Published:Updated:

பதவி விலகுவாரா ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்? சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

வெங்கட சேது.சி
பதவி விலகுவாரா ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்? சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
பதவி விலகுவாரா ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்? சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 9 பேர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரபத்ர சிங் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த 2009 முதல் 2012-ம் ஆண்டுவரை மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, ஆறு கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்தாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் மீது, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்அவரைக் கைது செய்வதற்கு இமாச்சலப் பிரதேச நீதிமன்றம் விதித்திருந்த தடையையும் டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று  கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ. சார்பில் நேற்று வீரபத்ர சிங் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர் மீது, ஊழல் ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 220 பேரை சாட்சிகளாக, சி.பி.ஐ.,அறிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் நீண்டகாலமாக முதல்வராக பதவி வகித்து வரும் வீரபத்ர சிங்கிற்கு எதிரான இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தற்போது நீதிமன்றக்காவலில் உள்ள எல்.ஐ.சி முகவர் ஆனந்த் சவுகான் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வரைக் குறிவைத்து, சி.பி.ஐ, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை குலைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

வீரபத்ர சிங்கைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர். ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். மத்திய அமைச்சராவதற்கு முன், ஏற்கனவே முதல்வராக பதவி வகித்தவர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக தர்மசாலாவை,அண்மையில் இவர் அறிவித்தார். தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், அவர் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே, அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

-சி.வெங்கட சேது