Published:Updated:

'சு.சுவாமி, தமிழர்களை தரக்குறைவாகப் பேசுவதற்கு இதுதான் காரணம்'

விகடன் விமர்சனக்குழு
'சு.சுவாமி, தமிழர்களை தரக்குறைவாகப் பேசுவதற்கு இதுதான் காரணம்'
'சு.சுவாமி, தமிழர்களை தரக்குறைவாகப் பேசுவதற்கு இதுதான் காரணம்'

'துணிச்சலான மனிதர்' என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட சுப்பிரமணியன் சுவாமிதான் கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான இவர் சென்னை, மயிலாப்பூரில் பிறந்தவர். அண்மைக்காலங்களில், தமிழர்களை தொடர்ச்சியாக அவமதித்து பேசிவரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பொறுக்கிகளா தமிழர்கள் !

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுகோரி லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மெரினாவிலும், அலங்காநல்லூரிலும் மிகப்பெரிய தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தமிழர்களுக்கு எதிராகப் பேசினார். "உச்ச நீதிமன்றத் தடையை மீறி தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடந்தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்'' என பி.ஜே.பி-யின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் அதே பதிவில், போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்களை 'பொறுக்கிகள்' என்று தரக்குறைவான வார்த்தைகளில், திட்டியிருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பியிருந்தனர். அது மட்டுமன்றி ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் பேசிவருகிறார் என்ற காரணத்துக்காக அவரையும் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டிருந்தார் சுவாமி. சுப்பிரமணியன் சுவாமியின் இந்த நாகரிகமற்ற விமர்சனங்களை பி.ஜே.பி தரப்பும் பெரிதாகக் கண்டிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மீனவர்களை கொதிக்க வைத்தபதிவு !

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 7-ம் தேதி தன் சகாக்களுடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால், படுகொலை செய்யப்பட்ட மீனவனுக்காக தமிழகமே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளார் சுவாமி. அதில், 'தமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில் மறைந்து வாழ்வதை விட்டுவிட்டு, கட்டுமரங்களை எடுத்துக்கொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராகப் போரிட வேண்டும்.' என கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு தமிழகத்தில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் வலுத்து வருகின்றன. தமிழர்களுக்கு எதிரான சுப்பிரமணியன் சுவாமியின் இந்த மனநிலைக்கு என்ன காரணம்? அவரது கருத்துகளுக்கு பின்னால், வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் உள்ளதா? என்ற கேள்விகளோடு தமிழக அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்...

இதனால்தான் பேசுகிறாரா ?

''விடுதலைப்புலிகளால் சுவாமிக்கு அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2009 -ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு சக்திகளுடன் கைகோத்துக்கொண்ட இலங்கை,  விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்தது. இதையடுத்து சுவாமிக்கு கொடுக்கப்பட்ட இசட் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்தனர். ஆனாலும் அவருக்கு அளித்த பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. அரசின் உயர்ந்த பாதுகாப்பை தொடர்ச்சியாகப் பயன்படுத்திக்கொண்டு வலம்வருவதற்காகவே  தொடர்ச்சியாக தமிழர்களை அவதூறு பேசி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி'' என்று  அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவருடைய இந்தப் பேச்சை பெரிதுபடுத்தி பெரிய மனிதராக மாற்றிவிடக் கூடாது என்றும் அவர்கள் சொல்கின்றனர். இதனை உறுதி செய்யும் வகையிலேயே சுப்பிரமணியன் சுவாமியின் கடந்த கால செயல்பாடுகளும் இருந்து வந்துள்ளது. 'நேஷனல் ஹெரால்டு வழக்கு' மற்றும் '2 ஜி வழக்கு' உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைத் தொடுத்தவர் என்ற வகையில், தான் முக்கியமான நபராக இருப்பதாகவும் அதனால், தனக்கு இசட் பாதுகாப்பு தொடர வேண்டும் என்று கோரியிருக்கிறார் சுவாமி. 

''பொதுவாக தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உயர்தர பாதுகாப்பை அவ்வப்போது உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். இந்த ஆய்வில், தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது தெரியவந்தால், உடனடியாக பாதுகாப்பை திரும்பப் பெற்றுவிடும். அதன் காரணமாகவே சுப்பிரமணியன் சுவாமி தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு அசாதாரணமான சூழலை செயற்கையாக அவரே உருவாக்கிக் கொள்ளும் முயற்சியாகவே தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகப் பேசிவருகிறார்'' என்றும் சொல்கிறார்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பாதுகாப்பை வழங்கியிருப்பதோடு அவர் தங்குவதற்கு வசதியாக டெல்லியில், அரசு பங்களா ஒன்றையும் ஒதுக்கியிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.!

- கே.புவனேஸ்வரி

பின் செல்ல