Published:Updated:

மேயர் பூனை, கவுன்சிலர் காண்டாமிருகம்... விலங்குகளின் 'சர்கார்'!

உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என ஒரு பத்திரிகையாளர் ஒருவர் டியூக்கிடம் கேட்டார். அதற்கு மூன்று லொள், இரண்டு வள், நீண்ட உர் என மூன்று சப்தங்கள் டியூக்கிடம் இருந்து வந்தன.

மேயர் பூனை, கவுன்சிலர் காண்டாமிருகம்... விலங்குகளின் 'சர்கார்'!
மேயர் பூனை, கவுன்சிலர் காண்டாமிருகம்... விலங்குகளின் 'சர்கார்'!

ரசியலைப் பொறுத்தவரையில் பலமானவர்கள் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் அரசியலில் மனிதர்களைத் தவிர, விலங்குகளும் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற வரலாறும் இருக்கிறது. விலங்குகள் வெற்றிபெற்றால் எப்படி ஆட்சி நடத்தும் என்றுதானே யோனை செய்கிறீர்கள். விலங்குகளால் தோற்கடிக்கப்பட்டவர்களில் யார் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்களோ அவர்தான் ஆட்சி நிர்வாகத்தைக் கவனிப்பார். ஆனால், அங்கே பதவி வகிப்பது, ஜெயித்த விலங்குகள்தான். அவற்றில் சில விலங்குகளைப் பற்றி பார்ப்போம்.

போஸ்கோ ராமோஸ் (bosco ramos)

Photo - Emerging Horizons

சாதாரணமாக அரசியலில் போட்டியிட பண பலமும், படை பலமும் இருக்க வேண்டும். சாதாரண நபர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு வரும் துன்பங்கள் கணக்கில் அடங்காதது. இங்கு இப்படியிருக்க அமெரிக்க அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. அமெரிக்க தேர்தலில் போட்டியிட யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் போட்டியிடலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சணல் என்னும் நகரில் 1981-ம் ஆண்டு மேயர் தேர்தல் நடைபெற்றது. தான் ஓட்டுக்கேட்டு போனால் தோற்றுப்போவோம் என நினைத்த நபர் ஒருவர், தனது லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாயைத் தேர்தலில் நிற்க வைத்தார். இதனைப் பலரும் கேலி செய்தனர். ஆனால் போஸ்கோ எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் பெற்று, தன்னுடன் போட்டியிட்ட இருவரை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அத்தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. என்னதான் போஸ்கோவிற்கு பின்னால் இரண்டாம் இடம் பெற்றவர் ஆட்சிக்கு வந்தாலும், போஸ்கோவிற்கு வணக்கம் தெரிவித்த பின்னரே ஆட்சியைத் தொடர முடிந்தது. அதன் பின்னர் தான் இறந்து போகும் வரை (1994) மேயராகத்தான் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நாயின் நினைவைப் போற்றி சணல் நகர அஞ்சல் அலுவலகத்தில் போஸ்கோவிற்கு சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. 

கக்கரெக்கோ (Cacareco)

Photo - The Museum of Hoaxes

1958-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள சாபாலோ நகர சபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் போட்டியிட்ட பலரும் ஊழல்வாதிகளாக இருந்தனர். அதனை எதிர்த்து பத்திரிகையாளர் ஒருவர், மற்ற வேட்பாளர்களுக்கு எதிராகக் காண்டாமிருகத்தை வேட்பாளராக நிறுத்தினார். அதனைத் தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அப்பத்திரிக்கையாளர் போராடி காண்டாமிருகத்தை நிற்க வைத்தார். எதிர்பார்த்தபடியே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஊழல்வாதிகளின் முகத்தில் கரியைப் பூசியது காண்டாமிருகம் என்ற குரல்களும் எழத் தொடங்கின. அதன் பின்னர் சகல மரியாதையுடன் மிருகக் காட்சி சாலைக்கு அனுப்பப்பட்டது. 

கிளே ஹென்றி (clay henry)

Photo - Houstonia

பெயரைப் பார்த்தால் ஹாலிவுட் நடிகரின் பெயர்போல இருக்கும். ஆனால், கிளே ஹென்றி என்பது ஓர் ஆட்டின் பெயர். ஒரு நாளைக்கு 40 பியர்கள் குடித்து அமெரிக்கர்களின் மத்தியில் புகழ்பெற்றது. 1986-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லாஜிட்டாஸ் நகரத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் வால்டர் மிஷர் எனும் பணக்காரர், ஹென்றியை வேட்பாளராக நிறுத்தினார். ஹென்றியும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. 1990-ம் ஆண்டில் புகழின் உச்சியில் இருந்த ஹென்றி பல்வேறு திரைப்படங்களில் தலைகாட்டியது. லாஜிட்டாஸ் நகர மக்களின் அன்புக்குரியதாக ஹென்றி விளங்கியது. ஹென்றியின் புகழ் பனியன்களிலும் அச்சிட்டு விற்பனை செய்யும் அளவிற்கு அதன் புகழ் அதிகமானது. 

டியூக் (duke)

Photo - Mashable

அமெரிக்கா மாகாணத்தின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள கோர்மொனாட் எனும் நகரத்தில் 2014-ம் ஆண்டு டியூக் எனும் நாய் மேயர் பதவிக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தது. டியூக் நாயானது, கிரேட் பைரனிஸ் வகையைச் சேர்ந்தது. இதற்கு 9 வயதாகும் போது தேர்தலில் நின்றது. மொத்தம் மூன்று முறை போட்டியிட்ட டியூக் மூன்று முறையும் வெற்றி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் டியூக்கிற்கு எதிராக நின்ற வேட்பாளர் கூட, டியூக்கிற்கு வாக்களித்ததுதான். உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என ஒரு பத்திரிகையாளர் ஒருவர் டியூக்கிடம் கேட்டார். அதற்கு மூன்று லொள், இரண்டு வள், நீண்ட உர் என மூன்று சப்தங்கள் டியூக்கிடம் இருந்து வந்தன. 

பார்சிக் (Barsik)

Photo - Junkee

சைபீரியாவில் உள்ள பர்னால் எனும் நகரில் வசிக்கும் பூனையின் பெயர்தான், பார்சிக். கடந்த 2014-ம் ஆண்டு நகர சபை தேர்தலில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது பார்சிக். மொத்த வாக்கு சதவிகிதத்தில் 91 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களையும் தோற்கடித்திருந்தது. இங்கும் ஊழலைப் போக்கும் வகையில் பார்சிக் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டது. ஊழல்வாதிகளின் மீது இருந்த கோபத்தில் மக்கள் பார்சிக்கிற்கு தங்கள் வாக்குகளை அள்ளித் தெளித்தனர். 

இந்த வரிசையில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த வில்லி பீன் (Willie Bean), பிரான்சிலுள்ள மார்ஷெய்ல் நகர மேயர் பதவிக்கு சஸ்ஸீஸ் போன்ற நாய் வகைகளும், அமெரிக்காவில் உள்ள பூண் கவுண்டி நகரத் தேர்தலில் லக்கி லூ (Lucy Lou) போன்ற நாய்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் விலங்குகள் நிறுத்தப்படும் தொகுதி, ஊழல் அதிகரித்த தொகுதியாகவே இருக்கிறது.