Published:Updated:

‘‘பி.ஜே.பி-க்கு நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘பி.ஜே.பி-க்கு  நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி
‘‘பி.ஜே.பி-க்கு நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

கடிதம்ஜூனியர் கோவணாண்டி

“மேன்மை தங்கிய பாரத மாதாவுக்கு, பஞ்சப்பராரியா போயிக்கிட்டிருக்கிற தமிழ்நாட்டுக் கோவணாண்டிகள் சார்பா, ஜூனியர் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கறேன்.

உம்பேரைச் சொல்லிச் சொல்லியே கிட்டத்தட்ட அறுபது எழுபது வருஷமாவே, எங்களை ஆட்டிப்படைக்கிற தேசியக்கட்சிகளோட தொல்லை தாங்கவே முடியல ஆத்தா. என்னதான், தமிழ்நாட்டுக்கும் சேர்த்து நீதான் ஆத்தானு அவங்கள்லாம் சொன்னாலும், மாற்றான்தாய் புள்ளை கணக்காதான் பல வருஷமாவே எங்கள நடத்தறாங்க.

‘எங்க ஆட்சியில பால் வரும், தேன் வரும்’னு சொல்லிச் சொல்லியே அரை நூற்றாண்டைக் காலி பண்ணிடுச்சி காங்கிரஸ். இப்ப என்னடான்னா.. ‘இது கலாசாரப் பூமி.. இங்க நாங்க கை வெச்சா, கங்கை பொங்கும், காவிரி தங்கும், கோதாவரி கொங்கும்’னு கலர்கலரா ரீல் விட ஆரம்பிச்சிடுச்சு பிஜேபி. அதுலயும் இந்த மோடி இருக்காரே... செமத்தையான ஆளு. நடிகர் நடிகைங்க வந்தாக்கா... சட்டுபுட்டுனு சந்திப்பு நடத்தறாரு. ஆனா, காவிரி பிரச்னைக்காக மனு கொடுக்க வர்றோம்னு தமிழகக் கட்சிகள் கேட்டாக்கா... ‘நேரமில்லை’னு கண்டுக்காம விட்டுடறாரு.

‘‘பி.ஜே.பி-க்கு  நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

தமிழ்நாடே தகிச்சிக்கிட்டிருக்கு. ம்ஹூம்... மோடி வாயில இருந்து ஒரு வார்த்தை வரல. ஆனா, ‘தமிழ்பொறுக்கி புகழ்’ சுப்பிரமணிய சுவாமி, ‘தமிழ்நாட்டுக்கு தண்ணியே கிடையாது... வேணும்னா கடல் தண்ணியைக் குடிங்க’னு எகத்தாளமா சவுண்டுவிடறாரு. அந்தச் சுவாமி வாயைத் தொறந்தாலே ஊரே நாறுது. கொஞ்சமாச்சும் ஈனமானம் ரோஷமிருந்தா, இப்படியெல்லாம் பேச முடியுமா? ஆனா, இத எதையுமே தட்டிக்கேக்காம மௌன சாமி வேஷம் போடறாரு மோடி.

காவிரிப் பிரச்னை தீராம இருக்கிறதுக்குக் காரணமே... ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தையும், ‘பாரத் மத்தாக்கி ஜே’ கோஷத்தையும் மாத்தி மாத்திப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்திக்கிட்டிருக்கிற இந்த ரெண்டு தேசிய கட்சிகளோட கடைஞ்செடுத்த சுயநலம்தான்.

இதைச் சொன்னதுமே... ‘உங்க தமிழ்நாட்டு அரசியல்வாதிங்கதானே சுயநலத்துக்காகத் தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைக்கறாங்க’னு சிலர் கேப்பாங்க. சரி, அவங்கதான் சுயநலத்தோட செயல்படுறாங்கன்னா... அதைத் தட்டிக் கேட்டுத் தமிழ்நாட்டைக் காப்பாத்தவேண்டிய முழுப் பொறுப்பு யாரோடது. இந்தியாவையே ஆளறவங்களோடதுதானே? ஏன் தட்டிக்கேக்கல.

மாநிலக்கட்சிகளை இஷ்டம்போலத் தப்புச் செய்யவெச்சி, அவங்களோட லகானைக் கையில பிடிச்சிக்கிட்டு, அந்த மாநிலங்கள்ல தனக்கு வேண்டிய எல்லாத்தையும் சாதிக்கிறதுதான் காங்கிரஸோட வேலை. ஐம்பது, அறுபது வருஷமா அதைத்தான் செய்துகிட்டிருந்திச்சி. அதைக் குறை சொல்லிகிட்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி, இப்ப அதைவிடப் பல மடங்கு சுயநல அரசியலைச் செய்துகிட்டிருக்கு. அதுக்குச் சரியான உதாரணம், இந்தக் காவிரிப் பிரச்னைதான்.

‘‘பி.ஜே.பி-க்கு  நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

கதருக்கும் சரி... காவிக்கும் சரி... அம்பானி, அதானி மாதிரியான பெரும்புள்ளிகளுக்குத் தேவையான விஷயத்தை ஒட்டுக்கா சாதிச்சி கொடுக்கிறதுதான், ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரே குறிக்கோள்னு நடந்துக்கிறாங்க. சொல்லப்போனா, வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியில போனானே தவிர, அவன் இந்தியாவை ஆட்சி செய்யுறதுக்காகப் பயன்படுத்தின பிரித்தாளும் சூழ்ச்சிங்கிறது மட்டும் இன்னமும் வெளியில போகல. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்திருக்கிற அரசுகள் அத்தனையுமே, இந்தச் சூழ்ச்சியை மட்டும் மாத்திக்கவே இல்ல. என்ன... ஒருகாலத்துல லண்டன்ல உக்கார்ந்துகிட்டு உத்தரவு போட்டான் வெள்ளைக்காரன். இன்னிக்கு டெல்லியில உக்கார்ந்துக்கிட்டு உத்தரவு போடறாங்க இந்தக் குல்லாகாரங்க. காவிரி பிரச்னையை வெச்சு, தமிழ்நாட்டுல இருக்கிற அரசியல்கட்சிகள், அமைப்புகள் எல்லாத்துலயும் ஊடுருவி குண்டக்க மண்டக்க வேலையைப் பாக்கறதே பொழப்பா வெச்சிருக்காங்க.

காவிரிப் பாயுற 12 மாவட்டங்களும்... காவிரியை நம்பித் தாகத்தோடு காத்திருக்கிற இன்னும் ஏழெட்டு மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுக் கிடக்கு. இதை நம்பியிருக்கிற தமிழ்நாட்டோட உணவு உற்பத்திக் கேள்விக்குறியாகிக் கிடக்கு. அதை உற்பத்தி செய்யுற உழவனுங்களோட வாழ்க்கை அணையுற மெழுகுவத்தி கணக்காகத் துடிச்சிக்கிட்டிருக்கு. ஆனாலும் இதைப் பத்தி யோசிக்க இந்தியாவோட பிரதமர்னு சொல்லிக்கிற மோடிக்கு நேரமில்ல. ‘தமிழ்தான் உலகத்துலயே மிகப்பழமையான மொழி’னு தேவையே இல்லாத நேரத்துல ட்வீட் பண்ணி கிச்சுக்கிச்சு மூட்டிக்கிட்டிருக்கார். அது மிகப்பழமையான மொழியா இருக்கட்டும்... இல்ல நேத்து பொறந்த மொழியாகூட இருந்துட்டு போகட்டும். அதுவா இப்ப பிரச்னை? உயிர்போகுதுனு துடிச்சிக்கிட்டிருக்கான். அவன ஆஸ்பத்திரியில சேர்த்துச் சிகிச்சை கொடுக்கறத விட்டுட்டு, பொட்டுவெச்சி, புதுச்சட்டையெல்லாம் போட்டுவிட்டு ‘நீதாண்டா ராசா’னு கேக் வெட்டி கொண்டாடுற மாதிரி நக்கல் பண்ணிக்கிட்டிருக்காரு. இப்படிப்பட்டவர்தான் எங்களுக்குப் பிரதமர். எல்லாம் எங்க தலையெழுத்து!

‘‘பி.ஜே.பி-க்கு  நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

நேரு காலத்துல இருந்தே இதுதான் நிலை. அது இந்திரா காந்தியா இருக்கட்டும், ராஜீவ் காந்தியா இருக்கட்டும், நரசிம்ம ராவா இருக்கட்டும், வாஜ்பாயா இருக்கட்டும்... கடைசிக் கடைசியா வந்து உக்கார்ந்துகிட்டு நாட்டாமை பண்ற மோடியாக இருக்கட்டும், இடையில பிரதமர் பதவியில உக்கார்ந்துட்டு போன நண்டு சிண்டுகளா இருக்கட்டும்... தமிழ்நாடுங்கற ஒண்ணு இருக்கவே கூடாதுங்கறதை மட்டும்தான் சிந்திச்சி செயலாற்றியிருக்காங்க. இவங்களுக்கு நடுவுல ஒரே ஒரே நல்ல மனுஷன்... வி.பி.சிங். இந்தியாவை உண்மையாவே நேசிச்ச அந்த மனுஷன்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினார். இத்தனைக்கும் அவரோட கட்சிக்கு தமிழ்நாட்டுல ஆளே கிடையாது. ஆனா, கர்நாடாகவுல அவரோட சகாக்கள் ஆட்சியையே நடத்தினாங்க. அப்படியிருந்தும் தமிழ்நாட்டுக்கு நீதி சமைச்சார் வி.பி.சிங். அத்தனை பிரதமர்களும் தட்டிக்கழிச்ச நடுவர் மன்றத்தைத் துணிச்சலா அமைச்சு கொடுத்தார். ஆனா, ‘நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை’னு கண்ணதாசன் எழுதினது கணக்கா, இன்னிக்கு வரைக்கும் நீதியோட உயிர் ஊசலாடிக்கிட்டிருக்கு.

கண்ணுல வௌக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு, நிலத்தடி நீர் மொதகொண்டு அத்தனையையும் அலசி ஆராய்ஞ்சு தீர்ப்புக் கொடுத்திருக்கு நடுவர் மன்றம். இந்த வேலையைச் செய்யுறதுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த நல்ல மன்றம் சொன்னதை மதிக்கல, அப்ப மத்தியில ஆட்சி செய்த காங்கிரஸ். இப்ப உச்ச நீதிமன்றம் சொன்னதை மதிக்கல, மத்தியில ஆட்சி செய்துகிட்டிக்கிற பிஜேபி. ஆக மொத்தத்துல இந்த ரெண்டு கட்சிகளுமே தமிழ்நாட்டுக்குப் புதைகுழி வெட்டுறதையே வேலையா செய்துக்கிட்டு திரியுதுங்க.

இதுக்கு எதிரா போராடினா... அதையும் குறை சொல்லிக்கிட்டுத் திரியுதுங்க சில ஜென்மங்கள். இங்க உள்ள அரசியல்வாதிங்களோட தவறுகளாலதான் இந்த நிலைனு இன்னிக்கு பேசுறோம். சரி... அது உண்மையாவே இருந்துட்டு போகட்டும். அன்னிக்கி இந்திரா காந்தியோட பேச்சைக் கேட்டுக் கருணாநிதி வழக்கை வாபஸ் வாங்காம இருந்திருந்தா இந்நேரம் கதையே வேற. காவிரிப் பொங்கியிருக்கும்னு ஆளாளுக்குப் பொங்கறாங்க. சரி, அப்படியே அந்த வழக்கு அன்னிக்கு நீதிமன்றத்துல இருந்திருந்தா என்னவாகியிருக்கும்னு யோசிச்சி பாருங்க. இன்னமும் இழுஇழுனுதான் இழுத்துக்கிட்டிருந்திருக்கும். என்ன, இன்னிக்கு தினசரி பேப்பர்ல ‘காவிரி பிரச்னை தொடர்பான தமிழக அரசின் வழக்கு 46 ஆண்டுகளாக விசாரிக்கப்படுகிறது- உலகச் சாதனை’ அப்படினு வந்திருக்கும். வேற ஒரு பருப்பும் வெந்திருக்காது. இதெல்லாம் சொல்றதுக்காக அன்னிக்கு கருணாநிதி செய்ததை நியாயப்படுத்த நான் வரல. ஆனா, அன்னிக்கும் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டித் துரோகம் பண்ணினது... தேசிய கட்சியான காங்கிரஸ்தான்... அதோட தலைவியும் பிரதமருமான இந்திரா காந்திதான்.

‘‘பி.ஜே.பி-க்கு  நல்ல புத்தி கொடு ஆத்தா!’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி

தமிழ்நாடு செய்த புண்ணியம், வி.பி.சிங்னு ஒரு நல்ல மனிதர் பிரதமர் ஆனதால, நடுவர் மன்றம்கிற ஒரு அற்புதமான நீதி அமைப்பு உருவாச்சு. அதுவும் கூடவோ.. குறைச்சலோ... தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரவேண்டியது கட்டாயம்; காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைச்சு, நதிநீரைக் கண்காணிக்க வேண்டும்; அதைக் கண்காணிக்கக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கறது அவசியம்; இப்படிப் பாயின்ட் பாயின்ட்டா தமிழ்நாட்டுக்குச் சாதகமான அம்சங்களை அந்த மன்றம் கண்டுபிடிச்சி கொடுத்திருக்கு. இன்னிக்கும் உச்ச நீதிமன்றம் எதைச் சொல்லியிருக்கு? பதினைஞ்சி டிஎம்சி தண்ணியைக் குறைச்சாலும்... காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அப்படியே நிறைவேத்தணும்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கு.

காவிரி மேலாண்மை வாரியம் வந்துட்டா... கர்நாடகா, தமிழ்நாட்டுல உள்ள அணைகளோட பொறுப்பு அந்த அமைப்புக்கிட்ட போயிடும். கர்நாடகா, தமிழ்நாடு ஏன், மத்திய அரசாங்கத்துக்கே கட்டுப்படத் தேவையில்லாத தனித்துவமான அந்த அமைப்பு, தன் பாட்டுக்குத் தண்ணியை அளவெடுத்து மாசத்துக்கு இவ்வளவுனு திறந்துவிட்டுக்கிட்டே இருக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புபடி தண்ணியைக் கொடுக்கறதுக்குத் தயாரா இருக்கிற கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம்... இந்த அமைப்பை மட்டும் எதிர்க்குது. ஏன்னா, அப்பத்தானே பழையபடி தண்ணியைத் திறந்துவிடாம தில்லுமுல்லு, திருகுதாளம் பண்ணிக்கிட்டே இருக்க முடியும். இதுக்கு வாய்ப்புக் கொடுக்காம நீதி சமைக்க வேண்டிய மத்திய பிஜேபி அரசாங்கமோ... தப்புத்தாளம் போடுது. ஏன்னா, கர்நாடக தேர்தல்ல ஆட்சியைப்பிடிச்சி பழையபடி எடியூரப்பா, கருணாகரரெட்டினு ஆட்களைக் களத்துல இறக்கிவிட்டு, காங்கிரஸுக்குப் போட்டியா கண்ணுமண்ணு தெரியாத அளவுக்குச் சுரங்கங்கள ஸ்வாகா பண்ணி, அடுத்த வருஷம் வரப்போற நாடாளுமன்றத் தேர்தல்ல மறுபடியும் இந்தியாவைப் பிடிக்கறதுக்கு உண்டான வேலைகளைப் பாக்கணுமே!

காங்கிரஸோ... பிஜேபியோ... ரெண்டுமே நமக்கு ஆகாத கட்சிகள்தான். என்னிக்கு ஒட்டுமொத்த இந்தியாவைப் பத்தி சிந்திக்காம கர்நாடகத் தேர்தலை மனசுல வெச்சுக்கிட்டு, இந்த ரெண்டு கட்சிகளும் கபட நாடகம் போட ஆரம்பிச்சாங்களோ.. அப்பவே இந்த ரெண்டும்தான் ‘ஆன்ட்டி இண்டியன்’ கட்சிகள். தேசியத்தைத் தூக்கிவீசிட்டு கட்சியோட சுயநலத்துக்காகத் தமிழ்நாட்டையே தாரை வார்க்க நினைக்கிற இந்த ‘ஆன்ட்டி இண்டியன்’ கட்சிகளைச் சேர்ந்தவங்க.. தமிழ்நாட்டுல போராடுறவங்கள ‘ஆன்ட்டி இண்டியன்’னு சொல்றதுக்கு எந்தத் தகுதியும் இல்ல.

ஆத்தா... பாரத மாதா..! என்னால முடிஞ்சவரைக்கும் பாரத்தை இறக்கி வெச்சிட்டேன். இதையெல்லாம் ஒட்டுக்கா அந்த ஜென்மங்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவெச்சி, அவங்களுக்கெல்லாம் நல்ல புத்திய கொடு. இல்லாட்டி... நாளைக்குப் ‘பாரத் மத்தாக்கி ஜே’னு உன்னைக் கூப்புடறதுக்குக்கூட ஆள் இல்லாத நிலையை இந்த ‘ஆன்ட்டி இண்டியன்ஸ்’ அத்தனைபேரும் சேர்ந்து உருவாக்கிடுவானுங்க ஜாக்கிரதை!

இப்படிக்கு
ஜூனியர் கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு