Published:Updated:

மும்பையில் உள்ள ஜின்னா பங்களா இடிக்கப்படுகிறதா?

மும்பையில் உள்ள ஜின்னா பங்களா இடிக்கப்படுகிறதா?
மும்பையில் உள்ள ஜின்னா பங்களா இடிக்கப்படுகிறதா?

மும்பையில் உள்ள ஜின்னா ஹவுஸை இடிக்க வேண்டும் என்று  அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பின் பிசினஸ் பார்ட்னரும் எம்.எல்.ஏவுமான லோதா வெளியிட்ட கருத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தெற்கு மும்பையில் மலபார் ஹில் பகுதியில் 'ஜின்னா ஹவுஸ்' அமைந்துள்ளது. இதனைச் சுற்றி 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. பிரிவினைக்கு முன், 'பாகிஸ்தானின் தந்தை ' முகமது அலி ஜின்னா கட்டிய  பங்களா இது. இந்த பங்களா அமைந்துள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த 1936-ல் ஜின்னா இந்த வீட்டைரூ.2 லட்சம் செலவழித்துக் கட்டினார். ஐரோப்பிய கட்டிடக் கலையில், கடலைப் பார்த்த வண்ணம் இந்த பங்களா கட்டப்பட்டிருக்கும். பங்களா முழுவதும் இத்தாலி மார்பிள்கள் இழைக்கப்பட்டிருக்கும்.முகமது அலி ஜின்னா, ரசித்து ரசித்து இதனைக் கட்டியதாகச் சொல்வார்கள். 

ஜின்னா அவரது மனைவி மரியம்ஆகியோர் இங்கு வாழ்ந்தனர். ஜின்னாவின் ஒரே மகள் தீனா இங்கேதான் பிறந்தார். 'பாம்பே டையிங்' நிறுவனத் தலைவராக இருந்த நெவிலி வாடியாவுக்கும் தீனாவுக்கும் காதல். மகளின் காதலுக்கு ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பார்சி இனத்தைச் சேர்ந்த நெவிலி வாடியாவுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க ஜின்னா மறுக்க, தீனா தன் முடிவில் உறுதியாக இருந்தார். தந்தையை மீறி,  தீனா நெவிலி வாடியாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் 'பாம்பே டையிங்' நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நுஸ்லி வாடியா. முகமது அலி ஜின்னா இவருக்கு தாய் வழி தாத்தா. 

நெவிலி வாடியாவை தீனா திருமணம் செய்ததும் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. பிரிவினைக்கு பிறகு முகமது அலி ஜின்னா, காராச்சியில் குடியேறி விட, தீனா, கணவருடன் இந்தியாவில் தங்கி விட்டார். அதன் பிறகு, ஜின்னா உயிருடன் இருந்த வரை மகளைப் பார்க்கவே விரும்பவில்லை. ஜின்னா, இறந்த பிறகே அவரது உடலுக்கு மரியாதை செலுத்த கராச்சி சென்றார் தீனா.

சுதந்திரத்துக்குப் பிறகு 1947ம் ஆண்டு கராச்சியில் நடந்த முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் பேசிய ஜின்னா, ''இப்போதும் நான் மும்பையை நேசிக்கிறேன். பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றாலும் என்னை இந்தியனாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால்மும்பை திரும்பி இந்திய குடியுரிமை பெற்று அங்கேயே வாழ விரும்புகிறேன்'' என்றும் குறிப்பிட்டார். ஆனால் 1947ம் ஆண்டு இந்தியா, நாட்டை விட்டு வெளியேறியவர்களின் சொத்துக்களை மதிப்பிட ஆரம்பித்தது. இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேரு, ஜின்னாவின் பங்களாவை நல்லலெண்ண அடிப்படையில் அப்படியே வைத்திருக்க உத்தரவிட்டார். கடந்த 1982ம் ஆண்டு வரை ஜின்னா ஹவுஸ் பயன்பாட்டில் இருந்தது. பிரிட்டனைச் சேர்ந்த தூதரக அதிகாரி குடும்பம் இந்த பங்களாவில் வசித்து வந்தனர். அவர்கள் வெளியேறிய பிறகு, ஜின்னா ஹவுஸ் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. 

தற்போது ஜின்னா ஹவுஸ் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனைப் பெறுவதற்கு தீனா வாடியா முயற்சித்தார். 'இந்து முறைப்படி, தான் திருமணம் செய்துள்ளேன். என் மகன் மும்பையின் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்து முறைப்படி, தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சொந்தம். எனவே ஜின்னா ஹவுஸை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் கடந்த 2006ம் ஆண்டுவழக்கு தொடர்ந்தார் தீனா. ஆனால், 1968-ல் இயற்றப்பட்ட 'The Enemy Property Act' சட்டத்தில், பாகிஸ்தானுக்கோ சீனாவுக்கோ வெளியேறிய இந்தியத் தலைவர்களின் சொத்துக்களை அவர்களது வாரிசுகள் யாரும் உரிமை கொண்டாட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கு முடிவு, தீனாவுக்கு சாதகமாக கிடைக்கவில்லை.

அப்படி, இந்தியாவில் சொத்துக்களை விட்டு விட்டு பாகிஸ்தான் சென்று குடியேறியவர்களின் சொத்து மதிப்பு தற்போது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம்  கோடி. முகமது அலி ஜின்னா கட்டிய இந்த பங்களாவைத் தங்களிடம் ஒப்டைக்குமாறும் அதனை தூதரக அலுவலகமாக பயன்படுத்த விரும்புவதாகவும் பாகிஸ்தான் அரசு  மத்திய அரசைக் கேட்டுப் பார்த்தது. மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. 

இந்த நிலையில், மகாராஷ்ட்ர மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவும் ரியல் எஸ்டேட் அதிபருமான மங்கல் பிரதாப் லோதா சட்டமன்றத்தில், ''ஜின்னா ஹவுஸ் நாட்டின் பிரிவினையின் அடையாளமாக இருக்கிறது. இந்த பங்களாவைப் பார்க்கும் போது நாட்டின் பிரிவினைக்கு சதி இங்கேதான் தீட்டப்பட்டது என்ற எண்ணமே எழுகிறது. எனவே, அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு, கலாசார மையமாக மாற்ற வேண்டும்.'' என பேசினார். இந்த மங்கல் பிரதாப் வேறு யாருமல்ல. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பிசினஸ் பார்ட்னர்தான். மும்பை ஒர்லி பகுதியில் 'லோதா ட்ரம்ப் டவர்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒரு வீடு 9 கோடி ரூபாய்.

லோதாவின் கருத்து குறித்து  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நஃபீஸ் சகாரியா கூறுகையில், ''பாகிஸ்தானை தோற்றுவித்தவரின் சொத்து அது. உரிமையாளருக்கான உரிமை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அரசியல்வாதியுமான இம்ரான்கான் ''இப்படி ஒரு கோரிக்கை எதிர்பாராதது; கட்டிடத்தை இடிப்பதால் வரலாற்றை மாற்றி விட முடியாது என்பதை இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்'' என கருத்து தெரிவித்துள்ளார். 

-எம்.குமரேசன்