Published:Updated:

தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல! #IromSharmila

தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல! #IromSharmila
தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல! #IromSharmila

ணிப்பூர் தேர்தலில், இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்திருப்பது மக்களின் தீர்ப்புமல்ல; மகேசனின் தீர்ப்புமல்ல; அரசியல் தலைவர்கள் காலங்காலமாக ஏமாற்றி வெற்றி பெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையே வென்றிருக்கிறது.

கடந்த 2000ஆம் ஆண்டு, நவம்பர் 2ஆம் தேதி, ஆரம்பிக்கப்பட்டது இரோம் ஷர்மிளாவின்  பொதுவாழ்வு. ஆனால், 16 வருடங்களுக்குமுன் அரசியல் களத்தில் குதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், ஷர்மிளா  இந்தியா ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவில்லை. அது முழுக்க முழுக்க ஓர் அறப் போராட்டமாக துவங்கியது!

அவர் உண்ணாவிரதம் துவங்கி மூன்றே நாட்களில், அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார் என்று கைது செய்யப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று மூக்கு வழியாக உணவு  வழங்கப்பட்டது. அவரை வாழும் பெண் காந்தி என்று கூட அழைத்தனர்.

ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின்படி, தற்கொலை முயற்சி செய்தவரை ஒராண்டு மட்டுமே சிறையில் வைக்கமுடியும். ஆதனால், அவர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை, தற்கொலை முயற்சியாகவே கருதி, ஒவ்வொரு ஆண்டும் அவரை விடுவித்து, மீண்டும் கைது செய்தது, இந்திய அரசு.

10 ஆண்டு மேலாக நடக்கும் அவரின் போராட்டம் தீவிரமடையந்ததையடுத்துதான், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்ட ஆரம்பித்தது தேசிய ஊடகங்கள். இங்குதான் இரோம் ஷர்மிளா மீது மணிப்பூர் மக்கள் அதிருப்தி அடைவதற்கு முதல் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அவருக்கும், இந்தியாவில் பிறந்த பிரிட்ஷ்காரரான தேஷ்மொண்ட் கொளடிங்ஹோ (Desmond Coutinho) என்பவருக்கும் இருந்த அழகான காதல் கதையை, வெளிச்சம் போட்டு காட்டியது தேசிய ஊடகங்கள். ஆனால், மணிப்பூர் மக்களால் ஷர்மிளாவின் காதல் கதையை ரசிக்கமுடியவில்லை; ஏனென்றால், நம் பொதுபுத்தியில், ஒருவர் மக்களுக்காக அரசியல் சாராத பொதுவாழ்வில் ஈடுப்பட்டால், அன்று முதலே அவரை தியாகியாக பார்க்கத் துவங்கிவிடுவார்கள். அந்த தியாகி, காதல், கல்யாணம் என்று போனால்...? அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்போகும் அல்லவா?

ஆனால், அப்போதும் இரோம் ஷர்மிளா தன்னுடைய நோக்கத்தில் தெளிவாகவே இருந்தார். “என் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும்வரை என் திருமணம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்றே கூறினார். அதுமட்டுமல்ல...போராட்டத்தில் இருந்தபோது, தனது அம்மாவைக்கூட  சந்திக்க மறுத்தார். ஆனால், மணிப்பூர் மக்களுக்கு இவை எதுவுமே புலம்படவில்லை. அவரின் காதலை வெளிப்படையாக எதிர்த்தனர். இரோம் ஷர்மிளா தனது நோக்கத்தில் இருந்து திசைமாறி செல்வதாக விமர்சித்தனர்.

அவ்வளவு ஏன்? அவர் கடந்த ஆண்டு, ஆகஸ்டு மாதம், தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டதற்கு, அவரின் காதலரே காரணம் என்று நினைத்தார்கள், அம்மாநில மக்கள். ஆனால், அவர் போராட்டத்தின் வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொண்டார் என்பதே பலரும் உணரமுடியாத உண்மை!

மணிப்பூர் மக்களின் இந்த மனநிலைக்கு மற்றோரு காரணமும் உண்டு.  இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தை, மக்கள் போராட்டமாக அவர்கள் பார்க்கவில்லை. மாறாக, இரோம் ஷர்மிளா என்ற தனி மனுஷியின் போராட்டமாகவே மணிப்பூர் மக்கள் கருதினர். இதனை ஷர்மிளா முழுமையாக உணர்ந்தபோதுதான், தனது போராட்டத்தின் மறுமலர்ச்சியாக அரசியலில் களமிறங்க ஆயுத்தமானார். ” என் உண்ணாவிரத போராட்டத்தை மக்கள் என் கடமையாக மட்டுமே நினைத்தார்கள். ஆனால், உண்மை அது அல்ல; இது மக்களின் போராட்டம்! இதனை உணர்த்தவே அரசியலில் நான் நுழைந்தேன். ஒருவேளை, நான் முதலமைச்சரானால், அதிகாரம் என் கையில் வரும். அப்போது ஒரு தலைமை பொறுப்பில் இருந்து, மக்கள் குரலாக மட்டும் நான் செயல்படுவேன்”, என்று ஒரு பேட்டியில் கூறியதன் பின்னணி இதுதான்!

மேலும், அவர் போட்டியிட்ட தவுபால் தொகுதியில் தற்போது வென்றிருக்கும் மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் ஐயோபி சிங், இதற்குமுன் அந்த தொகுதியில் மூன்று முறை வெற்றிப்பெற்றிருக்கிறார். அவர் தேர்தல் சமயத்தில் மட்டும், வாக்காளர்களை தம்பக்கம் இழுப்பதில் வல்லவர். அவரின் அரசியல் அனுபவத்தை ஒப்பிடுகையில், இரோம் ஷர்மிளாவின் அரசியல் அனுபவம் குறைவே! ஒருவேளை, இதனை உணர்ந்தே தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ஷர்மிளா, “மக்கள் எனக்கு ஆதரவு தரவில்லை " என்றார்.

16 ஆண்டு போராட்டம் கற்றுக்கொடுக்காத பாடங்களா, இந்த தேர்தல் கற்றுத்தர போகிறது? ஆனால், கற்றவேண்டியவர்கள் இரோம் ஷர்மிளாவா அல்லது மணிப்பூர் மக்களா என்பதை காலம் சொல்லும்!

- ஷோபனா ரூபகுமார்