Published:Updated:

எடப்பாடி பழனிசாமியிடம் கரூர் சிறுமி ரக்‌ஷனா வைத்த 2 வேண்டுகோள்கள்!

எடப்பாடி பழனிசாமியிடம் கரூர் சிறுமி ரக்‌ஷனா வைத்த 2 வேண்டுகோள்கள்!
எடப்பாடி பழனிசாமியிடம் கரூர் சிறுமி ரக்‌ஷனா வைத்த 2 வேண்டுகோள்கள்!

``ரக்‌ஷனாவின் அப்பாதான் பேசறேன்" என்று சொல்லும்போதே ரவீந்திரனின் குரலில் மகிழ்ச்சியும் பெருமிதமும் வழிந்தது. சமூக நலத்துறை சார்பாக சமூக சேவை செய்ததற்காக வழங்கப்படும் விருதினைப் பெற்றிருக்கிறார் கரூர் சிறுமி ரக்‌ஷனா. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விருதோடு, 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் பெற்றார். ரக்‌ஷனாவின் தந்தையிடம் தொடர்ந்து பேசினேன். 

``கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ராமேசுவரப்பட்டி கிராமத்தில் நாங்கள் இருக்கிறோம். நான் விவசாயமும், கெமிக்கல் வியாபாரமும் செய்துகொண்டிருக்கிறேன். என் மகள் ரக்‌ஷனா, கரூர் வேலம்மாள் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறாள். சின்ன வயசுலேருந்தே சமூகப் பணிகளைச் செய்வதில் ரொம்பவே ஆர்வம். நாங்க, அவளின் ஆர்வத்துக்கு உதவியாக இருக்கிறோம். 4 மணிநேரம் இரண்டு கைகளால் சிலம்பு சுற்றியது, 10,000 பேருக்கு 10,000 மரக்கன்றுகளைக் கொடுத்தது, 10 மொழிகளில் மரம் வளர்ப்பது பற்றிய பேசியது, புவி வெப்பமயமாதலைப் பற்றிய விழிப்பு உணர்வு தரும் 1 லட்சம் நோட்டீஸை விநியோகித்தது என, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் நான்கு முறை இடம் பெற்று சாதித்திருக்கிறாள் ரக்‌ஷனா. கராத்தே, யோகாவிலும் மாநில அளவில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 

தன் வாழ்நாளில் 50 பேரை கண் தானம் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற லட்சியம் ரக்‌ஷனாவுக்கு உண்டு. அதன் பயணமாக, இதுவரை 1,600 பேரை கண்தானம் செய்ய வைத்திருக்கிறாள். பழங்குடியினரின் பிள்ளைகள் 3 பேர், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்தும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். தான் உண்டியலில் சேமித்து வந்த, பணம் 15,000 ரூபாயை, அந்த மாணவிகளுக்குத் தந்து, அவர்களின் படிப்பைத் தொடர வழி செய்தாள். சின்ன வயதில் ஆரம்பித்த ஒரு பழக்கம் மரக்கன்றுகளை வளர்த்து, மற்றவர்களிடம் கொடுப்பது. 8 ஆண்டுகளாக, சுமார் 80,000 மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள். அந்தப் பரிசை இன்னும் அர்த்தபூர்வமாக்குவதற்காக, தண்ணீர் தினம், வன நாள், ஓசோன் தினம், பூமி தினம் என்று சிறப்பான நாள்களில் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள் ரக்‌ஷனா. கடும் வறட்சி நிலவும் காலத்திலும் மா, பலா, தென்னை மரங்களைக் காக்க முடியும் என்பதற்குப் புதிய பாசன முறையை வலியுறுத்தி வருகிறாள். ஒரு தென்னை மரத்துக்குச் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் 200 லிட்டர் ஆகிறது என்றால், ரக்‌ஷனா சொல்லும் முறையில் இன்னும் குறைவான நீரே போதுமானது." என்றவரிடம் தமிழக முதல்வர் அளித்த விருது பற்றிக்கேட்டோம். 

``100 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகத்தில் இருந்த இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று ரக்‌ஷனா அடிக்கடி சொல்வாள். அதற்காக, அவளின் யோசனைதான் உலக மக்கள் தொகையின் மூன்று மடங்கு எண்ணிக்கையில் விதைப்பந்து தூவும் திட்டம். ஏன் மூன்று மடங்கு என்றால், விதைப்பந்துகளைப் பொறுத்தவரை வீசப்படும் மூன்றில் ஒன்றுதான் முளைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அடுத்து, விதைகளைப் பரப்பும் பறவைகளை வேட்டையாடுதலை நிறுத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இதுவரை தான் செய்த சமூகப் பணிகள் பற்றியும் ஐ.நா பொதுச்செயலாளலருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார். ரக்‌ஷனாவின் செயல்பாடுகளை அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த சமூகப் பணிக்கான விருதுக்குத் தேர்ந்தெடுத்தார்கள். அதைப் பெறுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்தபோது, ரக்‌ஷனா இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தாள்.

`பிளாஸ்டிக் தடை என்பது எல்லோரும் பாராட்டும் சிறப்பான முயற்சி. இதன்மூலம் தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கும் நன்மை செய்திருக்கீங்க. அதேபோல, பறவைகளை வேட்டையாடுதலைத் தடுக்கவும், மக்கள் தொகையின் மூன்று மடங்கு எண்ணிக்கையில் விதைப் பந்து தூவ வேண்டும். இந்த இரண்டையும் செய்தால், காடு பெருகி, மழை அதிகரித்து விவசாயம் நல்ல படியாக நடக்கும். அதை நீங்கள் செய்ய வேண்டும்' என்றாள் ரக்‌ஷனா. முதல்வரும், `நிச்சயம் முயற்சி எடுக்கிறேன்' என்று நம்பிக்கை அளித்தார்." என்று பெருமையுடன் சொல்கிறார் ரக்‌ஷனாவின் தந்தை ரவீந்திரன்.