Published:Updated:

`பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று நான் நம்பவில்லை '- பர்வீன் சுல்தானா நேர்காணலில் திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
News
தொல்.திருமாவளவன்

அடுத்து ராமசாமி என்ற என் தந்தையின் பெயரை தொல்காப்பியன் என மாற்றலாம் என்று முடிவு செய்தேன். அப்போது என் தந்தை எங்கிருந்தார் என்று கூட எனக்கு தெரியாது.

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திரு.தொல். திருமாவளவனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அனைவரது வாழ்க்கையிலும் தந்தைதான் மகனுக்கு பெயர் சூட்டிக் கேள்விப்பட்டுள்ளோம் . ஆனால் நீங்கள் உங்கள் தந்தைக்கு புதிதாக பெயர் சூட்டி உள்ளீர்கள். அதை அவர் எப்படி எதிர்கொண்டார்?

உண்மையில் அது குறித்து நான் என் தந்தையிடம் ஆலோசிக்கவே இல்லை. மதமாற்று தடை சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்திய நேரம். ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் இன்னல்களில் இருந்து விடுபட இருந்த ஒரே வழி மதம் மாறுவது தான். இதையும் செய்யவிடாமல் கடைசிவரை நீ இவற்றை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்வது போன்றிருந்தது அச்சட்டம்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இதனால் அதற்கு எதிராக ஒரு திட்டத்தை செயல்படுத்த எண்ணினேன். நம்முடைய பெயர்களையெல்லாம் இன்று சுமந்திருப்பதால் தானே ஒரு மத அடையாளத்தோடு பார்க்க தோன்றுகிறது. எனவே இப்பெயர் தூக்கியெறிந்துவிட்டு எந்த அடையாளத்தையும் குறிக்காத தமிழ் பெயரினை சூட்டலாம் என்று முடிவெடுத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பெயரை எடுத்துக்கொண்டால் திருமால் என்றால் கடவுளை குறிக்கிறது இதே திருமாவளவன் என்றால் அப்பெயர் வேறெதையும் குறிப்பிடுவதில்லை. இதன்படி “இந்து பெயர்களை மாற்றுவோம், இனிய தமிழ் பெயர்களை சூட்டுவோம்” என்ற முழக்கத்தோடு ஐயாயிரம் பெயர்களை மாற்றுவது என்று அறிவித்து ஓர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அப்போது மேடையில் அமர்ந்திருக்கையில் என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. என் சொல்லிற்காக அத்தனை தோழர்களும் தங்கள் பெற்றோர் சூட்டிய பெயர்களை மாற்றப்போகிறார்கள், இதற்கு முதல் படியாக என் குடும்பத்தில் உள்ள இந்து பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றுவோம் என்று முடிவுசெய்தேன்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

பானுமதி என்ற என் அக்கா பெயரை வான்மதி என்று முதலில் மாற்றினேன். அடுத்து ராமசாமி என்ற என் தந்தையின் பெயரை தொல்காப்பியன் என மாற்றலாம் என முடிவு செய்தேன். அப்போது என் தந்தை எங்கிருந்தார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் இத்திட்டத்தை என் குடும்பத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்ற முடிவோடு இவர்கள் பெயரை அறிவித்துவிட்டுதான் மற்றவர் அடங்கிய பெயர் பட்டியலை வாசிக்க தொடங்கினேன்.

இது பற்றி என் தந்தையிடம் பிறர் தெரிவித்தபோது புதிய பெயரினை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் அவர். நான் என்ன முடிவு எடுத்தாலும் சரியாகவே இருக்கும் என்று முழுமையாக நம்பி தான் இறக்கும் வரை தொல்காப்பியன் என்ற பெயரை கடைசிவரை சுமந்தார்.

ஈழத்தை பற்றி உணர்வுபூர்வமாக பேசும் மனிதர் நீங்கள். பிரபாகரன் இன்று உயிரோடு இருக்கிறாரா இல்லையா ?

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படி அவர் உயிரோடு இருந்தாலும் எந்த பயனும் இல்லை என்றே நான் நினைக்கிறன். இது என் தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், தப்பித்த ஓடக்கூடிய உளவியலை கொண்டவர் அல்ல அவர். தன் இன மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க தான் மட்டுமே தப்பித்து தன் மக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் நிச்சயம் இருந்திருக்காது. நூறு சதவிதிகம் தன் மக்களுடனே கடைசி வரை இருந்திருப்பார் பிரபாகரன்.

அவர் தற்போது இருக்கிறாரா இல்லையா என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் கிடையாது. ஆனால் அவரை நன்கு அறிந்தவன் என்ற முறையில், அவரின் ஆழ்மனதைக்கூட புரிந்துக்கொள்ளக் கூடிய அளவில் அவரிடம் மணிக்கணக்கில் உரையாடியவன் என்ற முறையில் அவர் தப்பித்து சென்று பதினோரு வருடங்களாக மௌனித்து இருக்கிறார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!