Published:Updated:

காங்கிரஸுக்கு எதிரான பிரணாப் முகர்ஜியின் புத்தகம்... சண்டையிடும் வாரிசுகள்!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி ( AP )

"நான் குடியரசுத் தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேவையான இடத்தில் தன் கவனத்தை (focus) இழந்துவிட்டது" என புத்தகத்தில் எழுதியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான் என்றாகிவிட்டது. அரசியல் தலைவர்கள் வாழும்போதும் சரி, மறைந்த பிறகும் சரி, அவர்களைச் சுற்றியும் இருக்கும் சர்ச்சைகள் ஏராளம். அவ்வகையில் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு (memoir) புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். 1969-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி-யாகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் இந்த ஐம்பதாண்டுகளில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், திட்டக் குழு துணைத் தலைவர், ஜனாதிபதி என இந்தியாவின் உயர் பதவிகளை வகித்தார்.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்தைப் பற்றிய நினைவுக்குறிப்பு புத்தகம் 'The Presidential Years' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகத்தின் சில பகுதிகளை (excerpts) புத்தக வெளியீட்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. ஏறத்தாழ ஒரு திரைப்படத்திற்கான டீஸர் போலத்தான் இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை வெளியிடுவதும். இது வெளியானதும், பிரணாப் முகர்ஜியின் மகனான அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவைக்குமாறு பதிவிட்டிருக்கிறார்.

அதில், "பிரணாப் முகர்ஜியின் மகன் நான். என்னுடைய தந்தையின் புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவையுங்கள், என்னிடம் முறையாக எழுத்து ரீதியாக அனுமதி பெறாமலே புத்தகத்தின் சில பகுதிகள் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. என் தந்தை இல்லாத இந்தச் சமயத்தில் அவர் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பாக ஒருமுறை அதை நான் முழுவதும் படிக்க விரும்புகிறேன். அவர் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பார். என்னுடைய எழுத்து ரீதியான அனுமதி பெற்ற பின்பே நீங்கள் புத்தகத்தை வெளியிட வேண்டும். இதுகுறித்து உங்களுக்கு விளக்கமான கடிதமும் எழுதியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மகன் மற்றும் மகளுடன் பிரணாப்
மகன் மற்றும் மகளுடன் பிரணாப்
ரேணுகா பூரி - இந்தியன் எக்ஸ்பிரஸ்

இதற்கு பிரணாப் முகரஜியின் மகளும், அபிஜித் முகர்ஜியின் சகோதரியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

"பிரணாப் முகர்ஜியின் மகள் நான்..." எனத் தன சகோதரரைப் போலவே பதிவைத் தொடங்கியிருக்கும் அவர், "என் சகோதரர் அபிஜித் என் தந்தையின் கடைசி புத்தகத்தை வெளியிடுவதில் எந்தக் குழப்பமும் ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். தந்தை மரணிப்பதற்கு முன் கடைசியாக எழுதிய புத்தகம் இது. இறுதியாக ஒருமுறை படித்து, அவர் கைப்பட திருத்திக்கொடுத்தப்பிறகுதான் புத்தகம் வெளியிடப்படுகிறது. அவரது விருப்பத்தை மீறி, அவர் விரும்பியதைச் செய்யாமலே தடுத்து, மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள யாரும் முற்பட வேண்டாம்" என எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தின் பெயரை 'The Presidential years' என்பதற்குப் பதிலாக 'The Presidential Memoirs' என தவறாக அவரது சகோதரர் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் பிரணாப் முகர்ஜி. எனினும், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இடதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக நின்றது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு ஒரு மாபெரும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர் இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. அவரது மகன் அபிஜித், மகள் ஷர்மிஸ்தா இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்திலிருந்து வெளியான சிறு பகுதியில் (Excerpt) காங்கிரஸ் பற்றிய பிரணாப் முகர்ஜியின் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டிருக்கிறது. அதில், "நான் குடியரசுத் தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேவையான இடத்தில் தன் கவனத்தை (focus) இழந்துவிட்டது" என எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிடுவது குறித்து பிரணாப் முகர்ஜியின் வாரிசுகள் இருவரும் வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் சண்டையிடுவது கவனம் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் பேசுபொருளாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு