Published:Updated:

ஒரு லட்சம் கோடி அறிவித்து பீகாருக்கு டாட்டா காட்டிய மோடி!

எம்.குமரேசன்
ஒரு லட்சம் கோடி அறிவித்து பீகாருக்கு டாட்டா காட்டிய மோடி!
ஒரு லட்சம் கோடி அறிவித்து பீகாருக்கு டாட்டா காட்டிய மோடி!
ஒரு லட்சம் கோடி அறிவித்து பீகாருக்கு டாட்டா காட்டிய மோடி!

டந்த பொது தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிப்பை வெளியிட்டார். ''மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா... ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.'' என வாக்குறுதி அளித்தார். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில், வெறுத்துப் போய்க் கிடந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் அறிவிப்பு 'மாயை' என்று தெரிந்தாலும் வேறு வழியில்லாமல், அவரை நம்பினர். ஆனால், சுவிஸ் வங்கியில் கோடிகளில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்குப் பதிலாக பண மதிப்பு நீக்க நடவடிக்கையில்தான் பிரதமர் ஈடுபட்டார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் சந்தித்த துன்பங்களும் துயரங்களும் அளவில்லாதது. வங்கி வரிசைகளில் காத்துக்கிடந்தும், சிகிச்சைக்குப் பணம் இன்றியும் நாடு முழுக்க 70-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. பிரதமர் அறிவிப்பு எல்லாம் வெற்றுக் காகிதங்கள் என இப்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் சமயத்தில், பெரிய பெரிய அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர், இப்போது அவை ஒவ்வொன்றையும் பறக்க விட்டுக் கொண்டிருப்பது பற்றி ஒரு பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ''பீகார்  மாநிலத்தின் மேம்பாட்டுக்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.'' என கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. பீகாருக்கு இவ்வளவு பணமா...? என அப்போது மற்ற மாநிலங்கள் வாயைப் பிளந்தன. ஆனால், அறிவித்ததுபோல எந்த ஒரு தொகையையும் அவர், பீகார் மாநிலத்துக்கு அளித்துவிடவில்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டு 18 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த மாநிலத்துக்கு சல்லிக்காசு கிடைத்துவிடவில்லை.

பீகாருக்கு மட்டுமல்ல, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் ரூ.80 ஆயிரத்து 68  கோடி வழங்கப் போவதாக பிரதமர் மோடி தாராளம் காட்டினார். இத்தனைக்கும் அந்த மாநிலம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பும் காற்றில்தான் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முஃப்தியின் 'ஜம்மு- காஷ்மீர் மக்கள் முன்னேற்றக் கட்சி'யின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்துக்கும் அறிவிக்கப்பட்டது போல, எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு அறிவிப்போடு நிற்கிறது. ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் மாநிலத்துக்கே இந்த நிலை....!

ஒரு லட்சம் கோடி அறிவித்து பீகாருக்கு டாட்டா காட்டிய மோடி!

கடந்த 2016 ஜுன் 15-ம் தேதி பிரதமர் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டார். சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலா வசதிகளைப் பெருக்கும் நோக்கத்தில் 43,589 கோடி ரூபாய் வழங்கப் போவதாக தெரிவித்தார். இதுவரை அந்த மாநிலத்துக்கு எந்த பணமும் போய்ச் சேரவில்லை. சிக்கிம் மாநிலத்தைப் பொறுத்தவரை, கடந்த 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரை சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சியைச் சேர்ந்த பவான்குமார் சாம்லிங்தான் முதல்வராக உள்ளார். இனி அடுத்த தேர்தல் 2019-ம் ஆண்டுதான் நடைபெறும்.

உத்தரப்பிரதேச மாநில தேர்தல் நடைபெற்று வருகிறது. இப்போதும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அந்த மாநில மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளனர். ஆனால், கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 'பிரதமர் தாராளமாக லட்சக் கோடிகளில் வாக்குறுதி அளிக்கிறாரே... ஆனால், அறிவித்ததுபோல வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறாரா...?' என்பதை அறிவதற்காக மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உண்மை நிலவரம் கேட்டிருந்தார். அதில்தான், இந்த அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அனில் கல்காலி கூறுகையில், ''எவ்வளவு பெரிய அறிவிப்புகளை எல்லாம் மோடி வெளியிடுகிறார். ஆனால், தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காதது அவரது பொறுப்பற்றத்தன்மையைக் காட்டுகிறது. வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அதனை மறந்து விடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.? இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் தேர்தல் நடைபெறுவதால் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். நான் ஒரு விஷயம்தான் சொல்வேன்... 125 கோடி மக்களும் மோடியின் அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.'' என்று எச்சரிக்கிறார்.

- எம்.குமரேசன்