கெடுவதில்லை செய்யலாம் என முதல்நாள் யோசித்தால் ஏன் செய்யவேண்டும் என மறுநாள் விலகுவதுண்டு
சண்டைக்குப் பின்னான வீடு
சண்டைக்குப் பின்னான வீடு
போர்த்திக்கொண்டிருக்கிறது
பெருமளவு மெளனத்தையும்
சிறிதளவு அச்சத்தையும்
சூடு குறைந்த பின்பும்
வீட்டின் சுவர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன
பரஸ்பரம் வீசிக்கொண்ட
வார்த்தை அம்புகள்
பிடிமானங்களைத் தளர்த்தி
கீழே விழப் போகும்
அந்த அம்புகளைக்
கூட்டி வெளியில் தள்ள
எப்போதும் தேவைப்படுகின்றன
ஒரு சிட்டிகை அன்பும்
விகல்பமில்லா குழந்தை மனமும்.
- பிரபுசங்கர்.க
****

வாழ்க்கைக் கணக்கு
அதிகம் மெனக்கெடுவதில்லை
செய்யலாம் என
முதல்நாள் யோசித்தால்
ஏன் செய்யவேண்டும் என
மறுநாள் விலகுவதுண்டு
நின்றால் ஓடவும்
ஓடினால் நடக்கவும்
நடந்தால் உட்காரவும்
மனம் மாறிமாறிப் பேசும்
என்னுடன் போட்டி போட்டு
எனக்கு நானே தோற்றுக்கொள்வேன்
தேவைப்பட்டால்
வெற்றியும்
இதில்
எனக்கு லாபமோ
உங்களுக்கு நஷ்டமோ
ஏதுமில்லை.
- பாலா
ஏதொன்றும்...
தனிப்பெருங்கருணையொன்றை
என் கைசேர்ப்பதாகக்
கருதுகிறீர்கள்
எனக்குச் சங்கிலிகளிட்ட
அதே கரங்கள்
தருவது மலராயிருப்பினும்
மணக்கப்போவதில்லை
அமிழ்தமாயிருப்பினும்
உயிர்க்கப்போவதில்லை
அறிக...
காயங்களுக்குப் பின்னான
உங்கள் கருணையில்
ஏதொன்றுமிருப்பதில்லை!
- சாய் மீரா
முரண் பெயர் சூட்டல்!
‘இதுதான் மலை’
அறிமுகப்படுத்தினார் அப்பா
‘இன்னும் நீளமாக இருந்தது மலை’
விளக்குகிறேன் நான்
‘இதில்தான் இருந்தது மலை’
சொல்வான் மகன்
‘இப்படித்தான் இருக்கும் மலை’
வரைந்து காட்டுவான் பேரன்
‘என்னது, மலையா?’
மலைத்து நிற்பான் கொள்ளுப்பேரன்
தேய்ந்துவருகின்றன
மில்லியன் ஆண்டுச் சேகரம்
இந்த நூற்றாண்டு
வளர்ச்சி என்று பெயர் சூட்டியிருக்கிறது
அழிவை.
- ஐ.தர்மசிங்