Published:Updated:

50 நாட்களில் செல்லாக்காசுக்காக மோடி என்னென்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?#Demonetisation

50 நாட்களில் செல்லாக்காசுக்காக மோடி என்னென்ன சொல்லியிருக்கிறார்  தெரியுமா...?#Demonetisation
50 நாட்களில் செல்லாக்காசுக்காக மோடி என்னென்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?#Demonetisation

50 நாட்களில் செல்லாக்காசுக்காக மோடி என்னென்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?#Demonetisation

'கறுப்பு பணம், கள்ளநோட்டு மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி நவம்பர் 8–ம் தேதி அதிரடியாக அறிவித்தார். ''இதனால் ஏற்படும் விளைவுகள் 50 நாட்களில் சீரடைந்து விடும். நாட்டிற்காக சில சிரமங்களை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்'' எனவும் மோடி கூறியிருந்தார். 

மோடி தெரிவித்திருந்த அந்த 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. வரும் 31–ம் தேதிக்குள் நாட்டில் நிலவும் அனைத்து பணப் பிரச்னைகளும் தீர்ந்து விடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த தினத்தில் இருந்து, தனது கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பற்றி, பல இடங்களில் மோடி பேசியிருக்கிறார். மோடியின் உரையில் உணர்ச்சிப்பூர்வமும், கேலி, அனுதாபம், கோபம் என அனைத்து ரியாக்‌ஷன்களும் கலந்து இருந்தன. 'டீமானிட்டைசேஷன்' அமல்படுத்தப்பட்டதில் இருந்து மோடி பேசிய பேச்சுகளில் இருந்து சில இங்கே.. 

தாயை தவிக்க விட்டவர்களும் டெபாசிட் செய்யலாம்..

ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு மறுநாளே ஜப்பான் சென்ற மோடி, அங்கு பேசியபோது,'' நியாயமாக பணத்தைச் சம்பாதித்தவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். தாயை, முதியோர் இல்லத்தில் தவிக்க விட்ட மகன்கூட, தனது தாயின் வங்கிக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ளலாம்.'' என்றார். 

என்னை நெருப்பில் போட்டு எரியுங்கள்..

நவம்பர் 13-ம் தேதி, கோவாவில் கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது 1,000, 500 ரூபாய் நோட்டுகள் தடை பற்றி உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசுகையில், ''நான் வெறும் 50 நாட்கள் மட்டுமே கேட்கிறேன். டிசம்பர் 30-ம் தேதி வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். அதன் பிறகும் எனது நடவடிக்கைகளில் ஏதேனும் தவறு இருந்தால், நாட்டிற்காக எந்த தண்டனையையும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ளத் தயார். 70 ஆண்டுகளாக கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாட்டிற்காக நான் என் உயிரை விடவும் தயாராக உள்ளேன்.'' என்றார். 

மக்களை விடுவிக்கப் பாடுபடுகிறேன்..

நவம்பர் 20-ம் தேதி ஆக்ராவில் 'பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை' தொடங்கி வைத்துப் பேசிய  பிரதமர் மோடி,''ஊழல் செய்தவர்கள் இப்போது ஒழுங்கான பாதைக்குத் திரும்பி வருகின்றனர். மக்கள் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நாட்டு மக்களை கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்தும், ஊழல் பிடியிலிருந்தும், கள்ளப் பணத்திலிருந்தும் விடுவிக்கப் பாடுபடுகிறேன். இதற்காக மக்கள் தந்து வரும் ஒத்துழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்'' என்றார். 

சொந்த நலனுக்கு அல்ல..

நவம்பர் 22-ம் தேதி பி.ஜே.பி எம்.பிக்கள் மத்தியில் பேசிய மோடி, ''நாம் ஏழை மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வந்துள்ளோம். சொந்த நலனுக்காக அல்ல. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை மக்கள் நலனுக்கானது. ஊழல், கறுப்புப்பணம், கள்ளநோட்டுகளுக்கு எதிரானது. இதற்கு எதிராக, ஒரு நீண்ட போரில் ஈடுபட வேண்டும்'' என்றார். 

பிச்சைக்காரர் கூட டெபிட் கார்டு வைத்திருக்கிறார்..

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பி.ஜே.பி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி,''ஒரு பிச்சைக்காரர் டெபிட் கார்டு வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல வீடியோ பார்த்தேன், ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்போது பிச்சைக்காரர்கள் கூட டெபிட் கார்டு பயன்படுத்தும்போது நாம் ஏன் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறக் கூடாது?'' என்றார். 

பணக்காரர்கள் கெஞ்சுகிறார்கள்..

''பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு பணக்காரர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள். . ஏழைகளின் வீட்டுக் கதவைத் தட்டி, கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யும்படி கெஞ்சுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். இப்போது நீங்கள் பொறியில் சிக்கியிருக்கிறீர்கள்- 100 ரூபாய் நோட்டுக்கு முன்பு மதிப்பு இருந்ததா? ஆனால், 100 ரூபாய் இப்போது மிக முக்கியமானதாக ஆகிவிட்டது'' என கான்பூரில் நடந்த பி.ஜே.பி கூட்டத்தில் மோடி சூளுரைத்தார். 

எல்லாம் சரி, 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லையே. இன்னும் எத்தனை நாட்கள் சாமான்ய மக்கள், வங்கிகளிலும், ஏ.டி.எம்-களிலும் வரிசையில் காத்திருக்க வேண்டி வருமோ?

-ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு