Published:Updated:

மிஸ்டர் கழுகு: கரூர் டு ஆந்திரா ரகசியப் பயணம்... செந்தில் பாலாஜியை நெருக்கும் அமலாக்கத்துறை!

டெல்லி மேலிடத்தின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அவர்மீதான வழக்கு ஒன்று மதுரை அமலாக்கத்துறையில் விசாரிக்கப்பட்டுவந்தது.

பிரீமியம் ஸ்டோரி

திடீரென்று பவர் கட். சரி... காலார நடக்கலாம் என்று வெளியே போய்விட்டு அறைக்குள் திரும்பினோம். பவர் சப்ளை வந்து இருட்டாக இருந்த அறைக்குள் வெளிச்சம் பாய... சீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்த கழுகாரைப் பார்த்து ஜெர்க் ஆனோம். “எப்போது வந்தீர்கள், எப்படி வந்தீர்கள்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டு முடிக்கும் முன்பே... “நான் வந்தது இருக்கட்டும்... சென்னையில் நடந்த முதல்வர் நிகழ்ச்சியிலேயே கடைசி நேரத்தில் ஆஜராகி அனைவரையும் ஜெர்க் ஆக்கியிருக்கிறார் அந்த வி.வி.ஐ.பி” என்றபடி செய்திகளை விவரிக்கத் தொடங்கினார் கழுகார்...

“நவம்பர் 20 அன்று கடந்த ஐ.பி.எல் போட்டியில் கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணிக்குப் பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழா அழைப்பிதழில் முதல்வர் ஸ்டாலின், சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், விழாவில் திடீர் என்ட்ரி கொடுத்தார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா. அவரைப் பார்த்ததும் பலருக்கும் சர்ப்ரைஸ் ப்ளஸ் அதிர்ச்சி. அழைப்பிதழிலேயே பெயர் இல்லாத ஜெய் ஷாவைக் கடைசி நேரத்தில் அழைத்து வந்தது சீனிவாசன்தானாம். விழாவிலேயே முதல்வர் குடும்பத்தினரையும் ஜெய் ஷாவுக்கு சீனிவாசன் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். ஏற்கெனவே, ‘மத்திய அரசுடன் தி.மு.க இணக்கமாகச் செல்கிறது’ என்று பேச்சு அடிபடும் நிலையில் ஜெய் ஷாவின் வருகை, முதல்வர் குடும்பத்தினருடன் அறிமுகம்... இவையெல்லாம் பலரையும் விழிவிரிய வைத்திருக்கின்றன. இதையடுத்து, ‘தி.மு.க அரசுக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படப்போகிறார் சீனிவாசன்’ என்றெல்லாம் தகவல்கள் றெக்கைகட்டிப் பறக்கின்றன!”

மிஸ்டர் கழுகு: கரூர் டு ஆந்திரா ரகசியப் பயணம்... செந்தில் பாலாஜியை நெருக்கும் அமலாக்கத்துறை!

“பறக்கட்டும்... பறக்கட்டும்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சிக்கல் என்கிறார்களே?”

“அப்படித்தான் தகவல் வருகிறது. டெல்லி மேலிடத்தின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அவர்மீதான வழக்கு ஒன்று மதுரை அமலாக்கத்துறையில் விசாரிக்கப்பட்டுவந்தது. ஹரிஷ் என்கிற அதிகாரிதான் அதை விசாரித்துவந்தார். நீண்ட மாதங்களாகவே வழக்கு தேக்கமடைந்து நிற்கவே... அமலாக்கத்துறை மேலிடம் இது பற்றி ரகசியமாக விசாரித்திருக்கிறது. அப்போதுதான், கரூர் டு ஆந்திராவின் சித்திரைதுர்கா பகுதிக்குச் சிலர் சென்று பேச்சுவார்த்தை நடத்திய தகவலை மோப்பம் பிடித்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரிக்கும் ஹரிஷின் சொந்த ஊரும் அதுதானாம். இதன் பின்னணியிலேயே அந்த வழக்கு தேக்கமடைந்ததாம்.”

“ஜெகஜாலக் கில்லாடிகளாக இருக்கிறார்களே!”

“விவகாரம் வெளியானவுடன் கடுப்பான அமலாக்கத்துறை மேலிடம் ஹரிஷை அந்த வழக்கிலிருந்து விடுவித்ததுடன், அவரிடம் விளக்கமும் கேட்டுள்ளது. வழக்கையும் சென்னை அமலாக்கத்துறைக்கு மாற்றிவிட்டனர். சென்னையில் கூடுதல் இயக்குநர் பொறுப்பிலிருக்கும் மகேஷ் என்பவர்தான் இனி செந்தில் பாலாஜி வழக்கை விசாரிப்பாராம். இது பற்றி அமலாக்கத்துறையில் கேட்டால், ‘மதுரையில் வழக்கு நடந்தபோது சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. வழக்கும் ஆமை வேகத்தில் சென்றது. தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டிருப்பதால் இனி விசாரணை சூடுபிடிக்கும். விரைவில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கில் அவரைக் கைதுசெய்யவும் முகாந்திரம் இருக்கிறது’ என்கிறார்கள்.”

“அரசுக்கு நிலங்களை வாங்கித் தருவது தொடர்பாக, கோட்டை வரை முணுமுணுப்பு எழுந்திருக்கிறதே?”

“ஆமாம். முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிலரால் சிக்கல்கள் வரத்தான் செய்கின்றன. அண்ணாநகர் பிரமுகர் ஒருவர்தான் இந்தச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே தி.மு.க தொடர்புடைய கட்டடம் ஒன்றையும் இவரது தரப்பே கட்டிவரும் நிலையில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதில் பெரிய அளவில் லாபம் பார்த்துவிட்டார்கள்; இதனால், அரசுக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று முதல்வரிடம் முணுமுணுத்திருக்கிறார்கள் சில சீனியர் அமைச்சர்கள். டென்ஷனான முதல்வர் தரப்பு, ‘யாராக இருந்தாலும் ஆக்‌ஷன் எடுங்கள்’ என்று அனல் கக்கியிருக்கிறதாம்.”

மிஸ்டர் கழுகு: கரூர் டு ஆந்திரா ரகசியப் பயணம்... செந்தில் பாலாஜியை நெருக்கும் அமலாக்கத்துறை!

வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே, “ஆக்‌ஷனா... ஆக்டிங்கா என்று போகப் போகத்தானே தெரியும்... அது இருக்கட்டும், அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன விசேஷம்?” என்றோம்.

“உமது சிரிப்பின் அர்த்தம் புரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றித்தான் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் அறிவித்த திட்டப் பணிகளெல்லாம் முடிந்துவிட்டனவா என்று கேட்ட முதல்வர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். அப்போது அமைச்சர்கள் சிலர், ‘மழை வெள்ள காலத்தில் தேர்தலை நடத்தினால், தேர்தல் முடிவுகளில் மக்களின் அதிருப்தி எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது. பொங்கலுக்குப் பிறகு தேர்தலை நடத்தினால், வெள்ள பாதிப்புகளையும் மக்கள் மறந்திருப்பார்கள்... கூடவே, பொங்கல் பரிசோடு நாம் மக்களைச் சந்திக்க வசதியாக இருக்கும்’ என்று சொல்ல... எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் முதல்வர்.”

“எதிர்முகாமான அ.தி.மு.க-விலும் ஆலோசனைக் கூட்ட அறிவிப்பு வந்திருக்கிறதே?”

“ஆமாம். நவம்பர் 24 அன்று சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பன்னீர், எடப்பாடி இருவருக்கும் பொதுவான நபர் ஒருவர் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் போன் செய்து, ‘கட்சி விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். கட்சிக்குத் தொடர்பு இல்லாதவர்களைப் பற்றிப் பேசக் கூடாது. இருவரின் கட்டளையும் இதுதான்...’ என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டாராம். தெற்கிலிருந்து வரும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ‘சசிகலா’ வெடியைப் பற்றவைக்கக்கூடும் என்ற தகவல் வந்ததாலேயே இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பாம்!” என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். சுவைத்துப் பருகியபடியே அடுத்த செய்தியை சொல்லத் தொடங்கினார்...

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

“நவம்பர் 24 அன்று திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வருகிறார். அவரது வருகையைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்கிறார்கள். ஏற்கெனவே நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் டெல்லி மேலிடத்தில் ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனத்தைவைத்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகளைப் பற்றி விசாரித்து லிஸ்ட் தயார் செய்தாராம் அண்ணாமலை. இன்னொரு பக்கம், மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகமும் டெல்லியில் ஒரு லிஸ்ட்டை நீட்டியிருக்கிறார். இரண்டையும் வைத்து புது லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்துவருகிறதாம் தலைமை. இந்த நிலையில்தான், அண்ணாமலை தரப்பும், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளருமான ரவி தரப்பும் எதிரும் புதிருமாக இருக்கின்றன என்கிறார்கள். ‘சட்டமன்றத் தேர்தலுக்கு கொடுத்த பணத்தைச் சிலர் ஏப்பம்விட்டுவிட்டார்கள்; இது தொடர்பாக ரவி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று பொருமுகிறது அண்ணாமலை தரப்பு. தவிர, ‘மேகதாது அணை விவகாரம், காவிரிப் பிரச்னை ஆகியவற்றில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் பிரச்னை தொடரும் நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ரவி, தமிழகப் பொறுப்பாளராக இருப்பது சரியாக இருக்காது’ என்பதும் அண்ணாமலை தரப்பின் வாதம். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* ஆளும் தரப்பு எம்.பி-யும், அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவரும் ‘சம்பந்தி’யான சுப நிகழ்ச்சிக்கு வாரிசு வி.ஐ.பி-க்கு வேண்டப்பட்ட ‘தெற்கு’ நடிகையும் வந்திருக்கிறார். நடிகையைப் பார்த்த ஆளும் புள்ளிகள், பவ்யமாக வணக்கம் வைத்தாலும், “இன்னுமா ‘நட்பு’ தொடர்கிறது” என்று முணுமுணுக்கவும் தவறவில்லை!

* சமீபத்தில் தமிழகம் முழுவதும் ‘டவுன்’ துறையில் பெரிய அளவில் இடமாற்றங்கள் நடைபெற்றன. இதில் துறையின் அமைச்சர் சிபாரிசு செய்த மூன்று அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்ட இடங்களை ஒதுக்கவில்லையாம் ‘பொன்னான’ அதிகாரி. கடுப்பான அமைச்சர் தரப்பு அந்த மூன்று இடங்களிலும் யாரையும் பதவியேற்கச் சொல்ல வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டது. “பொன்னானவரை சீக்கிரமே மாற்றுகிறேன் பார்...” என்று மீசையை முறுக்கியிருக்கிறார் அமைச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு