Published:Updated:

எங்கள் ஊர் திருக்குவளை!

கலைஞர் கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கலைஞர் கருணாநிதி

அரசியல், இலக்கியம், பத்திரிகைத்துறை, நாடகம், சினிமா போன்ற துறைகளில் கோலாச்சி பல்துறை வித்தகராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. தனது சொந்த ஊரான திருக்குவளை பற்றி கலைஞர் வடித்த கவிதை இது.

எங்கள் ஊர் திருக்குவளை!

அரசியல், இலக்கியம், பத்திரிகைத்துறை, நாடகம், சினிமா போன்ற துறைகளில் கோலாச்சி பல்துறை வித்தகராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. தனது சொந்த ஊரான திருக்குவளை பற்றி கலைஞர் வடித்த கவிதை இது.

Published:Updated:
கலைஞர் கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
கலைஞர் கருணாநிதி
எங்கள் ஊர் திருக்குவளை!

நினைக்கிறேன்; இனிக்கிறது -
நெஞ்சமெலாம் மணக்கிறது!

பிஞ்சாக அரும்பிக் கொஞ்சித் தவழ்ந்தேனே அந்த என் பிறந்த மண்ணை - திருக்குவளையை -

நினைக்கிறேன்; இனிக்கிறது -
நெஞ்சமெலாம் மணக்கிறது!

ஞ்சத்தின் பரம வைரியே தஞ்சை மாவட்டம்.

வஞ்சிக்கொடிபோல வளைந்தோடும் பொன்னியினால், 'வளம்’ என்னும் சொல்லுக்கே வளமான பொருள் வழங்கும் களமாகத் திகழ்வதே தஞ்சைத் தரணி.

நஞ்செய் கொழிக்கும் அது, 'நெற் களஞ்சியம்’ மட்டுமல்ல; இலக்கியப் புலவர் பலரைப் பெற்றெடுத்த 'சொற்களஞ்சியம்’ மட்டுமல்ல; ஆயகலைகள் அறுபத்து நான்கினுக்கும் தாயகமாய்த் திகழும் 'கலைக்களஞ்சிய’மும் ஆகும்.

சோழரின் வீரம் மணக்கும் அந்தச் சுந்தர பூமியில் திருவாரூருக்குத் தென் கிழக்கே பதினைந்து கல் தொலைவில் உள்ளது எங்கள் ஊர்.

அந்த நாளில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில் கச்சணம் என்னும் ஊரில் பேருந்தைவிட்டு இறங்கி நாலைந்து மைல்கள் நடந்தால் எங்கள் ஊரை எட்டிப்பிடிக்கலாம்.

இப்போது திருவாரூரில் இருந்து எட்டுக்குடி செல்லும் வழியிலேயே எங்கள் ஊர் இருக்கிறது; எளிதாகப் போய் இறங்கலாம்.

முப்பது ஆண்டுகளுக்குள்ளேதான் எத்தனை எத்தனை மாற்றங்கள் - திருப்பங்கள் - முன்னேற்றங்கள்!

'அழகு சிரிக்கிறது!’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

எங்கள் திருக்குவளையில் சிரிக்கும் அழகு முழுதும் இப்போது என் விழி முன்னே படமாக விரிகிறது.

பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என மரகதக் கம்பளத்தைப் பரப்பியிருக்கும் நஞ்செய்க் கழனிகள், அவற்றைத் தழுவிச் சலசலக்கும் சின்னஞ்சிறு வாய்க்கால்கள், குரல் தளர்ந்துவிட்ட கிழவன் கூழ் குடிப்பதுபோல் 'களக்கு... களக்கு...’ என்று அவை எழுப்பும் இனிய ஓசைகள்...

அந்தச் சங்கீத நிரவலைக் கேட்டுச் சதிராட வெளியே வந்து, பட்டிக்காட்டுப் பாமரத்தனத்தோடு ஓடி ஒடுங்கும் வயல் நண்டுகள், அவற்றைப் பார்த்து இளக்காரமாக, இள நங்கையர்களின் விழிகளெல்லாம் இறங்கி வந்து எகிறிக் குதிக்கின்றனவோ என்று எண்ணும்படி வாய்க்கால் நீருக்குள் எதிர் நீச்சலடித்துப் பாயும் கெண்டைக் குஞ்சுகள், வயல்களை ஒட்டி ஆங்காங்கே 'குத்தல்’ வேலையைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத மனிதர்களைப் போன்ற முட்கள் செறிந்த கருவேல மரங்கள், ஒரு மைல் தொலைவில் உள்ள காருகுடிக்குப் போகும் வழியில் 'பட்டாணி’ என்னும் துஷ்ட தேவதையின் அரண்மனையாய்ச் சூழ்ந்து அச்சுறுத்தும் அடர்ந்த மரக் காடு, அதே சமயம், நன்றியுணர்வை நன்றாக விளக்க, அவ்வைக்குக் கிட்டிய அருமையான உவமையாம் தென்னை மரங்கள், தேன்கனிச் சோலைகள்...

இப்படியாக, எங்கள் ஊரின் வெளியே சிரிக்கும் புற அழகையெல்லாம்

நினைக்கிறேன்; இனிக்கிறது!
நெஞ்சமெலாம் மணக்கிறது!

'திரு’ என்னும் சொல்லுக்கு அழகு - பொருள் - புகழ் - பூமகள் என்று ஆயிரமாயிரம் விளக்கங்களை அள்ளிப் பொழிவார்கள் தமிழ்க் கடலில் முத்தெடுக்கும் சான்றோர்கள். 'குவளை’ என்பது தோகையரின் விழிகளை வம்புக்கு இழுக்கும் ஒரு மலர் என்பர்.

இந்த இரண்டு இனிய சொற்களே எங்கள் ஊரின் எழிலை இப்போது பறைசாற்றினாலும், தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் தம் பாடலிலே எங்கள் ஊரைச் சம்பந்தப்படுத்தி வைத்திருப்பது 'திருக்கோளிலி’ என்னும் பெயரால்தான்.

ஆன்மிகவாதிகளின் கூற்றுப்படி எங்கள் ஊர் 'பாடல் பெற்ற தலம்.’ என்னைப் பொறுத்தவரை, என் அருமைத் தந்தையாரின் 'பாடல் பெற்ற’ தலமும் ஆகும் அது!

ஆம்; என் தந்தையார் கவிதைகள் எழுதுவார். சுவையழுகும் சொல்லடுக்குகளால் ஏழைகளின் இதயம் அழும் காட்சிகளை எல்லாம் என் தந்தை கவிதை வடிவில் ஆக்கி எல்லோரையும் களிப்பித்திருக்கிறார்.

'இந்தக் கொடுமை செய்தால்
ஏழைகள் என்ன செய்வோம்?
இனி பொறுக்க மாட்டோம்
ஈட்டியாய் வேலாய் மாறிடுவோம்!’

என்பது அவரது பாட்டுத் திறனுக்கோர் 'பதச் சோறு’!

அவர் தூண்டில் போட்டு மீன்கள் பிடிக்கும் சோலை சூழ்ந்த திருக்குளம், அந்தத் திருக்குளத்தை ஒட்டிய கம்பீரமான சிவன் கோயில், அங்கிருந்து இழைந்துவரும் மங்கல மணியோசை, தெற்கு எல்லையில் புரவிகள் புடை சூழ்ந்த ஐயனார் கோயில், மேற்கு எல்லையிலே முனியன் கோயில்... உலகை அறிந்த மனிதரான பின்னும் தரையிலே புரண்டு களித்தாராமே பாரதி, அவரைப்போல் - ஆனால் அறியாப் பருவத்திலேயே நான் புரண்டு தவழ்ந்த புழுதி மெத்தையான எங்கள் தெரு, அதன் கோடியிலேயே என் அப்பாவுக்குக் கோழிக்கறியின் மீது மோகம் பிறக்கும்போது எல்லாம் 'படையல்’ வாங்கிக்கொள்வதோடு, என் தலைமுடியையும் அடிக்கடி கருணையோடு காணிக்கையாக வாங்கிக்கொள்ளும் அங்காளம்மன் கோயில், அந்தக் கோயிலை அடுத்துள்ள நான் வணங்கும் உண்மையான அறிவாலயமான - நான் 'அகர முதல எழுத்தெல்லாம்’ முதன்முதல் பயில முயன்ற - அந்தத் தொடக்கப் பள்ளி, படிக்கும்போதே, அர்ச்சுனன், கிருஷ்ணன் என்று வேடங்கள் தரித்து, நான் நாடகங்களை அரங்கேற்றி மகிழ்ந்த எங்கள் வீட்டு மாட்டுத்தொழுவம்...

இன்னும் என்னென்ன எல்லாமோ எங்கள் ஊரைப் பற்றிய காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும்

நினைக்கிறேன்; இனிக்கிறது!
நெஞ்சமெலாம் மணக்கிறது!

எங்கள் ஊர் திருக்குவளை!

பிறந்த மண் -

கறந்த பாலின் புதுச் சுவையைவிட மேலான ஓர் இனிமையை இதயத்திலே மிதக்கவிடும் ஒரு பேராற்றல் அதற்கு இருக்கத்தான் இருக்கிறது!

நான் குடியிருந்த கோயிலாம் என் அன்னையை எப்படி என்னால் மறக்க முடியாதோ அப்படித்தான் மழலைக் குழந்தையாக இந்த மண்ணகத்திலே முதன்முதல் நான் அடி வைத்த கோயிலையும் என்னால் மறக்க முடியாது.

எப்படி முடியும்? எவரால் முடியும்?

அழகு சிரிக்கின்ற, என் இளமைக் கனவுகளுக்கு எல்லாம் அரங்கமாய் அமைந்திருந்த, அந்த என் பிறந்த மண் - திருக்குவளை - என்றென்றும் என் நெஞ்சில் இனித்துக்கொண்டே இருக்கும்!

ன்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் எப்படி ஒவ்வொருவனும் கடமைப்பட்டு இருக்கிறானோ அப்படித்தான் தன்னைப் பெற்ற மண்ணுக்கும் ஒவ்வொருவனும் கடமைப்பட்டு இருக்கிறான்.

அந்த அரிய நன்றி உணர்வோடுதான் பேரறிஞர் அண்ணா அவர்களின் அடிச்சுவட்டில் தாயகத்தின் வறுமையை ஒழித்து, வளமையைப் பெருக்க, மானத்தைக் காத்து, மாட்சியைப் பரப்ப திராவிட முன்னேற்றக் கழகம் அயராது பாடுபட்டுவருகிறது.

இதே தாயகப் பற்றோடு என் பிறந்த மண்ணுக்குத் தனிப்பட்ட முறையில் நானும் ஏதாவது செய்ய வேண்டாமா?

என் தாய்க்கு அடுத்தபடியாக என்னைத் தாங்கிக் கரைந்த எங்கள் பழைய வீடு முழுகிப்போன நிலையில், தருமபுர ஆதீனத்தாரிடம் பணம் கொடுத்து அந்த இல்லத்தை மீட்டுள்ளேன்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே 'அஞ்சுகம் - முத்துவேலர் தாய் சேய் நல விடுதி’யை என் சொந்தச் செலவில் திருக்குவளையில் கட்டிக்கொடுத்துள்ளேன்.

அடுத்து, ஓர் உயர்நிலைப் பள்ளி அங்கே விரைவில் அமைவதற்கு எல்லா ஏற்பாடுகளும் உருவாகிவிட்டன.

அந்தச் சின்னஞ்சிறு ஊருக்கு இன்னும் என்னென்னவோ செய்ய வேண்டும் என்னும் ஆசை பீறிடுகின்றது ஊற்றுபோல.

ஆனால், கடமையின் வலிய கரங்களுக்கு இடையே சிந்திக்க ஓய்வு கிட்டும் சிறு சிறு விநாடிகளில் எல்லாம் என் பிறந்த மண்ணைப் பற்றி எண்ணுகிறேன்; அடிக்கடி அங்கே போக முடியவில்லையே என ஏங்குகிறேன்; தொழுகிறேன்!

ஆம்; அழகு கொழிக்கும் அந்த வளமான என் பிறந்த மண்ணை - திருக்குவளையை - மீண்டும் மீண்டும்

நினைக்கிறேன்; இனிக்கிறது!
நெஞ்சமெலாம் மணக்கிறது!

(19.04.1970 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)