Published:Updated:

ஹைட்ரோகார்பனின் அடுத்த இலக்கு நன்னிலம்... ‘அப்படியா?’ என்கிறது அமைச்சர் தரப்பு!

ஹைட்ரோகார்பனின் அடுத்த இலக்கு நன்னிலம்... ‘அப்படியா?’ என்கிறது அமைச்சர் தரப்பு!
ஹைட்ரோகார்பனின் அடுத்த இலக்கு நன்னிலம்... ‘அப்படியா?’ என்கிறது அமைச்சர் தரப்பு!

ஹைட்ரோகார்பனின் அடுத்த இலக்கு நன்னிலம்... ‘அப்படியா?’ என்கிறது அமைச்சர் தரப்பு!

"தமிழக மக்களே! நீங்கள் தினமும் ஆறு இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால், அவற்றில் நான்கு இட்லி தமிழகத்தின் டெல்டா பகுதியில் விளையும் பயிர்களிலிருந்து உருவானது" - அண்மையில் பூவுலகின் நண்பர்கள் சென்னையில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் வரலாற்றுப் பேராசிரியரும் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்புப் போராளியுமான ஜெயராமன் இவ்வாறு பேசினார். அவர் பேசிமுடித்த இரண்டு தினங்களில் நதிநீர் இணைப்பு தொடர்பாக அவர் எழுதிய புத்தகம் மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, அவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். களத்தில் இறங்கிப் போராடும் அவர் கைது செய்யப்பட்ட அதே சமயத்தில்தான் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி குழாய் அமைக்கும் பணிகளுக்காக நிறுவனத்தின் கிரேன்கள் அந்தப் பகுதிக்குச் சென்றன.

கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதியன்று தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாய்களால் நிலத்தில் நெருப்பு பற்றிக் கொண்டதை அடுத்து அங்கே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் தொடங்கியது, நீண்டநாள் போராட்டத்தை அடுத்து அந்த நிறுவனம் தற்காலிகமாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை அந்த இடங்களில் நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இதேபோன்ற ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை 'ஜெம் லேபாரட்டரீஸ்' என்னும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்தது ஓ.என்.ஜி.சி. மத்திய அரசு நிறுவனம். நெடுவாசலிலும் நிலம் பாதிப்படையத் தொடங்கியதை அடுத்து அங்கும் மக்கள் போராடத் தொடங்கிய நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் முடங்கின. வேலைகள் நிறுத்தப்பட்டாலும் அரசின் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக எந்தவித உறுதியையும் அளிக்காததால், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் ஊடுருவல் ஏற்படாமல் இருக்க இன்றளவும் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வேலைகளுக்கு இடையே ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான தங்களது எதிர்ப்பை தினமும் பதிவு செய்து வருகின்றார்கள்.  

இதற்கிடையேதான் நன்னிலம் பகுதியிலும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் நுழைந்துள்ளனர். அதுபற்றி களத்திலிருந்து மேலதிகத் தகவலைப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளரும் சூழலியலாளருமான நக்கீரன். 

அவர் கூறுகையில், “கதிராமங்கலத்தில் பணிகள் தொடங்குவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே நன்னிலத்தில் பணிகளைத் தொடங்குவதற்காக ஓ.என்.ஜி.சி களத்தினை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று அடுத்தகட்டமாக நிலத்தை அகழ்வு செய்து குழாய் அமைப்பதற்காக கிரேனுடன் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வந்துள்ளது. இந்த ஊர் அமைதியான இடம் எதுவும் பிரச்னை இருக்காது என்கிற எண்ணத்தில்தான் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். ஆனால், கதிராமங்கலத்தில் ஏற்பட்டது குறித்து ஏற்கெனவே மக்களிடம் விழிப்புஉணர்வு இருந்ததால் ஓ.என்.ஜி.சி-யில் இருந்து வந்தவர்களை நன்னிலத்தில் மறித்துள்ளனர். அதனால், குழாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மேலும் எந்தப் பணிகளும் நடக்காமல் இருக்க மக்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். இன்றுகாலை காவல்துறை அதிகாரிகள் இடத்தை வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். இதற்கடுத்து மதியத்திற்குமேல் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் தெரியும்” என்றார். 

பிரச்னை என்று மக்கள் உணர்ந்த நிலையில் மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-விடம் இதுபற்றி எடுத்துச் செல்லவில்லையா? என்று கேட்டதற்கு, “இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அவர், தொகுதிப் பக்கமே வருவதில்லை என்றே இந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்” என்றார். 

உடனடியாக, மாநில உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜைத் தொடர்புகொண்டு நன்னிலத்தில் நடந்து கொண்டிருப்பது பற்றி தெரிவித்து கருத்துக் கேட்டோம், “முதலில், 'அப்படியா?' என்று கேட்டுவிட்டு, இணைப்பைத் துண்டித்த அமைச்சர் தரப்பு சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்பில் வந்தது. அப்போது பேசிய அமைச்சர், “சாதாரணமாக இயற்கையாக எடுக்கும் வாயுதான். ஆனால், ஓ.என்.ஜி.சி தரப்பு கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று மக்கள் அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஒருவேளை ஓ.என்.ஜி.சி அங்கே பணிகளைத் தொடங்குவது மக்களுக்குப் பிரச்னையாகும் நிலையில், அப்போது என்ன தேவையோ அதைச் செய்துகொள்ளலாம். தற்காலிகமாகப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் பின்னால் நடக்கவிருப்பது பற்றி, தற்போது விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நான் தொகுதிக்கே வரவில்லை என்று சொல்பவர்கள் என் எதிரிகளாகத்தான் இருக்கும். என் தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்” என்று கூறி முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு