Published:Updated:

சபாநாயகர் உத்தரவை ரத்து செய்த கிரண்பேடி! தகிக்கும் புதுச்சேரி

சபாநாயகர் உத்தரவை ரத்து செய்த கிரண்பேடி! தகிக்கும் புதுச்சேரி
சபாநாயகர் உத்தரவை ரத்து செய்த கிரண்பேடி! தகிக்கும் புதுச்சேரி

சபாநாயகர் உத்தரவை ரத்து செய்த கிரண்பேடி! தகிக்கும் புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்குமான அதிகார மோதலினால் நாள்தோறும் பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. 

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நாராயணசாமி பதவி ஏற்கும் முன்பே கிரண்பேடி புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இது புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பி.ஜே.பி அரசு வைத்த செக் என்று பேசிக்கொண்டார்கள். இப்போது நடக்கும் காட்சிகளைப் பார்த்தால் இது  உண்மைபோல்தான் இருக்கிறது.  

பதவியேற்ற நாள் முதல் கிரண்பேடி, "ரப்பர் ஸ்டாம்ப்" ஆக இல்லாமல் ”ஆக்டிவ்” கவர்னராக சுழல்கிறார். அதிகாரங்களை மீறி மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுகிறார் என்று நாராயணசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் அலறுகின்றனர்.  எனினும் சற்றும் மனம் தளராத கிரண்பேடி, "புதுச்சேரிக்கு நான்தான் நிர்வாகி" என்று கூலாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார். 

அவ்வப்போது, அதிகாரிகளுடன் கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார் கிரண்பேடி. சில தினங்களுக்கு முன்பு புகாரின் அடிப்படையில், முதலியார்பேட்டைத் தொகுதியில், சுதானா நகரில் ஆய்வு மேற்கொண்ட அவர் காலி மனைகளை சுத்தம் செய்யுமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். 

அதன்படி அந்தப் பகுதியின் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் நகராட்சி ஆணையர் சந்திரசேகர். அப்போது, அங்கு வந்த  தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரன், தனக்குத் தெரிவிக்காமல் எப்படி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாம் என்று ஏக  வசனத்தில் அர்ச்சனை செய்திருக்கிறார். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. 

இது குறித்து, சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஆணையர் மீது எம்.எல்.ஏ பாஸ்கர் உரிமை மீறல் புகார் கடிதத்தை அளித்தார். அதேபோல எம்.எல்.ஏ-வும் அவரது ஆட்களும் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணையர் சந்திரசேகர், காவல்துறை டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் கடந்த 30-ம் தேதி கூடிய சட்டப்பேரவையிலும் வெடித்தது. பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நகராட்சி ஆணையரைக் கடுமையாகக் கண்டனம் செய்து பேசினர். ”கவர்னரைத் திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யவேண்டும்” என்று தி.மு.க எம்.எல்.ஏ சிவாவும், மத்திய அரசு ஆளுநரைத் திரும்பப் பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்” என அரசு கொறடா அனந்தராமனும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இதன் பின்னர், நகராட்சி ஆணையர் சந்திரசேகர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.  இதனால், ஆவேசமடைந்த கிரண்பேடி டெல்லியில் இருந்து, “சிறப்பாகச் செயல்பட்டு கடமையைச் செய்த அதிகாரிக்கு என்ன நடந்திருக்கிறது, என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும், “நகராட்சி ஆணையர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது செல்லாது என்றும், அவர் ஆணையராகத் தொடர்வார்” என்றும் கிரண்பேடி சார்பில் தலைமைச்செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, தான் புதுச்சேரிக்கு திரும்பும் வரை  சபாநாயகர் தனது உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என தனது செயலர் மூலம் கடிதம் அனுப்பினார் கிரண்பேடி.

 ஆனால் இந்த உத்தரவில் கவர்னரின் கையெழுத்து இல்லை என்று சொல்லி அதை சபாநாயகர் திருப்பி அனுப்பியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்திருக்கிறது. 

இது தொடர்பாக ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு கிரண்பேடி வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறார். அதில், ”புதுச்சேரி நகராட்சி ஆணையர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரம்பு மீறியது. நான் டெல்லியில் இருக்கும்போது எனது உத்தரவு இன்றி ஆணையரைக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர். அவர் மீதுள்ள உரிமை மீறல் புகார் விசாரணையில் இருக்கும்போது, இரவு 11 மணிக்கு அவர் வீட்டின் சுவற்றில் இந்த உத்தரவு ஒட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாருக்கு விளக்கமளிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக என்னுடைய ஆலோசனைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலருக்கு தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் காத்திருக்கவில்லை. நன்றாக செயல்படும் அதிகாரியை தண்டித்தால் எப்படி புதுச்சேரியை முன்னேற்ற முடியும் ? இந்த நடவடிக்கை மற்ற அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த நடவடிக்கை நேர்மையானதாகத் தெரியவில்லை” என்று சொல்லி இருக்கிறார். 

அரசுமுறைப் பயனமாக டெல்லியில் இருக்கும் கிரண்பேடி புதுச்சேரிக்குத் திரும்பியதும் இந்த விவகாரம் தொடர்பாக பல அதிரடிகளை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

-ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

அடுத்த கட்டுரைக்கு