Published:Updated:

சுயதேர்வின் ஊடாக இந்திய மக்களுக்கு சுயமரியாதையை கற்பித்தவர்... காந்தி அரையாடையின் நூற்றாண்டு!

காந்தி எனும் ஆளுமையுடன் தமிழகத்திற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அவருடைய தனி வாழ்விலும், அதன் எதிரொலியாக இந்திய விடுதலை வரலாற்றிலும் பல திருப்புமுனையான நிகழ்வுகளில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே காந்தியைப் புகழ்ந்து பாரதி எழுதினார். பாலசுந்தரம் எனும் தமிழக புலம்பெயர் ஒப்பந்தக் கூலியின் வழக்கை தென்னாப்பிரிக்காவில் கையில் எடுத்தார் காந்தி. அதன்வழியாக காந்தி அடித்தள வெகுமக்களின் வாழ்க்கைப் போராட்ட களத்திற்கு நுழைந்தார். தமிழின் எழுத்துருக்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் அளவிற்கு அவருக்கு தமிழ் பரிச்சயம் உண்டு. பயணங்களிலும் சிறைவாசத்திலும் தொடர்ந்து தமிழறிவை வளர்த்துக்கொள்ள முற்பட்டார்.

தமிழகம் எப்போதும் காந்தியைத் தம்மவராகவே கருதிவந்துள்ளது. செப்டம்பர் 22, 2021 அன்றுடன், காந்தி தனது முழு ஆடையை துறந்து அரையாடைக்கு மாறிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு முடிந்து நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை இன்றைய காலத்திலிருந்து திரும்பி நோக்க இது ஒரு தருணம்.
மதுரைக்கு ரயிலில் வந்திறங்கும் காந்தி
மதுரைக்கு ரயிலில் வந்திறங்கும் காந்தி

1921ம் ஆண்டு இந்திய தேசிய விடுதலை வரலாற்றில் எழுச்சி மிகுந்த ஆண்டு. கிலாபத் இயக்கம், ஒத்துழையாமைப் போராட்டம் என மக்களைத் திரட்டும் முயற்சியில் காந்தியும் இந்திய தேசிய காங்கிரஸாரும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முனைப்புடன் செயல்பட்டனர். இத்தகைய பரபரப்பான சூழலில் காந்தியின் தமிழகப் பயணம் நிகழ்கிறது. அந்நியத் துணிக்கு எதிரான போராட்டம் சூடுபிடித்த சூழலில், 'கதர் எங்களுக்குப் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே அந்நியத் துணியைப் புறக்கணிக்க முடியாது. தொடர்ந்து அதை சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது' என்று பலரும் காந்தியிடம் முறையிட்டார்கள்.

முழு இந்திய உடையில் தலைப்பாகையுடன் முதல் நாள் காட்சிகொடுத்த காந்தி, மறுநாள் இடுப்பில் சுற்றிய வேட்டியுடன் மேற்சட்டையும் தலைப்பாகையும் இல்லாமல் காட்சி கொடுத்தார். 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியை மேற்கோள் காட்டும் அ.ராமசாமி, காந்தி இந்த முடிவை எடுத்தபோது முதலில் தற்காலிகமாக இந்தக் கோலத்தைப் பூணுவது எனும் முடிவில் இருந்ததாக அறிகிறோம். காந்தி தன்னையே ஊடகமாகச் சமைத்துக்கொண்டவர். தனது இந்தக் கோலம் ஒரு மகத்தான செய்தியை கதருக்கு ஆதரவாகக் கொண்டு செல்லும் என கருதினார். 'ஆடைப் பற்றாக்குறை என்றால் அரையாடை மட்டுமே போதும். அந்நிய ஆடை தேவையில்லை' என்பதே செய்தி. காந்திக்கு எப்போதும் இந்த முன்னுதாரணத் தன்மை உண்டு. தன்னால் நடைமுறையில் பின்பற்ற முடியாத எதையும் அவர் பொதுவில் பரிந்துரைப்பதில்லை.

தூங்காநகர நினைவுகள் - 19: மதுரைக்கு வந்த ரயில்!

காந்தியின் அரையாடைக் கோலம் ஒரு நொடியில் எடுக்கப்பட்ட முரட்டு முடிவாகத் தோன்றலாம். ஆனால், அவருடைய அதுவரைக்குமான வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு இது இயல்பான ஒன்றாகவே தோன்றும். இங்கிலாந்துக்குக் கல்வி கற்கச் சென்றபோது தானொரு ஆங்கில கனவானாகவே ஆக வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், தன்னால் அப்படி ஆங்கில கனவானாக முடியாது என்பதை உணர்ந்து அத்தகைய முயற்சிகளைக் கைவிடுகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு பாரிஸ்டராக சென்று சேரும் காந்தி, அப்போது உயர்தர சூட்களை அணிந்துதான் செல்கிறார். ஆடை ஒருவரின் சமூகப் படியின் குறியீடு. 'தான் கற்றவன், மற்றைய சராசரி இந்தியன் அல்லது கறுப்பன் அல்ல, ஆகவே ஆங்கிலேயருக்குச் சமானமாக தன்னை நடத்தவேண்டும்' எனும் உட்பொருளைக்கொண்டது.

மதுரை மேல மாசி வீதியில் காந்தி கதர் உடைக்கு மாறிய வீடு
மதுரை மேல மாசி வீதியில் காந்தி கதர் உடைக்கு மாறிய வீடு

ஆனால், அங்கு காந்தி தொடர் அவமானங்களை எதிர்கொள்கிறார். 'நீ பாரிஸ்டராக இருக்கலாம். ஆனால் நீயொரு கூலி இந்தியன் மட்டுமே' என்பது அவருக்குப் பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகிறது. ஒப்பந்தக் கூலிகளுடன் தொடர்பு ஏற்பட்டதும் காந்தியிடம் முதல் மாறுதல் ஏற்படுகிறது. தன்னை அவர்களுடைய பிரதிநிதியாகக் கருதினார். மனத்தடை நீங்கி அவர்கள் அவரை நெருங்க வேண்டும் என்றால், 'தன்னையொத்த ஒருவன் இவன்' எனும் நம்பிக்கை வரவேண்டும். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த பெரும் ஊர்வலத்தில், ஒப்பந்தக் கூலிகளின் உடை எதுவோ அதையே தனது ஆடையாக வரிந்துகொண்டார். கையில் ஒரு கைத்தடியும், தலையில் குடுமியும், சாதாரண ஒற்றைச்சுற்று வேட்டியும் மேற்சட்டையும் அணிந்து ஊர்வலத்தில் பங்குகொண்டார்.

காந்தி கதர் உடைக்கு மாறிய கட்டடத்தில் உள்ள அறிவிப்பு பலகை
காந்தி கதர் உடைக்கு மாறிய கட்டடத்தில் உள்ள அறிவிப்பு பலகை
இந்தியா திரும்பிய அவர், சாமானியர்களின் ஆடையையே அணியலானார். மதுரையில் முழு ஆடை துறந்து முழத்துண்டுக்கு மாறுவதற்கு முன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த முடிவை நோக்கி அவர் மனம் உந்தியது.

குல்னாவில் மக்கள் பஞ்சத்தில் இறந்து கொண்டிருக்கும்போது அந்நிய உடைகளை எரிக்கச்சொல்வது நியாயமா என்றொரு கேள்வியை அஸ்ஸாம் பயணத்தில் எதிர்கொண்டார் காந்தி. தொப்பியையும் மேற்சட்டையையும் குல்னாவிற்கு அனுப்பலாமா என்றொரு யோசனை எழுந்தது. அதில் தற்பெருமை கலந்திருந்ததாக எண்ணியதால் அதைக் கைவிட்டார். கிலாபத் இயக்கத்தின் முக்கிய ஆளுமையான முகமது அலி கைதுசெய்யப்பட்ட பின்னர் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது, சட்டையையும் குல்லாவையும் கழற்றிவிட வேண்டும் எனும் உந்துதல் ஒரு கணம் எழுந்து அடங்கியது. 'வெற்று பரபரப்புக்காகச் செய்யப்பட்டது இது' எனக் கருதக்கூடும் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி - ஊறும் வரலாறு - 2: காந்தி வந்தார், மாநகரின் வரலாற்றில் நிறைந்தார்!

காந்தியின் உள்ளிருக்கும் ஒரு குரல் இந்த முடிவை நோக்கி அவரை படிப்படியாக நிர்பந்தித்ததை, அவரைத் தயார்படுத்தியதை இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன. காந்தியால் அந்தர்யாமி எனச் சொல்லப்படும் அக்குரல் 'உள்ளிருந்து ஒலிக்கும் சன்னமான குரல்' என அவரால் சுட்டப்படுகிறது. காந்தி அக்குரலுக்குக் கட்டுப்பட்டவர். அதை ஒருபோதும் மீறியவர் அல்ல. பகுத்தறிவைக் கொண்டு அக்குரலுடன் முட்டி மோதி அதற்கு செவிசாய்ப்பதைத் தள்ளிபோட முயன்றதுண்டு. ஆனால் அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

'அரையாடை பக்கிரி' என சர்ச்சில் இழித்துரைக்க ஏதுவாக, வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்றார் காந்தி. உடலுக்குப் போர்த்த ஒரு துண்டுடனும் அரையில் சுற்றிக் கட்டிய வேட்டியுடனும் சென்று சேர்ந்து இந்திய மக்களின் பிரதிநிதியாக பேரரசரையும் இளவரசரையும் சந்திக்கிறார். 'இந்தக் கோலத்தில் அரசரை சந்திக்க வெட்கமாக இல்லையா திரு. காந்தி' எனக் கேட்கப்பட்டபோது, 'எனக்கும் சேர்த்து அரசர் ஆடை அணிந்துள்ளார்' எனக் கேலியாக பதிலுரைத்தார். அது வெறும் கேலியல்ல. ஏகாதிபத்தியத்தின் செயல்முறையை எளிதில் விளங்க வைப்பதற்கான குறியீடும் கூட!

காந்தி இந்த ஆடைவழியாக துறவியாகத் தென்பட்டார் என்பது ஒரு முழுமையான புரிதல் அல்ல. 'இந்திய மண் துறவிகளை வணங்கும் மண். ஆகவே அவர் செல்வாக்கடைந்தார்' என அம்பேத்கரை இதற்கு எதிர் துருவத்தில் நிறுத்தி வாதிடுபவர்கள் உண்டு. துறவியாகவும் புனிதராகவும் காந்தி பார்க்கப்பட்டார் என்பது உண்மையே. அவரிடம் அற்புத சக்திகள் இருப்பதாகக் கூட சாமானிய இந்திய மனம் நம்பியது. ஆனால் அவர் உண்மையில், மையம் எதிர் விளிம்பு எனும் கற்பிதத்தை தலைகீழாக்கினார் என்பதையே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. விளிம்பை மையமாக்குவதன் வழி அவர் அந்த இருமையைக் கடக்க முயன்றார்.

எல்லோராலும் கர்சன் பிரபுவாக ஆக முடியாது; ஆனால் கர்சன் பிரபுவும் கூட இந்திய விவசாயியாக ஆகலாம். அதற்குத் தடையாக இருப்பது இழிவு, உயர்வு, புனிதம், தீட்டு போன்ற எதிரீடுகள். காந்தி தன்னை தோட்டியாக அறிவித்து கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்றியதன் வழி இந்த எதிரீடுகளைத் தகர்க்க முயன்றார் என்பதே உண்மை.
காந்தி, நேதாஜி
காந்தி, நேதாஜி

சுயதேர்வின் ஊடாக இந்திய மக்களுக்கு சுயமரியாதையின் நிமிர்வை காந்தி உணர்த்தினார். இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் வறுமைக்கும் இன்னல்களுக்கும் இந்த ஆடைத் தேர்வு வழியாக தானும் பொறுப்பேற்பதாக, பங்கேற்பதாக அறிவிக்கிறார். தன் ஒவ்வொரு செயலினாலும் கடைக்கோடியில் இருப்பவருக்கு ஏதேனும் பலன் விளையுமா என்பதையே உரைகல்லாகக் கொண்டவர் காந்தி. அவரை இயக்கிய விசையும் அதுவே. அத்தகைய கருணையும் பொறுப்பும் மிக்க தலைவர்கள் நமக்கு மீண்டும் வாய்க்கட்டும்.

- சுனில் கிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு